ஆபரணம் – திருச்செந்தாழை:
திருச்செந்தாழையின் கதைகளுக்குள் புகுவது என்பது சக்கர வியூகத்தில் புகுவது போல் அடிக்கடி ஆகிறது. கொஞ்ச நேரம் வெளியே வரத்தெரிவதில்லை. மரியம் மட்டுமல்ல எல்லோருக்குமே ஓரகத்தியை உற்றுப்பார்ப்பது என்பது இயல்பான விசயம். மரியம் கொஞ்சம் அதிகம். குளிரில் வெடவெடத்து நிற்கிற அந்த சிறிய உடலை துடைத்துவிட வேண்டும் என்பது எவ்வளவு நுட்பமான விசயம்! Poetic Justice நடந்ததை சத்தமில்லாமல் சொல்வது. அதே போல் சித்திரை வரமுடியாது என்று சொல்வது, கடைசிப்பொட்டு நகையையும் கொடுத்தவளின் கண்களில் காதல் மீதி இருப்பதை மரியம் பார்ப்பது என்று நுட்பமான விசயங்கள் ஏராளம் இந்தக் கதையில். வழமை போல் மொழிநடை சிறப்பு. “பழைய அழுக்கான மெழுகிலிருந்து வழிந்த ஸ்படிகத்துளிகள் போல”. நல்ல கதைகளைப் படித்தால் அதற்குள் முடிந்து விட்டதே என்று வரும் வருத்தம் வந்தது.
மெல்லுடலிகள் – போகன் சங்கர்:
ஒருவருக்கு எல்லாமே தவறாக நடக்கும் போது யாரால் சரியாக நடக்க முடிகிறதோ அவனே உயர்ந்த மனிதன். Sexual poverty, அதில் குற்றஉணர்வு, பயம், ஸ்கலிதம் என்று எத்தனையோ விசயங்கள் வந்து போகின்றன. பேச்சு செயல் எல்லாமே மோசமாக இருக்கையில் கூட ஒருவன் நல்லவனாக இருக்க முடியும். அம்மாவிற்காகவே கல்யாணம் செய்யாது இருந்திருக்கலாம், மணம் ஆகாததாலேயே வெறித்துப் பார்க்க நேரிட்டிருக்கலாம். முடிவு நல்லதொரு டிவிஸ்ட். ஒருவனது பிம்பத்தைப் பற்றி அப்படியே மாற்றிவிடும் யுத்தி. நல்ல கதை.
லலிதாம்பிகை- சரவணன் சந்திரன்:
விட்டு விடுதலையாவது என்பது சில உறவுகளில் சாத்தியப்படுவதேயில்லை. கோவிட் சூழல் கதையில் நன்றாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதீத அன்பே அடுத்தவருக்கு பயத்தை, பாரத்தைக் கொடுக்கும் என்பதும் உண்மை. சஞ்சனா கதாபாத்திரம் தெளிவாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இவனால் இன்னொரு தடவை சஞ்சனாவைப் பார்க்காமல் இருக்க முடியப்போவதில்லை.
அந்தரிப்பு- கார்த்திக் பாலசுப்பிரமணியன்:
சூதாட்டத்தில் ஈடுபடுபவனின் மனநிலை தான் மெய்நிகர் உலகில் மூழ்கியவர் மனநிலை. அது ஒரு Addiction என்று தெரிகையில் அதைவிட்டு மீளமுடிவதில்லை.
இன்னொரு பக்கத்தில் தான் யாரென்று காட்டாது, முகத்திற்கு எதிராகப் பேசுவது போலில்லாது ஒளிந்திருந்து எதை வேண்டுமானாலும் பேசும் சுதந்திரம் பிடித்து கொஞ்சம்கொஞ்சமாக பாதுகாப்பு வளையத்தைத் தாண்டத் துணிகிறார்கள். தொழில்நுட்பம் அதிகம் தெரியாது உள்இறங்குபவர்களுக்கு சிக்கல் வந்தால் சமாளிக்க முடியாது. இவை எல்லாமே இந்தக்கதையில் ஒருதவிப்பின் மூலம் சொல்லப்படுகின்றன. கார்த்திக் கதைகளின் வழக்கமான Sharpness இந்தக் கதையிலும் இருக்கிறது.
நுண் – சி.சரவண கார்த்திகேயன்:
நுண் கதைகள் எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது ஒவ்வொரு எழுத்தாளர்களும் எழுதும் போது தான் தெரிகிறது. நுண் என்பது வடிவத்தை மட்டும் குறிக்காமல் தன்மையையும் குறிக்கும் அல்லவா! இரண்டும் ஐந்தும் Cut above the rest. நன்றாக வந்திருக்கின்றன.
காணிக்கை- இராஜேந்திர சோழன்:
பொன்னகரம் rewritten. அம்மாளு தான் ராசாத்தி.
சவச்சீலை- முன்ஷி பிரேம்சந்த்- தமிழில் கோ.கமலக்கண்ணன் :
பிரேம்சந்த்தின் கதையில் அன்றைய சமூகத்தின் எத்தனை பழக்கவழக்கங்கள் கதையோடு கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன! பிச்சை எடுப்பதை முதலில் செய்திருந்தால் ஒரு உயிர் பிழைத்திருக்கும், ஆனால் பிச்சையின் நோக்கமே வேறல்லவா? பிரேம்சந்த்தின் கதைகளில் பிரச்சாரத்தொனி இருந்தாலும் நிறைய நல்ல கதைகளை எழுதியிருக்கிறார். தெளிவான தமிழ் மொழிபெர்ப்பு.
தோற்றுப்போன புரட்சியாளனின் பிறந்தநாள்- எட்கர் கீரத்- தமிழில் செங்கதிர்
எட்கர் கீரத் புகழ்பெற்ற எழுத்தாளர். அளவுக்கதிகமான பணம் கொண்டுவரும் Isolation, அடுத்தவர்களின் அவலத்தை விளையாட்டாக எடுத்துக்கொள்வது, பணக்காரர்களின் cynicism, boredom முதலிய விசயங்கள் இந்தக் கதையில் வந்திருக்கின்றன. அபத்தத்திற்கும் உணர்விற்கும் இடையில் பயணிக்கும் கதை.
materialistic உலகத்தில் சந்தோஷத்தை எப்படி எல்லாம் தேடவேண்டியதாகிறது. நல்ல மொழிபெயர்ப்பு.
எமிலிக்காக ஒரு ரோஜா- வில்லியம் ஃபாக்னர்- தமிழில் கார்குழலி:
தமிழில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளில் ஒன்று இது. இம்மாத வனம் இதழிலும் வந்திருக்கிறது.
நெருங்கியவர் யாரேனும் இறந்தால் சிலகாலம் நம்மிடையே அவர் இல்லை என்பதை நம்மால் நம்ப முடிவதில்லை. மரணத்தை மறுத்தல் கதையில் மூன்றுமுறை நடக்கிறது. அது போலவே தன்னைப் பெரிதாகக் கருதிக் கொண்டு எல்லோரிடமிருந்தும் தனிமைப் படுத்திக்கொள்வது. ஆனாலும் எமிலியின் வாழ்வு பரிதாபமானது. Faulkner கூட அதனாலேயே அவளுக்கு ஒரு ரோஜாவைப் பரிசளிக்க எண்ணியிருக்கலாம். கார்குழலியின் மொழிபெயர்ப்பு எப்போதுமே வாசிக்க இனிமையானது.
அதீத அப்பாவியாக இருப்பதன் அபாயம்- பால்சாக் – தமிழில் விஜயராகவன்:
Droll story, incest too. பாலக்காட்டுப் பக்கத்திலே பாடலில் நல்ல விளக்கம் கொடுத்திருப்பார் கண்ணதாசன். பால்சாக் கதையில் முதியவர்கள் இருவருக்கு யோகம் அடிக்கிறது. மொழிபெயர்ப்பில் விஜய ராவணன் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். “Do like me, be cuckolds in the blade, and not in the sheath.’