ஆசிரியர் குறிப்பு:
சென்னையில் பிறந்து, வளர்ந்து, வாழ்பவர்.
கல்கி, அமுதசுரபி, குமுதம் பத்திரிகையிலும் பணியாற்றியவர். புதினங்கள், சிறுகதைகள், சிறார் நூல்கள் என்று புனைவின் எல்லாத் தளங்களிலும் நூல்களை எழுதியவர். அல்புனைவில் கிட்டத்தட்ட இருபத்தைந்து அரசியல் வரலாறு நூல்களை எழுதியவர். இந்த நூல் குமுதம் ரிப்போர்டரில் தொடராக வந்தது.
மரம் சும்மாயிருந்தாலும் ……… என்பது வாசிப்பதற்கும் சொன்னது என்று எனக்கு இதற்குமுன் தெரிந்திருக்கவில்லை. மாயவலையைப் படியுங்கள் முதலில் என்று நண்பரின் விடாத வற்புறுத்தல். எழுத்தாளர் ஆறுவருடம் உழைத்திருக்கிறார் என்று அவர் பிரச்சாரத்தின் நடுவில் சொன்னது மூளையில் எங்கோ பதிந்து Zero degreeல் அறிவிப்பு வந்தவுடன் வாங்க வைத்து விட்டது.
இதைப் பேசுமுன் இந்த Genreல் நான் முன்பு படித்த ஒரு நூலைப்பற்றியும் சொல்வது தவிர்க்க முடியாததாகிறது. Lawrence Wright எழுதிய The Looming Tower என்ற புலிட்சர் பரிசை வென்ற நூல். நியுயார்க்கர் பத்திரிகையின் பிரதான செய்தியாளர் இவர். இந்த நூல் Tareek Osama என்ற பைலை ஆதாரமாகக் கொண்டது. அதில் எடுத்த நம்பத்தகுந்த ஆவணங்கள் Wall Street Journal பத்திரிகையாளர் விலைக்கு வாங்கிய Al-qaedaவின் கம்ப்யூட்டரில் இருந்து கிடைத்திருக்கின்றன. நூற்றுக்கணக்கானவர்களைப் பத்து முறைகளுக்கு மேல் நேர்காணல் செய்திருக்கிறார். (அவர்களதுமுழுப்பெயர்களும் நூலில் இருக்கிறது) CIA அதிகாரிகள் பெரும்பாலும் ஒத்துழைக்கவில்லை, தகவல் சொன்னவரில் பலரும் பெயர் வெளியிட விரும்பவில்லை. எனவே Anonymous sourceஐக் கூடுமானவரையில் குறைத்ததாகச் சொல்கிறார். வெளிநாட்டுப் பத்திரிகையாளருடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். சவுதிக்கு, சூடானுக்கு, பாகிஸ்தானுக்கு, பாரிஸூக்கு, லண்டனுக்கு இன்னும் பலதேசங்களுக்குத் தகவல்கள் தேடி பலமுறை அலைந்திருக்கிறார். இவரது நன்றி நவில்தலே பல பக்கங்களுக்குச் செல்கிறது. அல்கொய்தா பற்றி மட்டுமே கிட்டத்தட்ட 600 பக்கங்களுக்குச் சொல்லும் இந்த நூல் இப்போதும் அமேசானில் 250 ரூபாய்க்குக் கிடைக்கிறது. அற்புதமான நூல். ராகவன் நாற்பது டிவிட்டர் அக்கவுண்ட் வைத்து தகவல் சேகரித்ததாகச் சொல்கிறார். எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்று உண்மையிலேயே விளங்கவில்லை.
மாயவலை நூலின் முதல் பகுதி Al-qaeda பற்றியது. ஒசாமா இளைஞராக பாகிஸ்தான் வந்ததில் இருந்து ஆரம்பித்து 9/11 தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா ஆப்கனில் இல்லை எங்கிருக்கிறார் தெரியவில்லை என்பதோடு இந்தப்பகுதி முடிகிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் FBI போன்ற நிறுவனங்கள் ஏராளமான அறிக்கைகளை பொதுமக்கள் பார்வைக்கு அளித்திருக்கின்றன. பின்வரும் லிங்கைப் பாருங்கள்:
https://govinfo.library.unt.edu/911/report/911Report_Exec.htm
இவருடைய பாணி எழுத்து கழுகார் எழுதுவது மாதிரி “ஸ்டாலின் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து, எப்படி இப்படி நடக்கவிட்டீர்கள் என்று கேட்டாராம்” என்பது போல் வார்த்தைக்கு வார்த்தை ஒசாமா பேசியதாக வருகிறது. 3000 உறுப்பினர்கள் கொண்ட அல்கொய்தா தான் அதிக உறுப்பினர்கள் கொண்ட தீவிரவாத இயக்கம் என்று சொல்கிறார்……
Looming Towerல் இருக்கும் ஒரு மாதிரிப்பத்தியைக் கீழே பார்க்கலாம்:
“A MONTH AFTER THE TRADE CENTER BOMBING, Zawahiri appeared on the speaker circuit in several California mosques. He came from Bern, Switzerland, where al-Jihad maintained a safe house. (Zawahiri’s uncle was a diplomat in Switzerland.) Although he entered the United States under his real name, Zawahiri was traveling under his nom de guerre, Dr. Abdul Mu’iz, posing as a representative of the Kuwaiti Red Crescent. He said he was raising money for Afghan children who had been injured by Soviet land mines from the time of jihad.”
இரண்டாவது பகுதி Hezbollah. லெபனானின் அரசியல் தீவிர அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் குறித்து. Shia அமைப்பான Hezbollah சன்னி அமைப்பான Al qaedaஉடன் இணைந்தது காலத்தின் கட்டாயம். PLO மட்டுமன்றி பாலஸ்தீனியத்தின் எல்லாப் போராளிகளுக்கும் Hezbollahவின் ஆதரவு. எதிரிக்கு எதிரி நண்பன். பின்னிணைப்பாக அவர்களது கொள்கைப் பிரகடனம் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
மூன்றாவது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த Hamas.
அப்போது அரசாங்கத்தை நடத்திய அமைப்பு. 2019க்குப் பிறகு அங்கே நிறைய மாற்றங்கள். ஹமாஸின் ஆதிக்கம் இன்றும் பாலஸ்தீனத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களைத் தற்கொலைப் படையாக தயார்படுத்திய இன்னொரு அமைப்பு. பாலஸ்தீனம் இரத்த ஆறு ஓடும்
இன்னொரு சபிக்கப்பட்ட தேசம்.
நான்காவது ஜப்பானைச் சேர்ந்த ஓம் ஷின்ரிக்கியோ அமைப்பு. இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. ஓம், இந்தியாவின் யோகங்களும் சூத்திரங்களும் எடுத்துக் கொண்டு, இந்து மதத்தையும் பௌத்தத்தையும் கலந்து தனது மார்க்கெட்டிங் திறமையால் உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்து 2019ல் கொல்லப்பட்ட ஒரு தீவிரவாத இயக்கத் தலைவனின் கதை.
ஐந்தாவது Euskadi Ta Askatasuna என்னும் ஸ்பெயினைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு.
Basqueஐ தனிநாடாக ஸ்பெயினிலிருந்து பிரித்துத்தர வேண்டும் என்பதற்காகப் போராட்டம். இந்த இயக்கமும் கொள்ளைகள் ஆள்கடத்தல் மூலம் நிதிதிரட்டி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது.
ஆறாவது ஜமா இஸ்லாமியா. பாலி பார் தாக்குதலில் கட்டுரை ஆரம்பிக்கிறது. இந்தோனேஷியாவை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு எதற்காக ஆரம்பித்தது, எத்தனை விதமான தாக்குதல்கள் நடத்தியது, எப்படி பணம் திரட்டியது என்பது போன்ற தகவல்கள். இயக்கத் தலைவரை CIA கைது செய்ததுடன் செயல் இழந்த இயக்கம் இது.
லஷ்கர்ஏ தொய்பா- இந்த ஒரு
பகுதிக்கு மட்டும் இணையத்தில் இருந்து தகவல்களும்,நூற்றுக் கணக்கான இணையப் புத்தகங்களின் பக்கங்களிலிருந்து குறிப்புகள் எடுத்ததாகவும் நன்றி தெரிவித்திருக்கிறார். இது மொத்த புத்தகத்திற்கும் சொல்லி இருக்க வேண்டியது. இந்த தீவிரவாத இயக்கம் இந்தியருக்கு மிகவும் பரிச்சயமானது.
என் பெயர் எஸ்கோபர்- கொலம்பியாவைச் சேர்ந்த ராபின் ஹூட் வகை போதைமருந்து கடத்தல்காரன். மாபியா கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து வெளிப்படையாக அலைவது எல்லாம் கொலம்பியா, மெக்சிகோ போன்ற நாடுகளிலேயே நடக்கும்.
ஒன்பதாவதாக தாலிபன். உலகவரலாற்றைத் தொடர்ந்து படிக்காத இந்தியர்களுக்குக்கூட தாலிபனை 1999ல் இருந்தே தெரிந்திருக்கும். அந்த வருடத்தில் இந்தியாவிற்கு உலக அரங்கில் அவமானம் ஏற்படுத்திய விமானக்கடத்தல் நடந்தது. இன்றைய தேதியில் தாலிபன்கள் மீண்டும் தலையெடுத்து உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தாலிபன் எப்படித் தோன்றியது என்பதிலிருந்து பல விளக்கங்கள் அடங்கிய பகுதி.
மூன்று நாட்களுக்கு மேல் வாசிக்க எடுத்துக் கொண்ட நூல் இது. முதல் நூறு பக்கத்திலேயே இந்த நூல் குறித்துத் தெரிந்துவிட்டது, இருந்தாலும் நண்பர் முழுதும் படித்தீர்களா என்று கேட்கப் போகும் கேள்வியை எதிர்கொள்ள முழுவதையும் படிக்க வேண்டியதாகிவிட்டது.
2007 ல் முதல்பதிப்பு வெளியானதாக நூலில் தகவல் இருக்கிறது. அதன் பின்பு ஏராளமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அவை இந்த 2021 ஜூலை பதிப்பில் Update செய்யப்படவில்லை. நிறைய முறை என் நினைவில் பிசகா இல்லை இந்த நூல் மொழி திரைப்பட எம்.எஸ்.பாஸ்கர் போல் பேசுகிறதா என்ற சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நேர்ந்தது.
ஒரு ஆங்கிலப்புத்தகத்தின் Reviewஐ தமிழ்படுத்தி யாரேனும் விமர்சனத்தை அவர்கள் முகநூல் பக்கத்தில் போட்டாலும் காப்பி என்று ஆர்ப்பரிக்கும் மக்கள் எப்படி இது போன்ற எழுத்துகளைச் சகித்துக் கொள்கிறார்கள்? எல்லாமே கூகுளில் எடுத்து கற்பனைக்குதிரையைத் தட்டி ஓட விடுவதற்கு எப்படி நம்பெயரைப் போட முடியும்? புனைவு வகையைச் சார்ந்த யாத்வஷேம் நாவல் உருவாக்கத்திற்கு எத்தனை முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்று படித்துப் பாருங்கள். நான் வணிக இலக்கியம் தீவிர இலக்கியம் என்ற பிரிவிற்கே போகவில்லை,
இது போன்ற google+கற்பனை கலந்த அல்புனைவுகள் ஒரு Absurd ஆக தெரியவில்லையா உங்களுக்கு? அரசாங்க குமாஸ்தா போல் Deskல் அமர்ந்து உலகத்தில்
இருக்கும் எல்லா விசயங்களையும் எழுதிவிட முடியுமா? ராஜவனம் என்ற மிகச்சிறிய நூலில் காடு கண்முன் விரிவது எப்படி நேர்ந்திருக்கும், யோசித்துப் பாருங்கள். இது போன்ற நூல்களின் வெற்றி பெருவாரித்தமிழ் வாசகரசனையையே மீள்பரிசோதனை செய்யத் தூண்டுகிறது.
அடுத்ததாக மாயவலை முன்னுரையில் இந்நூல் தீவிரவாதத்தைக் குறித்த விரிவான புரிதல், இந்நூல் ஆய்வுப்பிரதி என்றெல்லாம் இவர் சொல்வது போகட்டும். ஒரே ஒரு ஜப்பானிய இயக்கத்தைத் தவிர மீதி எல்லாமே முஸ்லிம் அமைப்புகள். கிருத்துவத்தில் தீவிரவாதம் இல்லையா! உலகத்தில் எத்தனைவிதமான Cults இருக்கின்றன! இந்துத் தீவிரவாதம் இல்லையா? கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றில் சூலம் பாய்ச்சுவது அகிம்சை நடவடிக்கையா? எழுத்தாளர் இதைத் தான் எழுத வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால் அட்டையில் சர்வதேச தீவிரவாத நெட்ஒர்க் பற்றிய விரிவான ஆய்வு என்று குறித்திருப்பதால் சொல்ல வேண்டியதாகிறது.
முகநூல் அறிவுஜீவிகள், இது போன்ற அல்ஆய்வுநூல்கள் எல்லாமே கூகுள் ஆண்டவரின் குழந்தைகள். Wikipedia writers அதிகரித்து வரும் வேளையில் தமிழில் இருந்து வேற்று மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கூகுள் இல்லாத காலத்தில் தமிழில் வரலாற்று நூல்களை எழுதியவர் யாராவது என் கனவில் வந்தால் நிச்சயம் கட்டிப்பிடித்துக் கௌரவம் பார்க்காமல் கதறி அழுதுவிடுவேன்.
தமிழ்கட்டுரைநூல்கள்
பிரதிக்கு:
எழுத்து பிரசுரம் 98400 65000
முதல்பதிப்பு ஜூலை 2021
விலை ரூ.1500.