நாகப்பட்டினம் கிளை நீலாயதாட்சி தெற்கு வீதியில் இருந்தது அப்போது. நான் வங்கி வேலையில் முதன்முதலாகச் சேர்ந்தது அந்தக் கிளையில் தான். The Hindu படித்துக் கொண்டிருந்த மேலாளரிடம் எனது Appointment orderஐக் கொடுத்து ஆங்கிலத்தில் ஏதோ பேசியதற்கு “ஏன் தமிழ் தெரியாதா” என்றார். சுவாரசியமே இல்லாது, இன்னொரு அலுவலரை அழைத்துப் புதிதாக வந்திருக்கிறார் மதுரையிலிருந்து, முதலில் DD Sectionல் உட்கார வையுங்கள் என்றார். வந்தவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி ” சார் சிகரெட் பிடிப்பீங்களா?”
DD பிரிவில் எழுதிக் கொண்டிருந்தவர், அவசரமாகப் புலிவாலைப் பிடித்துக் கொள்ளுங்கள் இதோ வருகிறேன் என்று சொல்லிச் சென்று விட்டார். அப்போது DD கையில் எழுத வேண்டும். நாகப்பட்டினத்திலிருந்து மதுரைக் கிளைக்கு DD கொடுத்தால், காலையில் வாங்கிக் கொண்டு காரில் மதியம் மதுரை சென்று DDஐக் கொடுத்துச் சரக்கு வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள். DD advice என இந்தக் கிளையிலிருந்து அந்தக் கிளைக்கு DDகளின் விவரம் நான்கைந்து நாட்கள் கழித்துத் தபாலில் போய் சேரும். இப்போது இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் DD கொடுத்திருக்கிறார்களா இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கம்ப்யூட்டரில் பார்த்து விடலாம். அந்த நாளில் DD கொடுப்பது உண்மையில் Riskஆன விசயமே.
முதல் இரண்டு DDக்கள் நிதானமாக எழுதி சரியாக வந்ததும் Confidence(over) வந்து விட்டது. சிறிது நேரத்தில் DD வேண்டி நிற்போர் கூட்டம் அதிகமானதும் வேகமாக எழுத ஆரம்பித்ததில் இரண்டு DDல் தவறுகள். சேர்ந்த முதல்நாளில் நம் தவறை எதற்கு வெளியில் காட்டிக் கொண்டு என்று இரண்டையும் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டு விட்டேன். சாயங்காலம் மேலாளர் அறையில் எல்லோரும் கூட்டமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரம் கழித்து என்னை அழைத்த மேலாளர் “உங்கள் முதல்நாளில் இதுபோல் நடந்ததற்கு வருந்துகிறேன், இரண்டு DD leaves Missing என்று தலைமை அலுவலகத்திற்குப் புகார் கொடுப்பது என் கடமை” என்றார். ஒரு நிமிடம் என்று குப்பைக்கூடையில் இருந்து கிழிந்த DDகளை எடுத்து வந்து கொடுத்ததும், ஒரு கணம் எல்லோர் முகத்திலும் நிம்மதி தோன்றி, அடுத்த கணம் பெண்கள் எண்பதுகளில் போக்கிரிகளைப் பார்ப்பார்களே, அதே போல என்னைப் பார்த்தார்கள். மேலாளருக்கு அதிகாரம் இருந்திருந்தால் என்னை வேறுகிளைக்கு மாற்றி இருப்பார். அந்தக் கணத்தை அவர்கள் எல்லோரும் மறந்திருப்பார்கள். பதினைந்து வருடங்கள் கழித்து அந்த மேலாளர் உட்பட எல்லோரும் எனக்கு இரண்டோ, மூன்றோ Scale கீழே இருந்து கொண்டு ஏதோ ஒரு obligationக்காக என்னைச் சந்தித்து இருக்கிறார்கள். அந்த நாள் படம் போல அவர்கள் வந்த போதெல்லாம் எனக்கு மனத்திரையில் ஒரே ப்ளாஷ்பேக் மீண்டும் மீண்டும் ஓடும். ஆமாம், அந்த மேலாளர் என்னைப் பார்க்க வந்த போதெல்லாம் அவர் கையில் The Hindu இருந்தது.