பல இலக்கிவாதிகளைத் தேடிச்சென்று சந்தித்து, இலக்கியக்கூட்டங்களை நடத்தி, கள்ளம், கரமுண்டார்வீடு போன்ற நாவல்களும், சிறுகதைகளும் தமிழுக்கு அளித்து, பொருளாதாரச் சிக்கலினூடே பல நல்ல நூல்களை பதிப்பித்த தஞ்சை ப்ரகாஷ் மீது அவர் மறைந்த பின்னரே இருந்த பொழுதைவிட அதிக வெளிச்சம் விழுந்தது. கையெழுத்துப் பிரதியாய் இருந்த இந்த நூலை அவர் துணைவியாரும், நண்பர்களும் சமீபத்தில் நூலாக வெளிக் கொணர்ந்துள்ளார்கள்.
பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சாவூருக்குப் புலம்பெயர்ந்து பின் கலவைக்கலாச்சாரமாக மாறிப்போன மராத்தி மக்கள் பின்னர் சிதறிப்போனார்கள். பழக்கங்கள் மற்றும் உணவுகளில் இருந்து தமிழகத்திற்கு அவர்கள் அறிமுகப்படுத்தியதும் அதிகம். பொய்க்கால் குதிரை என்ற அழிந்துவரும் நடனத்தின் மூலம் மகாராஷ்டிரா என்கிறார் ப்ரகாஷ்.
க.நா.சு வின் சாதனையே அவரது ரசனை அடிப்படையிலான விமர்சனங்கள். ஓய்வில்லாது பார்வை குறைந்த போதும் படித்தவர். ப்ரகாஷ்ஷின் கட்டுரை அவருக்கு நல்லதொரு நினைவுகூறல்.
” ஜானகிராமனை விமர்சிக்க முனைவதேயில்லை, கம்ப்ளீட் சரண்டர் தான்!
பூரணமான சரணாகதியடைய வைத்துவிடும் எழுத்து. தி.ஜானகிராமன் எழுத்தில் சாதித்த சாதனை யாராலும் மீண்டும் செய்யப்படவில்லை என்பதனால் அதன் அருமையும் பெருமையும் தனிவிதம்…… தஞ்சாவூர் இன்றும் ஜானகிராமன் பெயர் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இனியும் அவர் பெண்சித்திரங்கள் அவரை மட்டுமல்ல உலகையே வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கும்”= தஞ்சை ப்ரகாஷ்.
ஷ்யாம் அடைக்கலசாமியின் ஓவியம், வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்பம், கொங்கு நாட்டுப்பாடல்கள் குறித்த தனித்தனி கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.
” அவன்: நீலச்சேலை பூவளையலு
போட்டிருக்கும் பெண்ணே
ஏஞ்சாளையிலே ஒரு நாழி
தங்கிப் போனாலென்ன?
அவள்- அண்ணே,
எம்புருசே ஒன்னவிட நல்ல ஆளு……”
குடிசையில் இருபத்திநாலு நிமிடம் தங்கிச் சொல்லப் போகிறவனை அண்ணன் என்று விளிப்பதும், என் புருசன் நல்லவன் என்று சொல்வதும்……. படிப்பதனால் மட்டும் எல்லாம் வந்து விடுவதில்லை.
“என்ன ஆச்சு? ஏதேனும் வித்ததோ என்பார் க.நா.சு. ம்ஹூம் ஒண்ணும் ப்ரயோஜனமில்லை! வேற யாரானும் ஆள் பிடிக்கணும் என்பார் எம்.வி.வி. ஒரு ஐஸ்க்ரீம் கம்பனிக்காரன் புதுசா பதிப்பகம் ஆரமிச்சுருக்கான். சாயங்காலமாய் போய் பாருங்களேன்! என் புத்தகம் ஒண்ணு எடுத்துட்டு ஐம்பது ரூபா கொடுத்தான் என்பார் க.நா.சு”
எழுத்தை மட்டுமே முழுமையாக நம்பி வாழ்க்கை வழியாக ஏற்றுக்கொள்வது தவறில்லை. ஆனால் தன்னை வியாபாரம் செய்யத் தெரியாதவர்கள் அதைச்செய்யக் கூடாது.
தஞ்சை ப்ரகாஷ் செய்த எம்.வி.வியின் நேர்காணல் இணையத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். ஆர்வமுள்ளவர் தேடிப் படியுங்கள். உண்மையின் ஓலம்!
தஞ்சை ப்ரகாஷ் கள்ளம் நாவலை எழுதி முடிக்கிறார். பின் கரமுண்டார் வீடு. பின் மீனின் சிறகுகள். ( வித்யாசாகரம், பொய்க்குதிரை என்ற நாவல்களும் இடையே எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். யாரேனும் படித்ததுண்டா?) எந்தப் பதிப்பகமும் வெளியிடத் தயாராயில்லை. கரிச்சான் குஞ்சு வயோதிகத்தில் செட்டியாரிடம் கு.ப.ரா குறித்து எழுதுகிறேன் என்று சொல்லி பணம்வாங்கிப்பின் எழுத முடியாமல் இவரிடம் உதவிநாடுகிறார். ப்ரகாஷ்க்கு உடல்நலம் சரியில்லாததால் இவர் சொல்லச்சொல்ல எழுதிய பெண்ணுக்குக் கூட இவர் புத்தகங்கள் அச்சில் வரும் என்ற நம்பிக்கையில்லை. இரண்டு நாட்களில் எழுதிய அந்தப்புத்தகம் கரிச்சான்குஞ்சு பெயரில் அச்சில் வருகிறது. அவர் கடனும் கழிகிறது. ப்ரகாஷ் போன்ற ஒரு எழுத்தாளரின் பயணம் டம்மி எழுத்தாளராய் தொடங்குகிறது. வானதி பதிப்பக வெளியீடாய் இன்றும் அந்த நூல் கிடைக்கிறது. இந்த நேரத்தில் ஒரு நேர்காணலில் ஒரு கேள்விக்கு இவருடைய பதிலையும் பார்க்கலாம்.
நசிகேதன்- தாங்களே படைப்பகம் வைத்திருந்தும் ஏன் உங்களுடைய நூல்களை நீங்களே வெளியிடுவதில்ல?
ப்ரகாஷ்- எனது நூல்களை நானே வெளியிடுதல் என்பது அத்தனை தரம் உகந்ததாய் இராது. எனது நூல்களை வெளிப்பதிப்பகத்தார் வெளியிட்டால் அது எனக்கு மகிழ்ச்சி தரும்.
இந்த நூலில் வந்திருக்கும் நேர்காணல்கள் எல்லாமே முக்கியமானவை. குறிப்பாக, க.நா.சுவின் மனைவி ராஜியுடனான நேர்காணல். பல இலக்கியவாதிகளின் மனைவிகளிலிருந்து வேறுபட்டு என் புருஷன் சாதனையாளர் என்கிறார். க.நா.சு இந்தவிதத்திலும் கொடுத்து வைத்தவர். சரளமான பேச்சில் எவ்வளவு நேர்மை என்பதைப் பாருங்கள் ” புருஷன்னு இருந்தா பிடிக்காதது, பிடிச்சது இரண்டும் இருக்கும் இல்லையா?”
உன்னதமான இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? தமிழ் இலக்கியத்தில் தெரிந்தே செய்யப்படும் இருட்டடிப்புகள், தூஷணைகள் போன்றவற்றிற்கு இவரது விளக்கங்கள், இவருக்குப் பழகக்கிடைத்த பல இலக்கிய மாஸ்டர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் இயற்கை உணவு, கிறிஸ்தவ சமையல் என்று இலக்கியத்திற்கு சம்பந்தமில்லாத பல விசயங்களும் இந்த நூலில். நூலை மொத்தமாகப் படிக்கையில் இலக்கியத்திற்கு இவர் எவ்வளவு உண்மையாக இருந்திருக்கிறார் என்பது புரிகிறது. தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள் பல அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டியவை. டிஸ்கவரிபேலஸ் மொத்தக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. இவருடைய கள்ளம், மிஷன்தெரு மற்றும் கரமுண்டார் வீடு தமிழில் முக்கிய நாவல்கள்.
மிஷன் தெரு உளவியல் நுட்பமும் கரமுண்டார் வீடு உணர்ச்சிக்குவியலுமாக எதிர்திசையில் பயணிக்கும் நாவல்கள். மீனின் சிறகுகள் என்வரையில் தோல்வியடைந்த படைப்பு. யதார்த்த வாழ்வின் இருண்ட பகுதிகளை அவசரமாகப் பாசாங்குப் போர்வையால் மூடுவதைப் பார்த்து, ப்ரகாஷ் போன்றவர்கள் அவ்வப்போது வந்து போர்வையை விலக்குகிறார்கள். பல வருடங்கள் கழித்து இந்த நூலில் மீண்டும் ப்ரகாஷின் குரல் கேட்கிறது.
தமிழ்கட்டுரைநூல்கள்
பிரதிக்கு:
நந்தி பதிப்பகம் 98947 81461
முதல்பதிப்பு செப்டம்பர் 2020
விலை ரூ.360.