தலையங்கம் ‘கனவுகளின் கலைஞன்’ இலக்கியம் ஒன்றே உயிர்மூச்சு என்று ப்ரகாஷ் வாழ்ந்ததையும், இருக்கும் போது அவருக்குப் போதுமான இலக்கிய அங்கீகாரம் கிடைக்காததையும் சொல்கிறது.
கற்பிதங்கள் ஒருபோதும் கலையாகாது – சி.எம்.முத்து:
இன்றைய தலைமுறையில் பலரும் கேள்விப்பட்டிராத இவருடைய P.K.Books பதிப்பகம் வெளியிட்ட, கன்னிமை, கடைத்தெருக்கதைகள், சிறகுகள் முறியும் போன்ற நூல்கள் இன்றும் பேசப்படுகின்றன. முப்பதுவருட நெருங்கிய பழக்கத்தின் நினைவுகளைப் பகிர்கிறார் சி.எம்.முத்து.
வாசித்துத் தீராத புத்தகம் – தஞ்சாவூர் கவிராயர்:
ப்ரகாஷ் ஒரு இலக்கிய இயக்கமாய் இயங்கியதைச் சொல்லும் கட்டுரை.
மிஷன் தெரு- பாலாஜி இனியன்:
நாவல் வாசிப்பனுபவம்.
இராவண சீதை – சிறுகதை- தஞ்சை ப்ரகாஷ்:
சீசர் சொன்னது இது. “My wife ought not even to be under suspicion.” ராமனும் கூட இதையே தான் சொன்னான். இந்தக் கதைக்களமே
இராவணன் போரில் தோற்று, சுயபச்சாதாபத்தில் ஆழ்ந்து, நாளை மரணம் என்று தெரிந்திருக்கும் போது, சீதாவைச் சந்திப்பது. அவன் இந்த செய்தி அவளுக்கு மகிழ்வைத் தரும் என்று நினைக்கையிலேயே தான் தெரிகிறது அவளும் தன்னிரக்கத்திற்கு ஆட்பட்டிருப்பது. இராவணனைக் கொன்றழிக்கலாம் ஆனால் சீதாவை நினைக்கையில் இவன் நினைவு வருவதை யாராலும் அழிக்கமுடியாது.
வென்றிலன் என்ற போதும், வேதம் உள்ளளவும், யானும் நின்றுளென் என்பான் கம்பன். அவன் ராமனை மையமாக வைத்து சொன்னதை, சீதையை மையமாக வைத்து ப்ரகாஷ் எழுதிய கதை இது.
தஞ்சை ப்ரகாஷ் எழுதிய பெண் வாழ்வு- கிருஷ்ண ப்ரியா:
ப்ரகாஷ் தன் கண்ணெதிரே உலவிய பெண்களைக் கூர்ந்து கவனித்து, அவர்களின் அகவுலகின் நிஜங்களை, கொதிப்புகளை, வக்கிரங்களை, விருப்பங்களை, மீறல்களை, வலிகளை தன் புனைவுகளில் யதார்த்தமாக வடித்திருக்கிறார் என்கிறார் கிருஷ்ண ப்ரியா, ப்ரகாஷ் கதைகளில் பெண்கள் என்ற கட்டுரையில்.
நிலம் மணக்கும் உடல்களுக்கு மீன்களின் சாயல்- தமிழ் இலக்கியா:
மீனின் சிறகுகள் நாவல் விமர்சனம். என்னைப் பொறுத்தவரையில் ப்ரகாஷின் மற்ற நாவல்களில் உள்ள அழகியல் இதில் இல்லை என்பது என் கருத்து.
தஞ்சை ப்ரகாஷ் காட்டிய வண்ணங்கள்- நா.விச்வநாதன்:
ப்ரகாஷின் நான்கு நாவல்களையும் தொட்டுச் செல்லும் கட்டுரை.
” ஞானத்தைக் கண்டடைய நேரும் பயணம் சுவாரசியமானது. இதில் பொதிந்திருப்பது வாழ்க்கை- அது குரூரமானாலும் நேசத்துக்குரியது தான்” – நா.விச்வநாதன்
டிராய் நகரம் – நந்தி ஆ.செல்லத்துரை:
ஐம்பதாண்டு காலம் கையெழுத்துப் பிரதியாய் இருந்த நாவல் அச்சில் உள்ளது.
காதலிக்குக் காத்திருக்கும் அனுபவம் போன்ற உணர்வு மேலிடுகிறது.
கரமுண்டார் வீடு- இரா.விஜயன்:
எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று. A real masterpiece. நாவல் விமர்சனம் இந்தக் கட்டுரை.
தஞ்சாவூருக்குள் தஞ்சை ப்ரகாஷின் புனைவுலகப் பயணங்கள் – வீ.அரசு:
ப்ரகாஷின் நான்கு நாவல்கள் குறித்த வாசிப்பனுபவத்தைச் சொல்லும் கட்டுரை.
சிறப்பாக வந்துள்ளது தஞ்சை ப்ரகாஷ் சிறப்பிதழ். ப்ரகாஷை இதுவரை படிக்காத வாகர்களுக்கு ஒரு கையேடாக இருக்கும் இந்த சிறிய நூல் பாதுகாத்து வைக்க வேண்டியது. சீர் ஆசிரியர் குழுவிற்கு என் அன்பும், பாராட்டுகளும்.