Harris Oregonல் பிறந்து வளர்ந்தவர். Texas பல்கலையில் Master of Fine Arts படித்தவர். இருபத்தொன்பது வயதான இவருடைய முதல் நாவல் இது. June 2021ல் வெளியான இந்த நாவலை Oprah வெகுவாக சிலாகித்து எழுதியிருந்தார். July 2021ல் அறிவிக்கப்பட்ட புக்கர் நீண்ட பட்டியலில் இந்த நூல் சேர்க்கப்பட்டது, ஆசிரியருக்கு உண்மையிலேயே ஒரு கனவோட்டம் தான்.
Slavery என்பது பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு விதத்தில் இருந்த விசயம். இங்கிலாந்தில் ஒருவிதம் என்றால் இந்தியாவில் மற்றொருவிதத்தில் இருந்தது. அமெரிக்காவில் அடிமைத்தனம் 1865ல் சட்டத்தின் மூலம் ஒழிக்கப்படுகிறது. இந்த நாவல் அப்போது தான் ஆரம்பிக்கிறது.
ஜார்ஜ்-இஸபெல் தம்பதியினரின் ஒரே மகன்அமெரிக்க உள்நாட்டுப்போரில் மரித்ததாக செய்தி வருகிறது. இரண்டு கறுப்பின சகோதரர்கள் பலகாலம் இருந்த அடிமைத்தளையில் இருந்து விடுபடுகிறார்கள். ஜார்ஜ் உபயோகமில்லாது இருக்கும் தன் நிலத்தில் பயிரிட அந்த இரண்டு சகோதரர்களை வேலைக்கு அமர்த்துகிறார். ஊர் வாய் மட்டுமல்ல செயல்களும் பொல்லாதது.
2003 க்குப் பிறகே அமெரிக்காவில் ஒருபாலின உறவு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது. 1865களில் இது சட்டவிரோதம் மட்டுமல்ல, பாவம் மற்றும் இறைவனுக்கு எதிரானது என்று கருதப்பட்டிருக்கும். Celeb, August மேல் கொண்டிருக்கும் ஈர்ப்பு மறுபாலினத்தவரின் காதலுக்கு சற்றும் குறைந்ததல்ல.
ஜார்ஜ்க்கு முதுமை, இடுப்பில் வலி, மகன் போரில் இழந்த செய்தியை மனைவியிடம் சொல்லவில்லை என்பதைத் தாண்டியும் ஒரு நிரந்தரத்துக்கம் இருப்பது போல் தெரிகிறது. இருவரும் விரும்பி மணமுடித்தோரிடம் கூட முதுமையில் பேச்சு வெகு குறைவாக மாறி அவசியத்திற்கு ” காப்பிப்பொடி நாளைக்கு மட்டும் தான் வரும்” என்பது போல் சுருங்கிப் போவதன் காரணம் புரிவதில்லை.
ஜார்ஜ் குழந்தையில் இருந்து ஒரு Beastஐக் காட்டில் தேடி அலைவது, Landry நாவல் முழுக்க பேசாமல் இருந்து விட்டு எந்த நேரத்தில் பேசக்கூடாதோ அந்த நேரத்தில் பேசுவது, ஜார்ஜ்க்கும் Clementineக்கும் இடையேயான சிநேகம், இஸபெல் மற்ற பெண்களிடம் என் கணவன் நல்லவன் என்று நான் தைரியமாகச் சொல்வது போல் உங்களால் சொல்ல முடியாது என்பது போல நுட்பமான விசயங்கள் பல இந்தநாவலில்.
இஸபெல் ஒரு மறக்கமுடியாத பெண். ஜார்ஜூடன் ஆன முதல் சந்திப்பில் அவள் பேசுவது, மற்ற ஆண்களை அவளிடமிருந்து விலக்கிவைக்கும் பேச்சு, இருபத்தி இரண்டு வருடங்களுக்குப்பின் கணவனின் இவள் மீதான காதலை வேறு பெண் மூலம் தெரிந்து கொள்வது,. ஜார்ஜ்ஜின் அறுவை சிகிச்சைக்குப்பின் அவள் நடந்து கொள்வது, பின் கடைசியில் அவள் எடுக்கும் முடிவு……..
பணமோ, நகைகளோ இல்லை வேறு ஏதோ ஒன்று வெகுசில பெண்களை ராணிகள் போல் நடந்துகொள்ளச் செய்கிறது.
சட்டங்கள் இயற்றப்படுவதால் மாறுதல்கள் அடுத்த நாளிலிருந்து வருவதில்லை. ஒவ்வொரு சமுதாயமும் மாறுதல்களை உள்வாங்க அதற்குண்டான காலத்தை எடுத்துக் கொள்ளும். இந்த நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்காவில் ஒரு கற்பனை நகரத்துக்கு நம்மை ஒருநாள் பிரயாணமாகக் கூட்டிச் செல்கிறது. 416 பக்கங்கள் கொண்ட நூல்.
Modern Language கலக்காது இது போன்ற நாவல்கள் எழுதுவது கடினம். இந்த நூலுக்காக அந்தக்காலம் குறித்த நீண்ட ஆய்வை ஆசிரியர் செய்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களுமே அழுத்தமாக வந்திருக்கின்றன. முதல்நாவலில் பெரிய கேன்வாஸ் எடுத்துக்கொண்டு எழுதுவது எப்போதுமே ஆபத்தானது. அந்த ஆபத்தை இவர் அநாயசமாகக் கடந்ததாகத் தோன்றுகிறது.