திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டையில் பிறந்தவர். கடந்த இருபது வருடங்களாகக் கதைகள் எழுதி வருகிறார். இதற்கு முன், உப்புச்சுமை, நாய்சார் என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.

ஆண்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்று பெண்கள் கேட்பது போல் ஆண்களும் பாலினத்தை மாற்றி அதே கேள்வியைக் கேட்கிறார்கள். இருவரும் ஒன்று தான் Equally good or equally bad என்று கண்டுபிடிக்கும்பொழுது ஆயுளில் முக்கால்வாசி முடிந்து போகிறது. இருட்டில் ஒளிரும் ஆயிரம் கண்களின் கதைக்கரு பெண்ணுடலில் அந்நிய ஆணின் அத்துமீறல் என்றாலும், அம்மா-மகள் உறவு, இறப்பின் வலி, அம்மாவின் அழகு, ஏமாற்றியவன் மேலின்னும் ஒட்டியிருக்கும் நினைவு, ஆசை அவித்தல் போன்ற பல விசயங்கள் வந்து போகின்றன. இது இவருடைய எல்லாக் கதைகளுக்குமே பொதுவான அம்சம். அம்மாவின் அனுபவங்கள் ஆண்களைக் கெட்டவர்களாக நினைக்கத் தோன்றுவதும், அதையும் தாண்டி முளைக்கும் காமத்தை தையல்மிஷினில் சக்தியைத் தொலைத்துச் சோர்வதில் அடக்குவதுமான காட்சிகளை வாசகர் மனத்திரையில் விரித்துக் கொள்ளும் போது இந்தக்கதை முழுமை பெறுகிறது.

பவுடர் அப்பிய முகத்தில் கூடுதல் வெட்கம், முதிர்கன்னியின் பார்வையில் புது மஞ்சள் சரடு, பெண்கள் சிறுமிகளைப் பார்க்கும் பார்வையில் சீக்கிரம் Age attain பண்ணப் போவதைச் சொல்வது, எளிய முறையில் தயாராகும் மருதாணிக்கூம்புகள், மெனோபாஸ் நேரத்தில் உடம்பில் வரும் சிக்கல்கள், பெரியவளாகாத பெண்ணுக்கு எள்ளைக்கொடுப்பது, பூந்திக்கொட்டையில் கொலுசை ஊறவைப்பது என்று யாரோ திரை விலக்கியது போல் பெண்கள் உலகம் கண்முன் தெரிகிறது.

ஆண் மேல் இனம்புரியா ஈர்ப்பும், பயமும் ஒருங்கே கொண்ட பதின்மவயதுப்பெண், இளையராஜா பாடலில் இளமையைக் கரைக்கும் முதிர்கன்னி, திருமணமாகி இரண்டு மாதத்தில் புதுஆளாக மாறும் ஜீவா,
சாதிப்பிரச்சனையால் காதல் தோல்வியடையும் அக்கா, துள்ளித்திரிந்த பெண்ணைக் கூட்டில் அடைக்கும் மணவாழ்க்கை, அநாதையாய் அன்புக்கு ஏங்கி மணமானவனிடம் ஏமாறும் பெண், இரட்டை வாழ்க்கை வாழும் வேலைக்காரி,
கனவுலோக சஞ்சாரி திமிரி, குடும்ப வன்முறையை மறக்க கற்பனாலோகத்தைத் தஞ்சமடையும் பெண், லட்சுமணரேகையைத் தாண்டும் பெரீம்மா, சிவப்பு வண்ணத்தைப் பார்த்து நடுங்கும் பெண், கணவனைப் பிரிந்த புதுப்பெண் என்று எல்லாக் கதைகளிலுமே பெண்களே பிரதான கதாபாத்திரங்கள்.

பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அநேக கதைகளில் அம்மா கதாபாத்திரம் அழகாக, அன்பும் கண்டிப்பும் கொண்டதாக வருகிறது. பெண்கள் திருமணத்திற்கோ, கணவன் பிரிந்ததானாலோ ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தொகுப்பின் வித்தியாசமான கதைகள் பெரீம்மா மற்றும் கூடடைதல். கூட்டை விட்டுச் சிறகடித்துப் பறக்கும் கதையும் அதுவே. கிருத்திகாவின் பலம் அவருடைய அவதானிப்பு. சுற்றி நடக்கும் பல விசயங்களை கூர்ந்து நோக்கி, நினைவுப் பெட்டகத்தில் சேகரம் செய்து கொள்ளல். இவருக்குத் தெரியாத கதை உலகத்தில் இவர் புகுவதேயில்லை அதனால் இவர் கதைகளுக்கு ஒரு உயிரோட்டம் கிடைத்துவிடுகிறது. ஒரே Templateல் எழுதும் புகழ்பெற்ற ஆண் எழுத்தாளர்களை நாமறிவோம். சமீபத்திய இவருடைய கதைகள் இவருடைய எல்லையை விஸ்தரிக்கும் முயற்சிகள். இவருடைய அடுத்த தொகுப்புக்கு அதிகநாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

பிரதிக்கு:

எழுத்து பிரசுரம் 98400 65000
முதல்பதிப்பு ஜூலை 2021
விலை ரூ.220.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s