ரேணுகா நிடகுந்தி:
ரேணுகா கர்நாடகத்தின் தார்வாட்டைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாகப் புதுதில்லியில் வசிப்பவர். தில்லி டைரி பக்கங்கள், அம்ரிதா நினைவுகள் உள்ளிட்ட பல நூல்களை கன்னடத்தில் எழுதியவர்.
கே. நல்லதம்பி:
கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து கன்னடத்திற்கும் தொடர்ந்து மொழிபெயர்ப்பவர். லங்கேஷ், ஷான்பாக், சீனிவாஸ் வைத்யா, நேமிசந்த்ரா முதலியோரை தமிழுக்கும், சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன் போன்றோரை கன்னடத்திற்கும் கொண்டு சென்றவர்.
ஒரே கதை சிலநேரங்களில் எழுத்தாளரின் மேதைமையை நமக்குத் தெரியப்படுத்தி விடுகிறது. அதே நேரத்தில் நாம் படிக்காதது ஏராளம் ஆனால் வாழ்க்கை மிகக் குறுகியது என்ற நினைவும் வந்து விடுகிறது. அங்கூரி கதையைப் படித்துக் கொஞ்ச நேரத்திற்கு எதுவுமே செய்ய முடியவில்லை. கண்டிப்பாக இவரை முன்பே படித்திருக்க வேண்டும். அம்ரிதாவின் நூல்களை சேகரம் செய்து கொண்டிருக்கிறேன்.
ஞானபீடப் பரிசு பெற்ற அம்ரிதா சொந்த வாழ்க்கையிலும் கூட அன்றைய காலகட்டத்தைக் கணக்கில் கொள்கையில் வித்தியாசமான பெண்மணி. பிரீதம் சிங்குடனான இருபத்தைந்து வருட மணவாழ்வில் இரண்டு குழந்தைகளைப் பெற்றவர். கவிஞர் சாஹிரை வெறித்தனமாகக் காதலித்தவர். அதற்காகவே கணவரை விட்டுவிலகியவர். அது கைகூடாது ஏழுவயது இளையவரான இம்ரோஜ்ஜூடன் சேர்ந்து நாற்பதாண்டுகள் வாழ்ந்தவர்.
அம்ரிதா இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் (பிரிவினைக்கு முன் அங்கே பிறந்தவர்) பெருமதிப்பைப் பெற்றவர். பஞ்சாபி இலக்கியத்தின் முக்கிய இலக்கியவாதிகளில் ஒருவர். எந்த இந்தி நடிகையின் முக அழகினோடும் போட்டியிடும் அழகைக் கொண்டவர். இம்ரோஜ்ஜின் காதலைத் தாண்டிய இவர்மீதான ஒரு பிம்ப வழிபாடு எல்லாவற்றையும் தாண்டி நாற்பது வருடங்கள் இணைந்திருக்க வைத்திருக்கலாம்.
கவிஞர் சாஹிர் அம்ரிதாவை சீனாவுக்கு அழைத்ததாக ஒருவரி விரைவாக வந்து போகிறது. அது பெரும்பாலான இந்தியஆணின் மனநிலை. வெளியில் தெரியாது enjoying the best of both the worlds.
அதற்கு நேரெதிர் இம்ரோஜ். தான் காதலிக்கும் பெண் அவளுடைய காதலனின் பெயரைத் தன் முதுகில் எழுதுகையில் விடாது அவளை நேசிக்க என்ன ஒரு முதிர்ச்சி அல்லது பைத்தியக்காரத்தனமான காதல் இருந்திருக்கும்.
ஒரு துறையில் சாதனை செய்பவர்களின் மனதில் அதே துறையைச் சேர்ந்த ஒருவரின் மீதான காதல் வெகுஇயல்பானது. தன் வெற்றிடங்களை நிரப்புபவர்களாக அவர்களைப் பார்க்கிறார்கள். நடிகைகள் நடிகர்களைக் காதலிப்பது இப்படித்தான். எம்.எஸ். எத்தனையோ பேரிருக்க ஜி.என்.பி மேல் காதல் கொண்டார், போலவே அம்ரிதாவின் சாஹிர் மீதான காதல். கேள்வி கேட்காது அன்பு செலுத்துபவர்களால் நீண்டகாலம் ஒன்றாக இருக்க முடிகிறது.
சாஹிருக்கு அம்ரிதாவைப் பார்க்கையில் தாழ்வு மனப்பான்மை இருந்தது, அம்மாவின் மீதான பிரியம் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் போல் இருந்தது, முஸ்லிமாகிய தான் சீக்கியப்பெண்ணை எப்படி மணம் செய்ய என்ற மனத்தடை இருந்தது, எல்லாவற்றையும் விட Introvert ஆகிய சாஹிரால் அழுத்தமாகக் காதலைச் சொல்ல ஒருநாளும் முடிந்திருக்காது. அதை இம்ரோஜ்ஜால் சொல்ல முடிந்தது, ” சாஹிர் ஒருநாளும் அம்ருதாவுடனான திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார், அப்படியே செய்தாலும் அவர் வீட்டு அடுப்படியில் ரொட்டி சுடும் அம்ரிதாவை நான் தூக்கி வந்துவிடுவேன்”. பெண்களுக்கே உரிய ஸ்திரபுத்தியை மற்றும் பாதுகாப்பைத் தேடும் குணம் இம்ரோஜை அவர் தேர்வு செய்ய வைத்தது.
அம்ரிதாவின் ஒரு கவிதையின் வரிகள்:
“ஆயுளின் சிகரெட் எரிந்து விட்டது
என் காதல் மணம்
கொஞ்சம் உன் மூச்சிலும்
கொஞ்சம் காற்றிலும் கலந்துவிட்டது”
ரேணுகா இம்ரோஜ்ஜில் அம்ரிதாவைப் பார்த்திருப்பது தெரிகிறது. நல்ல சரளமாக எழுதியிருக்கிறார். நல்லதம்பியின் கன்னடத்தில் இருந்து தமிழுக்குச் செய்யும் மொழிபெயர்ப்புக்கும், அசலாக தமிழில் எழுதப்படுபவைகளுக்கும் என்னால் வேறுபாடு கண்டுபிடிக்க முடியவில்லை. இவரது நண்பர்கள் தமிழில் இருந்து கன்னடத்திற்கு செய்தவரை போதும் இனி ஆயுள் முழுக்க தமிழுக்கு மொழிபெயருங்கள் என்று சொன்னால் தேவலை.
பிரதிக்கு:
பாதரசம் பதிப்பகம் 72992 39786
முதல்பதிப்பு டிசம்பர் 2018
விலை ரூ.100.