ஆசிரியர் குறிப்பு:

இலங்கை ஏறாவூரில் பிறந்தவர். சமூகப்பணித்துறையில் பட்டப்படிப்பையும், இதழியல், கல்வி முகாமைத்துவம், உளவியல் துறைகளையும் பயின்றவர். பத்திரிகைத்துறையில் பணியாற்றியவர். இதுவரை சிறகு முளைத்த பெண், உம்மத், ஒவ்வா, பணிக்கர் பேத்தி ஆகிய படைப்புகள் வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வந்த அனுபவப்பதிவு நூல்.

மதங்களின் பெயரால் நடக்கும் எந்த போர்களுக்கும் நிரந்தரத்தீர்வு கிடைத்ததாக சரித்திரமே இல்லை. சிலுவைப்போர்கள் அப்படி நிரந்தரத்தீர்வைக் கொண்டு வந்திருந்தால் உலகமே கிருத்துவமதத்தை ஏற்றுக்கொண்டிருந்திருக்கக்கூடும். மதங்களே இல்லாத உலகத்தை நோக்கி மனிதம் எப்போது நகருமோ தெரியவில்லை.
உயிர்த்த ஞாயிறு நூல் பெயருக்கேற்ப, இலங்கையில் கிருத்துவ தேவாலயங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடந்ததை ஒட்டிய மூன்றுமாத காலகட்டத்தைப் பற்றிப் பேசுகிறது.

ஒரு கலவரம் நடந்த பிறகு மைனாரிட்டி மதத்தினர், பயந்து ஒடுங்கி இருப்பதும், பெரும்பான்மை மதத்தினர் சட்டாம்பிள்ளைத்தனம் செய்வதும் எல்லா இடங்களிலும் நடப்பதே. பாகிஸ்தானில் நடந்தது, பரோடாவில் நடந்தது, இலங்கையிலும் நடந்தது, நூலில் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

“எந்த ஊர்ல நல்ல முஸ்லீம் இருக்காங்க?”
இந்தக்கேள்வியை முஸ்லீம் கேட்டால் ஒரு அர்த்தமும், சிங்களவரோ, இந்துவோ கேட்டால் வேறு அர்த்தமும் வரும். இந்துவோ, முஸ்லீமோ விரல்விட்டு எண்ணும் நபர்கள் செய்யும் தவறின் பழி அந்த மதத்தின் மொத்தமக்கள் மீதும் விழுவதைப் போல முட்டாள்தனம் வேறில்லை. இந்தியாவிலும் இந்திராகாந்தி இறந்தபோது அதுவே நடந்தது.

2019 ஏப்ரலில் கிருத்துவ தேவாலயங்களின் மீது ISIS தொடுத்த தாக்குதல்களின் பின்னணியில் நகரும் கதை, குண்டுகள் வெடித்ததும் இலங்கையில் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல், பள்ளியில் படிக்கும் சிறுவர்களும் முஸ்லீம் என்ற அடையாளத்தில் இருந்து தப்பிக்க முடியாதது, இஸ்லாமியத் தீவிரவாதம் பெண்களை மூளைச்சலவை செய்து தற்கொலைப்படையினராய் உபயோகிப்பதும், அதே நேரத்தில் பெண்கள் அடிமைகள் என்று மதத்தின் பெயரால் பல கட்டுப்பாடுகளை விதிப்பதையும், புத்த பிக்குகள் வன்முறையைத் தூண்டி விடுவதையும், சிங்களர்கள் சிறுபான்மை இனத்தவர் மீது யதேச்சதிகாரம் நடத்துவதையும் போலப்பல விசயங்களைப் பேசுகிறது.

True Storyகள் பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்ததன் பேரில் எழுதப்படுகின்றன. இவரது விசயத்தில் இவரே பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆகையால் தன்மையிலேயே கதை சொல்லப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் பற்றி எழுதியதால் இவர் உயிருக்கு அச்சுறுத்தல் விடப்படுகிறது. Taslimaவுக்கும் இதுவே நேர்ந்தது. கௌரி லங்கேஷ் விசயத்தில் அச்சுறுத்தல் இல்லாமலேயே கொலை நடந்தது.

தீவிரவாதம் என்பது யார் செய்தாலும் அதைச் செய்பவர் தீவிரவாதிகள். அதற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தமில்லை. அந்தப்புரிதல் இவருக்குத் தெளிவாக இருக்கிறது. ஈராக்கில் Yazidi பெண்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளாக வைத்திருப்பது, செய்தித்தாள்கள் வாசிப்பதற்கே தடையுள்ள மதராஸாக்களில் படித்து மௌலவியாய் வருபவர்களுக்கு இருக்கும் Limited exposure என்பது போல் இவர் கேட்கும் பலகேள்விகள் அடிப்படைவாதிகளுக்கு கோபமேற்படுத்தும். அதே நேரத்தில் பர்தா அணியாத வழக்கம் உள்ள இவர், நம்பிக்கையுள்ள பெண்கள் அணிந்திருக்கும் பர்தாவை விலக்கு என்று சோதனைஅதிகாரிகள் சொல்வதற்குக் கண்டனம் தெரிவிக்கிறார், பிக்குகள் சிங்களர் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் போது அதை சிங்களப்பெண்கள் தானே முடிவுசெய்ய வேண்டும் என்று எதிர்கேள்வி கேட்கிறார். ஒரு உண்மையான பெமினிஸ்ட் இப்படித்தான் இருக்கமுடியும். எழுத்தாளரைப் பொறுத்தமட்டில் இந்த நூல் ஒரு ஆவணப்படுத்தல். வாசகர்களுக்கு இது ஏராளமான விசயங்களைப் பேசும் வாசிப்பதற்கு சுவாரசியமான நூல். சமீபத்தில் வெளிவந்த முக்கியமான நூல்களில் ஒன்று இது.

தமிழ்கட்டுரைநூல்கள்

பிரதிக்கு :

காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பிரதி பிப்ரவரி 2021
விலை ரூ.275.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s