அம்ரிதா இணைந்த இந்தியாவில் பாகிஸ்தான் பகுதியில் பிறந்தவர். பிரிவினைக்குப்பின் இந்தியா வந்தவர். இந்தியாவின் சிறந்த கவிஞர்களில் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள் என்று எழுபத்தைந்து நூல்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார். அவற்றில் பல பலமொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. பஞ்சாபின் உயரிய Punjab Rattan Awardஐ முதலாவதாகப் பெற்றவர். சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற முதல் பெண்மணியும் இவரே. 1982ல் ஞானபீடப்பரிசு பெற்றவர். பத்மஸ்ரீ பட்டத்தை 1969ல் பெற்றவர். ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர் என்று இவரைப் பற்றிச் சொல்ல ஏராளமான விசயங்கள்.

அம்ரிதா 2005ல் அவருடைய 89.வயதில் இறந்தார். கடந்த 31/8/2019ல் இவரது நூற்றாண்டு விழா. 2021ல் இவருடைய மிக முக்கியமான சுயசரிதையான இந்த நூல் பதிப்பகத்தாரிடமோ, விற்பனையாளர்களிடமோ இந்தியா முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. (எழுத்தாளர்கள் இப்போது முதலாவது பத்தியை மறுபடியும் வாசிக்கக் கடவார்களாக) Kindleல் ஆங்கிலப்பதிப்பு இல்லை. அயல்நாட்டுப் புத்தகக்குழுக்களில் கேட்டும் பயனில்லை. எண்ணற்ற போன்கால்களுக்கு முடிவு பூஜ்யம். இந்த நேரத்தில் என்னைவிட சலிக்காது இந்தியா முழுதும்தேடிய, பெங்களூரின் பழைய புத்தகக்கடை ஒன்றிற்கு போன் செய்து இருந்த ஒரே பிரதியைக் கண்டுபிடித்துச் சொன்ன அனுராதா கிருஷ்ணசாமி அன்புக்கும் நன்றிக்கும் உரியவர். இவர் இங்கே குடியேறியபின் பெங்களூரில் மழை அதிகமாகப் பெய்கிறது.

அம்ரிதாவின் அப்பா நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்காது சந்நியாசம் போனவர். இவரது அம்மா ஒருவருக்கு மணமுடிக்கப்பட்டு அவர் ராணுவத்தில் சேர்கிறேன் என்று காணாமலே போனதால் தனியாக இருந்தவர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், இந்தியாவின் சமூகச்சூழலைக் கருத்தில் கொண்டால் இது மிகப்பெரிய புரட்சித் திருமணம்.

அம்ரிதாவின் பாட்டி, இவர் சிறுமியாக இருக்கையில், வீட்டிற்கு வரும் முஸ்லீம் நண்பர்களுக்காகத் தனியாக கிளாஸ்கள் வைத்திருந்ததைப் போராடி இவர் நீக்கி இருக்கிறார். பாட்டிக்கும் பேத்திக்கும் அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்தப்பெண் பின்னாளில் ஒரு முஸ்லீம் மீது தீராக்காதல் கொள்ளப்போவது.

கவிஞர் சாஹிரைக் காதலித்தது அம்ரிதாவின் வாழ்க்கையில் முக்கிய பகுதி. திருமண பந்தத்தில் இருந்த போதே அழுத்தமான காதல். பெண்கள் ஆழ்ந்து காதலித்தால் அது வெறித்தனமான காதல். எப்போதும் சாஹிர் பெயரைப் பேப்பரில் எழுதுவது, அவர் குடித்துப் போட்ட சிகரெட் துண்டுகளை எடுத்துப் புகைபிடிப்பது, காதல் ஏற்றுக்கொள்ளப்படாத போதில் மனச்சிதைவுக்கு ஆளாவது என்று பலவிதத்தில் crazy love. சாஹிர் இவரது அழகை, நேரத்தை, காதலை எடுத்துக் கொண்ட அளவிற்கு எந்த Commitmentக்கும் தயாராக இருக்கவில்லை. இந்த நூலை விட
அம்ரிதா நினைவுகளில் இந்தக்காதல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த நூலில் இவர் நுட்பமாகச் சொல்கிறார். அம்ரிதாவின் மகன் சாஹிர் தான் என் தந்தையா என்று கேட்டதற்கு இவரது பதில்
” இல்லை…… இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்”.

இம்ரோஜ்ஜூடனான உறவு இதற்கு நேரெதிரானது. ஆரம்பத்தில் இருந்தே ஒரு Devotional love இம்ரோஜ்ஜூக்கு. இவர் சாஹிருடன் தீவிரமான காதலில் இருந்தது எந்த வகையிலும் இம்ரோஜைத் தொந்தரவு செய்யவில்லை. நாற்பது வருடங்களுக்கு மேல் அதனால் தான் சேர்ந்து வாழ்வது சாத்தியமானது. அந்த நூலில் இம்ரோஜ் அம்ரிதா குறித்து சொல்வதும், இதில் அம்ரிதா அவர் குறித்து சொல்வதும் இந்த உறவு கடைசிவரை நிலைத்ததன் காரணிகள்.

Lyrical நடையில், அங்கங்கே அம்ரிதாவின் கவிதைகளின் மொழிபெயர்ப்புடன் அமைந்த சுயசரிதை நூல் இது. இந்திராகாந்தி இந்த நூலைப் பற்றி எழுதியதுவே அநேக வாசகர்களின் கருத்தாகவும் இருக்கும் ‘” It is moving, not what it says but because of the sensitivity which comes through so vividly. It is you and yet there is something universal”. வெளிப்படைத் தன்மை மட்டுமன்றி கவிதை கலந்த மொழிநடைக்காகவும் அவசியம் படிக்கப்பட வேண்டிய நூல் இது.

“Tragedy isn’t, when fate cannot read the address of the one you love, and so your life’s letter goes undelivered.” – Amrita.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s