Karen தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர். Afrikaan தாய்க்கும் ஆங்கிலத் தந்தைக்கும் பிறந்தவர். Creative writingல் முதுகலைப்பட்டம் பெற்றவர். பிரேசிலைச் சேர்ந்த விஞ்ஞானியை மணந்து பிரேசிலில் வசிப்பவர். இதற்கு முன் நாவல் ஒன்றும், சிறுகதைத் தொகுப்பு ஒன்றும், கவிதை மற்றும் சுயசரிதை நூல்கள் ஒவ்வொன்றும் எழுதியுள்ளார்.
2017ல் முடிக்கப்பட்ட An Island நூலை இவருடைய முதல்நாவலைப் பதிப்பித்தவரே ஏற்றுக்கொள்ளவில்லை. பல பதிப்பகங்கள் தேடி இறுதியில் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இரு சிறுபதிப்பகங்களில் இணைவெளியீடு செய்ய வாய்ப்பு கிடைத்தும், அந்த நூலுக்கு விமர்சனம் எழுத எழுத்தாளர்களோ பெயர் பெற்ற விமர்சகர்களோ யாரும் முன்வரவில்லை. பேரிடர் காலத்தைக் கணக்கில் கொண்டு 500 பிரதிகளே அச்சிடப்பட்டது. வெளியாகியும் ஒரு சிறுசலனத்தைக் கூட இந்த நூல் ஏற்படுத்தவில்லை. இவரது சொந்த நாடான தென்ஆப்பிரிக்காவில் கூட இவருக்கு வாசகர்கள் இல்லை. ” வாழ்க்கையின் பெரும்பகுதி ஏழ்மையைப் பார்த்த எனக்கு பணமோ, புகழோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை விட அவமான உணர்வும், நம்பிப் பொருள் செலவழித்துப் பதிப்பித்த பதிப்பாளர்களைக் கைவிட்டேன் என்ற குற்றஉணர்வுமே அப்போது இருந்தது” என்கிறார் இந்த முப்பத்தொன்பது வயதுப்பெண். எல்லாமே ஒரே நாளில் மாறியது. புக்கரின் நீண்ட பட்டியலில் ஒன்றாக இந்த நூல் வந்ததை இன்னும் இவரால் நம்பமுடியவில்லை. என் ஊரிலேயே படிக்க ஆளில்லை என்று சொன்ன இந்த எழுத்தாளரின் நூல்கள் இனி உலகமெங்கும் உள்ள வாசகர்களால் படிக்கப்படப்போகின்றன.
நான்கு நாட்களில் நிகழும் சம்பவங்களே கதை. அதற்குள் எழுபது வயது மனிதன் ஒருவனின் வாழ்க்கை முழுதும் நனவோடை யுத்தியில் சொல்லப்பட்டு விடுகிறது. கலங்கரைவிளக்கக் காவலாளி ஒருவன் ஆளற்ற தீவில், இருபத்தைந்து வருடங்களாக அவனே ஏற்படுத்திக் கொண்ட
தனிமை வாழ்வில் ஒரு சலனம் ஏற்படுவதே கதை.
Apartheid காலத்தில் நடக்கும் நாவல் இது. காலனியாதிக்கம் முடிந்த உடன் பலர் நம்பிய சுதந்திரம் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. கருப்பின மக்களுக்கு ஓட்டுரிமையிலிருந்து உரிமை ஏதும் இல்லாது பலகாலம் வாழ நேர்ந்தது வரலாறு. அதில் இருந்து எடுக்கப்பட்ட இந்தக் கதையை வெள்ளையினத்தவர் எழுதியது கூட, இரு இனத்தவருமே இவரது நோக்கத்தைச் சந்தேகிக்கும் காரணமாக இருந்திருக்கக்கூடும்.
தனிமையாகப் பலகாலம் வாழ்ந்தபிறகு இன்னொருவர் வந்தால் ஏதோ சுதந்திரம் பறிபோனது போல் உணர்வது, இருபத்தைந்து வருட சிறைவாழ்க்கைக்குப் பின் நாட்டில் நடப்பது எதுவும் புரியாது தவிப்பது, வயதானவர்களுக்கே வரும் paranoia, தென்ஆப்பிரிக்க அரசியல், எல்லா நாடுகளிலும் வருவது போல் அரசியல் பலியாடுகள் என்று பலஅடுக்குகள் சேர்ந்து இந்த சிறிய நாவலின் கனத்தைக் கூட்டுகின்றன.
நாவலின் பிரதான கதாபாத்திரம் சாமுவேல் Forrest Gumpன் இன்னொரு பிரதி. நாவலில் நடப்புக்கதையும், பழைய கதையும் மாறிமாறி வரும்போதும் குழப்பமே ஏற்படாது வாசிக்க வைப்பது ஆசிரியரின் மொழிநடை. யார் கதைசொல்லியோ அவனுக்கே நினைவுக்குழப்பமும், சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்த பிரமையும் இருக்கும் போது, நனவோடையில் கதை நகர்த்த உண்மையில் தைரியம் வேண்டும். Contemporary writersஐ அதிகம் படிக்காது Zola, Dickens, Steinbeck போலப் படித்தவர் இவர்.
நாவலின் முடிவு பெரும்பாலானோர் எதிர்பாராதது. இதுபோன்ற அதிகம் வெளியே தெரியாத நாவல், நீண்ட பட்டியலில் வந்திருப்பது, புக்கர் தேர்வுக்குழுவின் மீதான மரியாதையை இன்னும் அதிகரித்திருக்கிறது.