சின்னப்பன்றி- அகரன்:
பன்றி என்பதைத் திட்டத்தான் பெரும்பாலும் உபயோகிக்கிறோம். இந்தக் கதையில் அந்த வார்த்தை நெருக்கத்துக்கு உதவுகிறது. இது போன்ற கதைகள் வாசகர்களுக்கும் கதாபாத்திரத்தின் உணர்வுகளைக் கடத்துவதை தவிர்க்க இயலாது. தனியாக வீட்டில் இருக்கும் குழந்தையின் முகம்
தொந்தரவு செய்கிறது. எந்த அலங்காரங்களும் இல்லாமல் இயல்பாக விரையும் கதை.
இரண்டு பெண்கள் – கலா மோகன்:
கலாமோகனின் வழக்கமான பாரிஸூக்குப் புலம்பெயர்ந்த இலங்கைவாசியும், காமத்திற்கு அலைவதுமான Template இந்தக் கதையிலும் வருகிறது. ஆனால் இந்தக் கதையில் வருபவன் இளைஞன், நல்ல வேளையாக சந்திக்கும் எல்லாப் பெண்களிடமும் அவன் கலவி நடத்துவதில்லை. Sex toys பற்றிய விவரணைகள் தமிழில் புதிது. மொத்தக் கதையுமே அதைச்சுற்றியே நகர்கிறது. முடிவில் என்ன லாஜிக்? டிவிஸ்ட்டுக்காக வலிய ஏற்படுத்திக் கொண்டதா?
பாரம்- சப்னாஸ் ஹாசிம்:
வருந்திப் பாரம் சுமப்பவர் பற்றிய கதை. முதலில் எனக்கு இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்களை முஸ்லீம்கள் என்றும் மற்றவர்களை தமிழர்கள் என்றும் ஏன் பிரிக்கிறார்கள் என்பது புரியவில்லை. பின்னரே தமிழ்நாட்டில் கூட பத்து தலைமுறைகளாய் தமிழ் பேசுபவர்களை முஸ்லீம் என்றும், பத்து தலைமுறைகளாய் தெலுங்கு பேசுபவர்களை தமிழர் என்றும் பிரிக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது.
நமக்கு வெகுவாகப் பழக்கப்பட்ட கதைக்கரு ஆனால் சிறுவனின் பார்வையில், உம்மாவின் சீண்டல் முதலியவற்றை அழுத்தமாகவும், அரசியல் பின்னணியை மெல்லிய தொனியிலும் சொல்வதால் இது வித்தியாசமான கதையாகி இருக்கிறது.
கர்ப்பம்- நொயல் நடேசன்:
கதைகளில் Associative memory வரும் கதைகளுக்கு ஒரு வசீகரம் உண்டு. இதில் தொடர்பில்லாத இரண்டு விசயங்கள் என்று சொல்வதற்கில்லை, இரண்டிலும் கைகூடாத கர்ப்பம். Yugoslavia துண்டாடப்பட்டதன் பின் ஒரு காதல்கதையும், சபலபுத்தியையும், nosy குணத்தையும் மறைக்கப் பாடுபடும் மிருகவைத்தியரும் இந்தக் கதையின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
அகாலம் – விஜய ராவணன் :
Fahrenheit 451 போல ஒரு எதிர்கால அரசாங்கத்தில் வரலாற்றை, கடந்தகாலத்தை நினைவு கூறும் எல்லாவற்றையும், புகைப்படங்கள் உட்பட எல்லாவற்றையும் தடைசெய்கிறார்கள். ஆனால் மனித மனம் கடந்தகாலத்தில் இருந்து வெளிவர விரும்புவதில்லை. அதிலும் கதைசொல்லியின் சிறுவயது வாழ்க்கையும் அம்மாவின் நினைவுகளும் அவனைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன. வெகு இயல்பான மொழியில் சொல்லப்பட்ட கதை.