இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்- தொகுப்பு பா.பிரபாகரன் & யமுனா ராஜேந்திரன்:

ஒரு எழுத்தாளரை விமர்சித்து இவ்வளவு பெரியநூலா? ஜெயமோகனின் மேன்மையைப் புரியாதவர்கள் என்னவோ சொல்லிப் போகட்டும், நீங்கள் தொடமுடியாத தூரத்தில் ஜெயமோகன் இருக்கிறார் என்பது போல் பல எதிர்வினைகள் பக்தர்களிடமிருந்து. நடுநிலையாளர்கள் கூட
உள்ளபடியே, நல்ல நோக்கத்துடன் இந்த நூலின் தேவை குறித்து சந்தேகப்பட்டனர். இந்தக் காரணங்களினாலேயே நூல் பற்றிப் பேசுமுன் மற்றவர்கள் பற்றி இவர் பேசியதைப் பார்க்க வேண்டியதாகிறது. நடுநிலையாளர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் குறித்து இவர் எழுதியவற்றை நீங்களே கூகுளில் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பதிவே ஜெமோ ஆதரவாளர்களுக்கோ அல்லது வெறுப்பாளர்களுக்கோ அல்ல, நடுநிலையாளர்களுக்கு.

தஞ்சை ப்ரகாஷ் குறித்து:

“தஞ்சை பிரகாஷ் அவ்வகையில் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்மதைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவை.”

2000ல் மறைந்த ப்ரகாஷ்ஷின் கரமுண்டார் கையெழுத்துப் பிரதியை வாசித்ததாக 2015ல் சொல்கிறார். நெருக்கமில்லாது யாரேனும் கையெழுத்துப் பிரதியைக் கொடுப்பார்களா? இல்லை இவரிடம் ஆசி வாங்கக் கொடுத்தாரா? தொன்னூறுகளில் எழுதியிருக்கிறார் ப்ரகாஷ். அப்போது ஜெமோவின் இலக்கிய அந்தஸ்து என்ன? போகட்டும். அதே பதிவில் இப்படி சொல்கிறார்.

“தஞ்சை பிரகாஷின் நாவல்களை, அல்லது இத்தகைய எழுத்துக்களை வாசிப்பவர்களுக்காக நான்சி ஃப்ரைடே தொகுத்த My Secret Garden: Women’s Sexual Fantasies, Forbidden Flowers: More Women’s Sexual Fantasies, Men in Love, Men’s Sexual Fantasies, Women on Top: How Real Life Has Changed Women’s Sexual Fantasies, Beyond My Control: Forbidden Fantasies in an Uncensored Age ஆகிய நூல்களை நான் சிபாரிசு செய்வேன்.”

இத்தனையும் இவர் படித்தார் என்பதை பக்தர்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படியே படித்திருந்தால் இவரது வாசிப்புத்தரத்தில் பெருத்த குறைபாடு இருக்கிறது. Women on Top படித்த பிறகு நான் இந்த எழுத்தாளரின் திசையில் தலைவைத்துப் படுக்கவில்லை. ஒருவேளை படிக்காது தெருவோரம் கேட்டதை வைத்து சிபாரிசு செய்திருந்தால் அது இன்னும் மோசம்.

ஆர்.சூடாமணி குறித்து:

“இந்த வரைபடத்தில் ஆர்.சூடாமணியை எங்கே வைப்பது? அவர் முதன்மையாக ஒரு கலைமகள் எழுத்தாளர். அவரது நடை, கதைக்கருக்கள் அனைத்துமே முழுக்க முழுக்க கலைமகள்தன்மை கொண்டவை. எளிமையான சித்தரிப்புநடை.”

“அவரது உள்ளக்கடல் என்ற சிறு நாவலை வாசித்து 1981ல் நான் ஒரு கடிதம் போட்டிருந்தேன். அதில் இந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். மையப்பிரச்சினையை அப்படி பேசியே தீர்ப்பது பற்றி. என் அவதானிப்பு சரிதான் என அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.”

இவர் 1961ல் கூட எழுதியிருப்பார், சூடாமணியும் நான் இனி திருத்திக் கொள்கிறேன் என்று சொல்லியிருப்பார்.

தி.ஜானகிராமன் குறித்து:

“அவருடைய எழுத்துக்கள் வெளியாகி கால் நூற்றாண்டுகழித்துதான் நான் படிக்க ஆரம்பிக்கிறேன். அன்று வரை அவருடைய படைப்புகளைப்பற்றி பேசிய எவரும் சுட்டிக்காட்டாத நுட்பங்களை, அவர்கள் எவரும் கண்டடையாத உள்மடிப்புகளை, அவருடைய புனைவுகளில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவர் மீதான வாசிப்புகளை அவ்வாறு விரிவாக்கம் செய்திருக்கிறேன். அவ்வாறு ஜானகிராமன் எதை அளித்தாரோ அதை அனைத்தையும் பெரும்பாலும் முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் நிலையில் எழுந்த பிறகுதான் அவருடைய போதாமைகளை சுட்டிக்காட்டுகிறேன். அவருடைய எல்லைகளை வரையறுக்கிறேன். அதுவே அந்த எதிர்மறை விமர்சனம் வைப்பதற்கான தகுதியாகிறது.”

அசோகமித்ரன் குறித்து:

“அசோகமித்திரனின் கதைகளை செகந்திராபாத் பின்னணி கொண்டவை, சென்னைப் பின்னணி கொண்டவை என எளிதாக இரண்டாகப்பிரித்துவிடலாம். இவ்விரு சட்டகங்களுக்கு வெளியே செல்லும் கதைகள் மிகச்சிலவே.”

எந்த எழுத்தாளரையும் ‘இக்கன்னா’ வைக்காமல் ஜெயமோகன் எழுதியதில்லை. அசோகமித்ரனின் இலக்கியத்தரமும் ஜெயமோகனின் இலக்கியத்தரமும் ஒன்று என நினைப்பவர்களுடன் பேசுவதற்கு எனக்கு எதுவுமில்லை. இவரைச் சேர்ந்தவர்களைப் பற்றிப் பேசுகையில் அல்லது இவருக்கு ஆதாயம் கொடுக்கும் விசயங்களைப் பேசுகையில் இவரது இலக்கியப்பார்வை சாளேஸ்வரக் கண்ணில் பார்த்தது போல் ஆகிவிடும்.

அருண்மொழி நங்கை குறித்து:

“நீலகண்டம் ஓரளவு நல்ல வாசகர்களால்கூட சரியாக வாசிக்கப்படாத படைப்பு. அதன் பல்வேறு புராண உட்குறிப்புகள், இன்றைய குழந்தைகளின் நவீனத் தொழில்நுட்ப உலகு ஆகியவை பின்னி ஒன்றாக்கப்பட்டிருக்கும் முறை ஆகியவை கவனமற்ற வாசகர்கள் பலரின் தலைக்குமேல் சென்றுவிட்டன. அவற்றுக்கான இடம் இப்புனைவில் என்னவாக இருக்கிறது என தொகுத்துக்கொள்ள பலராலும் இயலவில்லை. அது எந்த ஒரு புதுவகை எழுத்து உள்ளே வரும்போதும் நிகழும் சிக்கல் அருண்மொழியால் அனைத்தையும் முழுமையாகக் கருத்தில்கொண்டு இவ்விமர்சனம் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு படைப்புக்கு எழுதப்படவேண்டிய முதல்விமர்சனம் அமைந்த மொழி என ஐயமில்லாமல் சொல்வேன். ஆகவே முதல்முறையாக அருண்மொழியை ஒரு கட்டுரையாளர் என ஏற்றுக்கொள்கிறேன்.”

இது போன்ற விமர்சனபாணியை இவர் எல்லா இலக்கிய ஆளுமைகள் குறித்தும், தட்டிக்கேட்க ஆளில்லாது பல வருடங்களாக செய்து வருகிறார். அந்த ஒரு காரணத்தினாலேயே இந்த புத்தகம் காலத்தின் கட்டாயமாகிறது. என்னைப் பொறுத்தவரையில் ஆன்மீகம் குறித்தோ, கம்யூனிசம் அல்லது வேறு சித்தாந்தங்கள் குறித்தோ அறிதலில் போதாமை எனக்கு இருப்பதால் இலக்கியத்தைப் பற்றி மட்டுமே
இங்கே பேசுகிறேன். ஆனால் நூல் பரந்து விரிந்து பலவிசயங்களைப் பேசுகிறது.

முதல்பகுதி புரட்சியாளர்கள்-

பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறித்த
ஜெயமோகனின் கருத்துக்கு எதிர்வினையாக, சுகுணா திவாகரின் ஆதாரங்களுடன் கூடிய கட்டுரை. அது போலவே அம்பேத்கார் குறித்த கருத்துக்கு எதிர்வினையாய் பா.பிரபாகரன் கட்டுரை மற்றும் மார்க்ஸ், மார்க்ஸியம் குறித்த கருத்துகளுக்கு எதிர்வினையாற்றும் யமுனா ராஜேந்திரனின் கட்டுரை.

இரண்டாம் பகுதி ஜெயமோகனின் ஆன்மீகம்:

முதல் கட்டுரையாக அரவிந்தன் சிவக்குமார், கோடார்ட்டின் தத்துவத்தில் இருந்து, நாஜிகளை விளக்கிப்பின் வயதான வங்கிப் பெண்ஊழியர் பற்றிய பதிவுக்கு ஜெமோவின் எதிர்வினையைக் குறிப்பிட்டு மனப்பான்மையை விளக்குகிறார். அந்த எதிர்வினையைப் படிக்காதவர்களுக்காக:

“அவர் ஒரு தேவாங்கு. நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கழுத்தை பிடித்து வெளியே தள்ளி மீதி காசைக் கொடுத்து அனுப்ப வேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல. அதை விட மோசமாக செய்யுது. இது திறமையின்மை மட்டும் அல்ல. நீண்ட காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப் பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்” (மின்னம்பலம்.காம்மில் இருந்து எடுக்கப்பட்டது)

கௌதம சித்தார்த்தனின் இரண்டாவது கட்டுரை, ஜெமோவின் சங்கச்சித்திரம் குறித்த புனைவுக்கதை ஒன்றைக் குறித்துப் பேசுகிறது. நானும் பலமுறை ஜெமோ தனக்கு வருவதெல்லாம் தத்துவதரிசனங்கள் என்ற மாயையில் மூழ்கி இருக்கிறார் என்று நினைத்ததுண்டு.

ராஜகோபால் சுப்பிரமணியத்தின் மூன்றாவது கட்டுரை மற்ற கருத்துகளோடு முக்கியமான விசயம் ஒன்றை சொல்கிறது. இணையம் பரவலாகத் தெரியப்படும் காலத்தில் Brand Marketingஐ நன்கு உபயோகித்து மேலே வந்தவர் ஜெமோ. R.P. ராஜநாயஹம் 2008ல் ஷேக்ஸ்பியர், Coetzee, காம்யு பற்றி எழுதிவிட்டார். எண்பதுகளிலேயே Shakespearan quotes, sonnets பற்றி எல்லாம் பேசியிருக்கிறார். கடந்த பத்து பதினைந்து வருடங்களில் இணையம் பிரபலமான பிறகு உலக இலக்கியம் படித்தோர் எண்ணிக்கை மிகமிக அதிகமாகிவிட்டது.

வெ.மு.பொதியவெற்பனின் கட்டுரை பெரியாரின் வைக்கம் போராட்டம் பங்கீடு குறித்த ஜெயமோகன் கருத்திற்கு எதிர்வினை.

விலாசினியின் கட்டுரை ஜெமோவின் பெண் வெறுப்பைப் பேசுகிறது. ஜெமோவின் பல கட்டுரைகளில் இதற்கான ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன.

மூன்றாம் பகுதி- இலக்கியம்:

புனைவில் நடுவில் சிலவிசயங்களை எடுத்து விவாதிப்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது. புனைவில் எழுதுவதெல்லாம் ஆசிரியரின் கருத்தல்ல, அப்படியே வந்தாலும் அதைத்தாண்டிய படைப்பின் தரத்தைப் பார்க்க வேண்டியது ஒரு இலக்கிய வாசகரின் வேலை. ஆனால் கட்டுரைகள், அல்புனைவுகளில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அதன் ஆசிரியர் விளக்கம் சொல்லக் கடமைப்பட்டவர்.

ந.முத்துமோகன் பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் கம்யூனிச எதிர்ப்பையும் போலித்தத்துவ தரிசனங்களையும் பற்றிப் பேசுகிறது.

சு.வெங்கடேசனின் கட்டுரை விஷ்ணுபுரத்தைக் குறித்த பார்வையை வழங்கி அது எவ்வாறு வைதீகக்கயிற்றில் கட்டப்படுகிறது என்பதைக் கூறுகிறது.

மேலாண்மை பொன்னுசாமியின் கட்டுரை விஷ்ணுபுரம்,ரப்பர், திசைகளின் நடுவே உள்ளிட்ட படைப்புகள் குறித்த விமர்சனம்.

க.காமராசனின் கொற்றவை நாவல் குறித்த கட்டுரை. சிலப்பதிகாரத்தில் இருந்து எங்கெங்கு மாற்றுவழி எடுக்கிறது என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜ்தேவ், ஸ்டாலின் பெலிக்ஸ் கட்டுரைகள் ரப்பர் நாவலில் சாதிய, வர்க்க அரசியல் குறித்துப் பேசுகிறது.

வெள்ளையானை நாவல் குறித்த ஜோதிகுமாரின் நீண்ட கட்டுரை, நாவலில் வரும் தீண்டாமை, ஷெல்லி வரிகள், பஞ்சம் குறித்த பார்வை, சாதியகட்டுமானங்கள் போன்ற பலவிசயங்களைப் பேசுகிறது.

தமிழ்நதியின் கட்டுரை உலோகம் நாவலில் ஈழப்பிரச்சனை கையாண்டவிதம் பற்றியும்
இயக்கத்தில் இருந்து வருபவன் மூலம் சொல்லப்பட்ட விசயங்களையும் பேசுகிறது.

இரா.மோகன்ராஜனனின் உலோகம் நாவல் குறித்த கட்டுரை நாவலில் ஈழப்போராட்டம் குறித்த எள்ளள் தொனி விஞ்சியிருக்கிறது என்று கூறுகிறது.

பின் தொடரும் நிழலின் குரல், கன்னிநிலம், உலோகம் ஆகிய மூன்று நாவல்களின் பின் இருக்கும் அரசியல் பற்றி யமுனா ராஜேந்திரனின் கட்டுரை.

இந்த நூலில் நாவல்களைப் பற்றிய பதிவுகளில் கட்டுரைகளை எழுதியவர்கள் யாருமே மேலோட்டமாகப் பேசவில்லை, எல்லோருமே அந்தப் பிரதியை முழுமையாக வாசித்து அவர்களது பார்வையை முன் வைக்கிறார்கள். நீங்கள் உடன்படலாம் அல்லது எதிர்கருத்து சொல்லலாம். ஆனால் மொழியை மட்டுமே நம்பிக் கிடைத்த தகவல்களைக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் ஜெயமோகனுடையது. ஈழப்போராட்டம் குறித்து முழுவதாக ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டிருந்தால் உலோகம் வேறுவிதமாகக்கூட இருந்திருக்கலாம். ஆய்வுக்கெல்லாம் யாருக்கு நேரமிருக்கிறது!

நாவல் கோட்பாடு என்ற தன் நூலில் ஜெயமோகன் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

“சிறுகதைகள் எழுதுவதைப் போல் கொஞ்சம் நீட்டினால் நாவல் என்ற எண்ணம் அன்று இருந்தது. சிறுகதைகளுக்கு உரிய சொற்செட்டு, சுருக்கிக்கூறும் போக்கு, குறிப்புணர்த்தும் தன்மை ஆகியவை நாவலிலும் கையாளப்பட்டன. ஆகவே நாவலுக்கு உரிய விரிந்து பரவும் தன்மைக்குப் பதிலாக குறுகி ஒடுங்கும் தன்மையே அக்கால நாவல்களுக்கு இருந்தது. இதையே நான் விமர்சனம் செய்தேன். ஆனால் இன்று அந்தப் போக்கு வெறும் வடிவப்போதாமை மட்டுமல்ல என்று எனக்குத் தெரிகிறது. அது நவீனத்துவ அழகியலுக்கு உரிய மனநிலையும் கூட, சமூகத்தை, வரலாற்றை, இயற்கையை கணக்கில் கொள்ளாமல் நாவலாசிரியன் தன்னில் ஆரம்பித்து தன்னிலேயே முடிக்கும் போக்கு கொண்டிருந்ததன் விளைவு அது”

ஊருக்கெல்லாம் ஆருடம் சொல்லிக் கழனிப் பானையில் விழுமாம் பல்லி என்று என் பாட்டி அடிக்கடி சொல்வார்.

கௌதம சித்தார்த்தனின் கட்டுரை சிறுகதைகளில் இருக்க வேண்டிய தேடல் தரிசனப்போக்கு குறித்து பேசுகிறது. தமிழில் சிறுகதைகள் புதுமைப்பித்தனில் தொடங்கி இடைவெளியின்றி இன்றுவரை நல்லதரத்துடன் வருகின்றன என்பது என் கருத்து.

அறம் தொகுப்பின் மூன்று கதைகள், கைதிகள் மற்றும் வெள்ளையானை நாவல் குறித்துப் பேசுகிறது மகேஷ் ராமநாதனின் கட்டுரை.

கொரான காலக்கதைகளில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மற்றும் கம்யூனிச வெறுப்பு இருப்பதை சொல்லும் புலியூர் முருகேசன் கட்டுரை.

ந.ரவீந்திரனின் கட்டுரை ஜெயமோகனின் சில சிறுகதைகளுக்குப் பின் இருக்கும் விசயங்கள் குறித்துப் பேசுகிறது.

நான்காம் பகுதி- ஜெயமோகனின் இலக்கியக் கோட்பாடு:

பதினெட்டாவது அட்சக்கோடு என்ற அசோகமித்ரன் நாவலுக்கும் மண்ட்டோ படைப்புகள் மீதான ஜெயமோகனின் எதிர்வினை குறித்துப் பேசும் ஜமாலனின் கட்டுரை.

பொதியவெற்பன் திராவிட இலக்கியம் குறித்த ஜெயமோகனின் எதிர்வினைக்கு பல ஆதாரங்கள் கொடுத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

எதற்கும் இருக்கட்டும் என்று இங்கே இணைத்திருக்கிறேன், ஜெயமோகன் தளத்தில் ஆகஸ்ட் 20,2021ல் வெளியானதில் ஒரு பகுதியை:

“அனைத்துக்கும் அப்பால் முதல்வர் ஸ்டாலின் போற்றுதலுக்குரியவர். இந்த திட்டம் திமுக அளித்த வாக்குறுதிகளில் இல்லை. குறையறிந்து தானாகவே செய்யப்படும் முயற்சிகளிலேயே அரசு மக்கள் மீதான தன் அக்கறையை வெளிப்படுத்துகிறது. இவ்வரசு இதுவரை எடுத்த திட்டங்களில் இதுவே தலையாயது. ஒரு முதல்வராக நிர்வாகத்திறனையும் இணையாகவே பெருங்கருணையையும் வெளிப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் வரலாற்றில் இடம்பெறுவார்.”

அருந்ததிராயின் God of Small things நூல் குறித்த ஜெயமோகன் கருத்துகளுக்கு யமுனா ராஜேந்திரனின் எதிர்வினை அடுத்த கட்டுரை. அரசியல் கருத்துகளில் மாறுபட்ட கோணம் கொண்டிருப்பவர் கூட அருந்ததிராயின் இலக்கிய நுட்பத்தைக் குறித்து கேள்வி கேட்க மாட்டார்கள். தங்கத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.

அமெரிக்காவைச் சேர்ந்த Cathryn Conroy என்பவரது விமர்சனத்தை மாதிரிக்குத் தருகிறேன். உலகமெங்கும் 5000க்கு மேற்பட்ட விமர்சனங்களில் 62% 5* Rating கொடுத்த நாவல் God of Small Things.

This is literature, perhaps even great literature. (This debut novel by Arundhati Roy did win the Man Booker prize in 1997, after all.) But that doesn’t mean it is an easy book to read. Quite the opposite. It’s a real challenge.

The plot, which involves failed marriages, illicit love affairs, deaths, horrific forms of betrayal, and two kids trying to figure it all out, is secondary to the overarching theme of how we sometimes purposely and sometimes inadvertently destroy our own lives—generation after generation after generation. It is a story about family fights, forbidden love, forbidden sex, violent spousal abuse, child sexual abuse, incest, Indian politics, and the insurmountable differences between classes in India. And through it all Roy writes with a razor-sharp sharp perception of the comedy and tragedy of the human condition. Escapist reading this is not.

What makes it great literature: This is a celebration of language and the beauty of words. Each word is carefully chosen. Each sentence is perfect. The words flow like poetry and demand to be read a second time for their sheer beauty. But this isn’t poetry. It’s a novel. The structure, style and extraordinary word play are highly imaginative, perhaps even the work of a genius.

ஊட்டியில் தளையசிங்கத்துக்கு நேர்ந்த தொழுகை பெரும்பாலோருக்குப் பரிச்சயமான கட்டுரை. கருத்தரங்கில் நடந்ததை ஒவ்வொன்றாக அப்படியே விளக்கும் கட்டுரை.

ராஜநாயஹம் என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர். இலக்கியவாதிகள் சந்திப்பில் கருத்து பரிமாற்றத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் கொண்டவர். ஜி.நாகராஜனைத் தேடி அலைந்திருக்கிறோம், ப.சிங்காரத்தைச் சந்தித்திருக்கிறோம், எண்பதுகளின் ஆரம்பத்தில் கோணங்கியுடன் உரையாடி இருக்கிறோம். மதுரையைவிட்டு கிளம்பியதும் எந்த இலக்கியவாதியையும் நானாகத் தேடிப்போய் சந்தித்ததில்லை. ஆனால் இவர் தேடிப்போய் சந்தித்து அளவளாவி, தன் பணத்தை செலவழித்து இருந்தவர். அதற்குக் கிடைத்த பரிசுகளில் இரண்டை மட்டும் சொல்கிறேன்.

  1. ஒரு பிரபல எழுத்தாளர் இவர் முகத்திற்கு எதிரே “வாசகர் என்பதற்காக யாரும் கிரீடம் எல்லாம் சூட்ட மாட்டாங்க” என்றார். சொல்லிய வார்த்தைகளை விட சொல்லிய தொனி இருக்கிறதே!
  2. ஊட்டியில் நடந்த அவமானம்.

காலம் முழுக்க இலக்கியத்தை தன் வாழ்க்கையோடு இணைத்துக் கொண்ட வாசகன் ஒருவனுக்கு தமிழ் இலக்கியவாதிகள் அளித்த பரிசுகள்!

உலகில் நடப்பவை எல்லாம் அதிமனிதனின் வரவிற்கே என்றார் நீட்சே. தன்னை அதிமனிதனாய் கற்பனை செய்துகொள்ளும்
ஜெயமோகனைப் பற்றிய விளக்கமான அடுத்த கட்டுரை பொதிய வெற்பனுடையைது.

ஜோதிகுமாரின் கட்டுரை இங்கே அதிகம் பேசப்படாத,கார்க்கியின் கடைசி நாவல் தொடரான The Life of Klim Samgin பற்றிய தெளிவான பார்வை. அத்துடன் ஜி.நாகராஜன், அசோகமித்ரன், ஆ.மாதவன், புதுமைப்பித்தன்,சுந்தரராமசாமி போன்றோர் குறித்த ஜெயமோகனின் பார்வையை விமர்சித்தும் பேசுகிறது.

ஐந்தாம் பகுதி திரைப்படம்:

யமுனா ராஜேந்திரனின் கட்டுரை ஜான் ஆப்ரஹாம் என்ற திரைக்கலைஞனுக்கு நல்லதொரு நினைவுகூறலும் அறிமுகமும் ஆகும்.

அடுத்த கட்டுரை கௌதம சித்தார்த்தன் எழுதிய நான் கடவுள் படத்தின் காட்சிகளின் பின்னால் இருக்கும் மதஅரசியல் குறித்துப் பேசுகிறது.

ஆறாம் பகுதி- ஈழ மனிதஉரிமைகள்:

தமிழ்நதியின் கட்டுரை பாதிக்கப்பட்டவரின் குரலாக இந்திய அமைதிப்படையின் அத்துமீறல்கள் குறித்துப் பேசுகிறது. எந்த ராணுவமும் அந்நியநிலத்தில் நடமாடுகையில் அந்தக்காலத்து அரசர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். இதற்கு உலகில் எந்த ராணுவமும் விதிவிலக்கல்ல.
இந்தியாவில் இருந்து கொண்டு இப்படி எல்லாம் நடக்குமா என்று அர்த்தமில்லாத கேள்வி கேட்பதில் எந்த லாபமுமில்லை.

யமுனா ராஜேந்திரனின் அடுத்த கட்டுரை ஜெயமோகன் இந்தியராணுவ விசயத்தில் அரைகுறையாக பதிவிட்டதையும், அவர் ‘பன்முக’ ஆய்வு செய்யாது எழுதுவதைப் பற்றியும் சொல்கிறது. (யாரிடம் எதை எதிர்பார்ப்பது!)

ஏழாம் பகுதி- முஸ்லீம்- கிறித்துவ வெறுப்பு:

எந்த மதம் குறித்து பேசினாலும் அந்த மதத்தில் ஆயிரம் வருடங்களாக இருந்தவர்களை விட அதிகம் தெரிந்தவர் ஜெயமோகன். நமக்கிருக்கும் அந்த நம்பிக்கையைக் கேள்வி கேட்கிறது பா.பிரபாகரனின் கட்டுரை.

யமுனா ராஜேந்திரனின் அடுத்த கட்டுரை, சார்லி ஹெப்டோ குறித்துத் தெளிவான பின்னணியைச் சொல்லி, ஜெயமோகனின் இஸ்லாம் வன்முறை மதம் என்ற கருத்துக்கு எதிர்வினை செய்கிறது.

கடைசிப்பகுதியாக நான்கு கண்டன அறிக்கைகள் ஜெயமோகனுக்கு எதிராகப் பல எழுத்தாளர்கள் கையொப்பமிட்ட பின்னிணைப்பும், இதில் பங்களித்த எழுத்தாளர்கள் பற்றிய சிறு குறிப்பும்.

எனக்கு நெருக்கமான நண்பர்களில் சிலருக்கு எழுத்தாளனின் தனி ஒழுக்கத்தை வைத்து அவரது படைப்புகளைப் புறம்தள்ளும் வழக்கம் உண்டு. என்னைப் பொறுத்தவரை எழுத்து வேறு, எழுத்தாளன் வேறு. திருடன் மணியன் பிள்ளை எழுதியவரின் ஒழுக்கம் குறித்து இரண்டாவது கருத்தில்லை. புனைவில் வருவதெல்லாம் தனியாகப் பிரித்துப் பதம் பார்க்க வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அதையே மறுபரிசீலனை செய்ய வைத்தது ஜெயமோகன் தான். அவரது பத்துலட்சம் காலடிகளில் ஒரு பத்தி எந்த பாத்திரமும் சொல்வது போல் இல்லாது ஒரு இஸ்லாமியர் குறித்து இப்படி வருகிறது:

“நான் அவர் முகத்தை பார்த்திருந்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த விழிகள். எத்தனை உறுதியான நரம்புகள் என்ற வியப்பே எனக்கு ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக தீயும் ரத்தமும் கண்ணீரும் கண்டவர்களுக்கு உரியவை”

இதையே இவர் தொடர்ந்து செய்கிறார். கட்டுரைகள், கதைகளின் நடுவே தெறிக்கும் காழ்ப்புணர்ச்சியை நடுநிலைவாதிகள் இவ்வளவு காலம் எப்படி கவனிக்கத் தவறினார்கள் என்பது எனக்கு ஆச்சரியமே. தமிழின் நவீன எழுத்தாளர்களில் நான் தவறவிட்டவர்கள் வெகுகுறைவு., ஆனால் இது போல் வன்மம் தொனிக்கும் எழுத்தைத் தமிழில் இதுவரை நான் படிக்கவில்லை.

அடுத்து இவரது இலக்கிய அந்தஸ்து குறித்து. ஜெயமோகனின் மொழி வசீகரமும் நுட்பமும் நிறைந்தது. ஜெயமோகனை ஒதுக்கி வைத்து தமிழ் நவீன இலக்கியம் குறித்துப் பேசமுடியாது. ஆனால் இவரது எந்த நாவலும் ஆழ்ந்தஆய்வின் பின் எழுதப்பட்டவையல்ல. வடிவத்திலோ, முழுமையிலோ நேர்த்தியானவை இல்லை. இந்த வருடம் புலிட்சர் விருதை வாங்கிய Night Watchman எழுதியது பழங்குடி உரிமைகளுக்கு போராடி வென்ற ஒருவரின் பேத்தி. அதற்காக அவர் கற்பனைக்குதிரையைத் தட்டிவிடவில்லை. அதற்காக ஏராளமாக உழைத்து ஆய்வுசெய்து எழுதியுள்ளார். டான்பிரவுன் ஏதோ Pulp fiction என்று கடந்து போகிறார்கள். பிரபல மொழிபெயர்ப்பாளர் சுப்பாராவ் Florence மியூசியத்தில் Dante Death Mask இருக்கும் இடத்தில் Dan Brown பற்றிய குறிப்பைப் பார்த்து எழுதியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். திரில்லர் நாவல்களை எழுதும் Patricia Cornwell தனது கதைகளில் தொடர்ந்து வரும் forensic science குறித்து எழுத ஆறுவருடங்களுக்கு மேல் Medical Examiner அலுவலகத்தில் வேலைபார்த்தார். ஆங்கிலத்தை விடுங்கள். தமிழில் பெருந்தேவி உடல் பால் பொருள் நூலுக்காக கார்த்திக் புகழேந்தி நற்திருநாடே நூலுக்காக உமர் பாருக் அழநாடுக்காக இதுபோல் பலரும் அவர்கள் நூலுக்காகத் தானே ஆய்வுசெய்து எழுதியதைப் பாருங்கள், இங்கே ஜெயமோகனின் நாவல்களை எங்கு வைப்பீர்கள்? அதனால் தான் இத்தனை பேர் மேலே ஆதாரத்துடன் கேள்வி கேட்டிருக்கிறார்கள். தமிழ்நாவல்கள் பற்றிப் பேசினால் இவர் நாவல்களுக்கு இடம் உண்டு, முக்கிய இந்திய நாவல்களிலேயே இவரது ஒரு நாவலேனும் இடம்பெறுவது கடினம். இந்த லட்சணத்தில் தான் இவர் நாவல் கோட்பாடு என்ற நூலை எழுதியிருக்கிறார். சிறுகதைகளைப் பொறுத்தவரை பல நல்ல கதைகளை எழுதியவர் இவர். இவரிடம் புதிதாக எழுத வருபவர்கள் சிறுகதைகளில் கற்றுக் கொள்ள வேண்டிய யுத்திகள் கண்டிப்பாக இருக்கின்றன.

தன்னை உலகை உய்விக்க வந்தவன், மற்றவர்களை விட அதிமேதாவி, இலக்கியத்தைக் கடைத்தேற்ற வந்த ஒரே அபூர்வபிறவி என்றெல்லாம் ஒருவர் தனக்குத்தானே நம்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதை வெளியில் சொல்லும் போது தான் நான்குபேர் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். சூரியனுக்குக் கீழிருக்கும் எல்லா விசயங்களும் தனக்கு நன்றாகவே தெரியும் என்று ஒருவர் சொல்கையில் எதிரிருப்பவர் சுதாரித்து நாலடி பின்னகர்தல் மரியாதைக்காக என்று நினைப்பவர்கள் நினைக்கட்டும்.

தமிழ்கட்டுரைநூல்கள்

பிரதிக்கு:

கருப்பு பதிப்பகம் 98406 44916
முதல்பதிப்பு மார்ச் 2021
விலை ரூ. 760.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s