கல்கியின் பொன்னியின் செல்வனை SSLC முடிப்பதற்குள் மூன்று முறை படித்து விட்டேன். பிரம்மதேசம் அத்தை வீட்டில் தங்கியிருந்த நேரங்களில் இரண்டுமுறை பின்னர் கோடம்பாக்கம் பெரியம்மாவின் வீட்டில். அங்கே பக்கத்து வீட்டில் குடியிருந்த பூங்குழலி அக்காவுடன் பொன்னியின் செல்வன் குறித்து அடிக்கடி நாங்கள் பேசியது இலக்கிய விவாதமா இல்லையா தெரியவில்லை! சிறுவயதின் நினைவாகப் பின்னர் வாங்கிய பொன்னியின் செல்வன் படிக்கப்படாமலேயே இன்னும் வீட்டில் இருக்கிறது.

தொடர் வாசிப்பு முன்னர் பிரமிப்பு தந்த விசயங்களை எளிதில் கடந்து விடுகிறது. சில நேரங்களில் சில நூல்களை நம்மால் படிக்கவே முடிவதில்லை. கோகுலம், அம்புலிமாமாவை ஐம்பது வயதில் ஆர்வமாக வாசிக்கும் குழந்தைமனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கல்கியின் சாதனை, அதிகம் வாசிக்கும் பழக்கம் இல்லாத தமிழர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க உதவியது. இன்று புதுமைப்பித்தனைக் கொண்டாடும் கூட்டம் அன்று இருந்திருந்தால் ஒருவேளை அவர் ஆயுள் கூட சற்று நீண்டிருக்கலாம். புதுமைப்பித்தனின் இலக்கியத்தரம் வேறு கல்கியின் தரம் வேறு என்பதைக் கண்டுபிடிக்க நூற்றுக்கணக்கான நூல்களை வாசித்துக் கடந்திருக்க வேண்டும்.

ஆங்கிலக் குழுக்களிலும் Literary groupகளில்
Stephen Kingன் புதிய நாவல் நன்றாக இருக்கிறது என்றால் முகம் சுளிப்பதும் திரில்லர் குரூப்களில் Jane Eyre பத்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை என்று சொல்வதும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இலக்கியம் மற்றும் Light reading இரண்டுக்குமுள்ள முக்கியமான வித்தியாசம் நம் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் முன்னது வேறுவேறு பரிமாணத்தைக் காட்டுவது போல் பின்னதால் முடிவதில்லை. வயது, அனுபவங்கள் பின்னதைப் புறம் தள்ளுவதும் முன்னதை வேறு கோணத்தில் காட்டுவதும் மொழிபேதமின்றி எல்லா நூல்களிலும் இருக்கும் அம்சங்கள்.

வாசிப்பின்பத்தை வழங்கும் எந்த நூலும் நல்ல நூலே. புதிதாக வாசிப்பை ஆரம்பிப்பவருக்கு இளஞ்செழியன் முகம் தெரியாத தீவில் ரதப்போட்டியில் கலந்து கொள்ளப் போவது எனக்கு எமிலி பிராண்டேயைப் படிக்கும் அதே மகிழ்ச்சியை அளிப்பதை நான் எப்படி எள்ளல் செய்ய முடியும்? அதே போல் பாலகுமாரன் தி.ஜாவைக் காப்பியடித்துத் தோற்றவர் என்று நான் சொல்லும் கூற்றை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம். இந்த நேரத்தில் நூற்று எட்டாவது முறையாகத் திரும்பவும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது, வாசிப்பு தனிப்பட்ட சுகானுபவம், அதற்கும் அறிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனக்குத் தெரிந்த மிகபுத்திசாலியான, மிக உயர்ந்த பதவியில் இருக்கும் பெண் Nicholas Sparks வகையறாக்களை இருபது வருடங்களுக்கு மேல் படித்துக் கொண்டிருக்கிறார். ஒருமுறை என்னிடம் இருந்த Catcher in the Ryeஐ எடுத்துப் போனவர் அவசரமாகத் திருப்பிக் கொடுத்துவிட்டார். அவர் கொடுக்கும் போது அந்தப்புத்தகத்தைக் கையில் பிடித்திருந்த விதம் செத்தஎலியின் வாலைப்பிடித்து தூக்குவது போலவே இருந்தது என்னுடைய அதீத கற்பனையாகக்கூட இருக்கக்கூடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s