ஆசிரியர் குறிப்பு:
இலங்கை யாழ்ப்பாணம் அருகிலுள்ள சில்லாலை என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது கனடாவில் வசிப்பவர். முப்பதாண்டுகளுக்கு மேலாக இலக்கிய சந்திப்புகளையும், கருத்தரங்கங்களையும், 1990ல் இருந்து புத்தகக்கண்காட்சிகளையும் நடத்தி வருகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு அனுபவப்பதிவுகள் நூல் ஏற்கனவே வெளியாகி உள்ளன. இது அனுபவப் பதிவுகள் நூல்.
ஈழத்தில் இருந்து பெல்ஜியம் சென்று அங்கிருந்து கள்ளத்தனமாகக் கார்வழியாக பாரிஸ் போய்ச் சேர்வதில் இந்த நூல் ஆரம்பிக்கிறது. இலங்கை எழுத்தாளர் பலரிடம் நாம் காணும், வலியக்கட்டி இழுத்துவராத இயல்பான நகைச்சுவை இவரது எழுத்துகளிலும் சரளமாக இருக்கின்றது. ” யசிந்தா சாமத்தியப்பட்ட மூன்றாம் நாள் நான் ஊரைவிட்டுப் புறப்பட்டேன்”. ” அந்த வீட்டுக்கு யன்னல் சுவரிலும் இருந்தது, கூரையிலும் இருந்தது”.
வாழ்வியல் அனுபவங்கள் இல்லாத ஒரு இளைஞன், அந்நிய தேசத்தில், நிறத்தால் தனித்துத் தெரியப்படும் நாட்டில், புது மனிதர்களிடையே, தமிழ் தவிர வேறுமொழி தெரியாது, வேலைதேடி வேரூன்றியதை எத்தனை நகைச்சுவையாகச் சொன்னாலும் அந்த இடத்தில் நம்மைக் கற்பனை செய்து பார்க்கையில் நடுக்கம் ஏற்படுகிறது. அது ஏன் சிலதேசத்தில் சிறு அசௌகரியத்திற்கும் பெரிதாகப் பேசிக்கழிக்கும் மனிதர்களும், சிலதேசத்தில் உயிரைக்கையில் பிடித்துத்தப்பி ஓடி, வாழ்வாதாரத்திற்காக எதுவும் செய்யத் தயாராகும் மனிதர்களும் இருக்க நேரிடுகிறது!
வசதியான குடும்பத்தில் பிறந்து, தகப்பனுடன் மனத்தாங்கலில் பாரிஸ் வந்து, அன்றாடங்காட்சி வேலை செய்து, யாருக்கும் தெரியாது மரணமடைந்து, அரசாங்கம் அடக்கம் செய்யும் தட்சூண், ஊரைப் போலவே எல்லா இடங்களிலும் எதிர்பார்க்கும் அருள்நாதர், இரத்தினக்கல் விற்பதாய் தூள் விற்கும் மாஸ்டர், பாரிஸ் வந்தவுடன் நோய்வாய்ப்பட்டு பிரெஞ்சு நர்ஸூடன் Unrequited loveல் ஆழ்ந்த ஞானசீலன், பத்து ஆண்களுடன் ஒரு அறையில் சங்கடத்துடன் தங்கி பின் கிளம்புகையில் உண்மையிலேயே எல்லோரும் கண்ணீர் சிந்தும் அளவு பழகிய பெண் என்று எத்தனை விதமான மனிதர்கள்! வெளிநாடுகளில் தங்கியவர் அனுபவங்களை எழுதுகையில் நாம் இதுவரை கதையில் படித்திராத கதாபாத்திரங்களும் வந்து போகிறார்கள்.
பாரிஸிலிருந்து ரோமுக்கு இரயில் சீட்டுக்கடியில் படுத்து சென்றால் போய்விடலாம் என்று, ஆறுமணிநேரம் புரண்டு படுத்து, சாரம் கட்டினால் தான் உறக்கம் வரும் என்று ஜுன்ஸைக் கழட்டி சாரத்தை மாட்டும் இடைப்பட்ட நிர்வாணத்தில், எதிர் இருக்கைப்பெண் வல்லுறவுக்கு வருகிறான் என்று புகார் தர, எந்த நாடு என்று தெரியாத சிறையில் இருந்து மீண்டுவந்த கதை படிக்கும் போது சிரிப்பைத் தரலாம் ஆனால் அப்பாவிகளின் சபிக்கப்பட்ட வாழ்வை நினைக்கையில் வருத்தம் மேலிடுகிறது.
பாரிஸூக்குப் பிரயாண ஆயத்தங்களில் ஆரம்பிக்கும் நூல் கனடாவிற்குப் புலம்பெயர்வதுடன் முடிகிறது. கனடாவிலேயே முப்பதாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து விட்டார். இந்த நூல் முழுக்க பாரிஸ் அனுபவங்கள். அங்கேயும் சாதியைச் சொல்லிக் கொண்டு இவன்கள் இங்கேயும் வந்தால் நாம் ஆஸ்திரேலியா இல்லை கனடா தான் போக வேண்டும் என்று சொல்லும் மனிதர்கள், ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளின் எதிர்வினையாய் பாரிஸில் தமிழர்களின் செயல்கள், அம்மா இறந்த செய்தியை மூன்று நாள் கழித்துத் தெரிந்து கொண்டு வேதனையைப் பகிர யாருமில்லாது ரோட்டில் அழும் சிறுவன் என்று பல விசயங்களைப் பேசும் இந்த நூல் புலம்பெயர்ந்த ஒருவர் உலகிற்குத் தெரியத் தரும் ஒரு ஆவணம். அதிகம் எழுதாத எழுத்துக்கு இருக்கும் வசீகரம் இவர் எழுத்திலும். அத்துடன் எல்லாவற்றையும் நகைச்சுவையாகப் பார்க்கும் மனம் இந்த நூலை விறுவிறுப்பான வாசிப்புக்கு உகந்ததாக்குகிறது. அனைவரும் படிக்க லேண்டிய நூல், இவர் இன்னும் எழுதவேண்டும்.
தமிழ்கட்டுரைநூல்கள்
பிரதிக்கு :
காலச்சுவடு பதிப்பகம் 4652- 278525
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2021
(தமிழினி பதிப்பாக 2016ல் வந்த நூல்)
விலை ரூ.275.