மிலன் குந்தெரா செக்கோஸ்லாவாக்கியாவைச் சேர்ந்தவர். பிரான்ஸ்க்குப் புலம் பெயர்ந்தவர். செஃக் மொழியில் மட்டுமல்லாது கடைசி இரண்டு நாவல்களை பிரஞ்சு மொழியில் எழுதியவர்.
எண்பதுகளில் வடஅமெரிக்காவில் இவரது அலைகள் வீசியபோது பிரான்ஸில் மட்டுமன்றி ஐரோப்பா முழுவதிலும் தெரிந்த எழுத்தாளராக ஆகிவிட்டார். இதுவரை வெளியான இவருடைய நாவல்களில் கடைசியாக வெளிவந்த நாவல் இது.
குந்தெரா இசை, திரைப்படம், கலை, வரலாறு முதலிய துறைகளிலும் ஆர்வமுடையவர். இவர் எழுதிய அல்புனைவுகளில் நாவல் கலை (The Art of the Novel) இன்றளவிலும் பேசப்படுகிறது.
குந்தெரா புனைவுகளை உருவாக்குவது கேள்விகள் கேட்கத்தான் என்று சொல்வது போல், இவரது நாவல்களில் நாவலாசிரியர், கதாபாத்திரங்கள், வாசகர்கள் எல்லோருமே பல கேள்விகளை கேட்க வேண்டியிருக்கும்.
இவரது The Joke நாவலில் நான்கு கதைசொல்லிகள் கதையின் வெவ்வேறு கோணத்தை அலசுவார்கள்.
ஐந்து நண்பர்கள் பாரிஸில் Coldwar சமயத்தில் ஒரு மதுவிருந்தில் கலந்து கொள்வதே நாவல். கதாபாத்திரங்களையும், கதைக்கருவையும் காதல், காமம், சர்வாதிகாரம் முதலியவற்றை விளக்க உபயோகிக்கும் நாவல், அபத்தத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடையில் பயணிக்கிறது.
அறிவுத்தளத்தில் ஆனால் தத்துவத்தைத் தொடாது, மிக வித்தியாசமான ஆனால் எளிமையான நாவல்.
சிறுவயதிலேயே அம்மா விட்டுவிட்டுப் போன ஒருவன், ஏன் என்ற கேள்வியை தூக்கி சுமப்பதும், அவள் குறித்து பல கற்பனைகள் செய்து கொள்வதும் (குறிப்பாக அவள் தற்கொலை செய்ய நினைத்துக் கொலை செய்யும் காட்சி மற்றும் அவன் எப்படி அவள் வயிற்றில் கருவுற்றான் போன்ற காட்சிகள்), அவளுடன் பகல்கனவு போன்ற தொடர்ந்த உரையாடலும் குந்தெராவின் signature touches.
புத்திசாலியான அல்லது புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளும் ஒருவன், ஒரு பெண்ணைக் கவர நினைக்கையில் அவள் ஒரு போட்டியில் கலந்து கொள்வதாக நினைத்து, தனது புத்திசாலித்தனத்தையும் அதில் காட்ட நினைக்கையில் அவளை நெருங்குவதற்கு அவனுக்குத் தடைகள் ஏற்படுகின்றன. சாதாரணமான ஒருவனிடம் அவள் எச்சரிக்கை சங்கிலி தளர்கிறது. அதனால் அவன் அவளை நெருங்குவது எளிதாகிறது.
இன்னொரு வகையில் இதைப்பார்த்தால், Grad என்றால் ருஷ்ய மொழியில் City. Leningrad, Stalingrad, Karl-Marx- Stadt எல்லாமே பின்னர் பழைய பெயர்களுக்கு மாறிவிட்டன.
ஆனால் ஸ்டாலின் காலத்தில் பெயர்வைக்கப்பட்ட Kaliningrad இன்று வரை அதே பெயருடன் இருக்கிறது. ருஷ்யாவில் எத்தனையோ மாற்றம் நிகழ்ந்தும் இந்தப் பெயர் மாறவில்லை. ஏனென்றால், Kalininன் பெயர் ருஷ்ய வரலாற்றில் முன்கூறியவர்களின் பெயர்போல் Significance இல்லை.
ஸ்டாலின் நாவலின் இடையே பல இடத்தில் கற்பனைக் கதாபாத்திரமாக வருகிறார். ஸ்டாலின் சொல்லும் கதை ஒன்றில் துளி லாஜிக் இல்லையென்றாலும் அதை நேரில் சொல்ல தைரியமில்லாது கழிவறையில் கூட்டம் கூடி அது பொய் என்கிறார்கள். பாரிஸில் இருக்கும் இளைஞர்கள் பற்றியகதையில் ஸ்டாலின் அடிக்கடி வருவது அப்போதைய காலகட்டத்தில் ஐரோப்பாவின் தவிர்க்க முடியாத சக்தியாக அவர் இருந்ததன் குறியீடு.
காமமும், பாலியலும் குந்தெராவின் எல்லாக் கதைகளிலும் விரவி இருக்கும். இந்த நாவலும் ஆரம்பிப்பதே ஒரு ஆண் பெண்ணுடலை உற்று நோக்கி அவளது எந்த பாகம் அதிக உணர்வைத் தூண்டுகிறது என்ற சிந்தனையினூடே தொப்புளின் பங்கு என்ன என்ற ஆராய்ச்சியை நடத்துகிறது.
பல பெண்ணிய விமர்சகர்கள் குந்தெராவின் நாவல்களில் ஒரு பெண் விரோதப்போக்கு நிலவுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் இவரது Ignorance போல Strong woman character பல கதைகளில் வந்திருக்கின்றது. இன்னொரு விசயம் என்னவென்றால் 1929ல் பிறந்த ஒரு ஐரோப்பிய ஆணின் மனநிலையில் இருந்து குந்தெராவும் அதிகம் தப்பித்திருக்க இயலாது.
குந்தெராவின் அரசியல் நிலைப்பாடு எப்போதுமே சர்ச்சைக்குரியது. இந்த நாவலை எழுதுகையில் அவருக்கு எண்பத்தைந்து வயது முடிந்துவிட்டது. Apologizer என்று முன்னர் எழுதிய சிறுகதையின் நீட்சியே இந்த நாவல். அதிகம் பேசப்படாத குந்தெராவின் நாவல் இது. குந்தெராவின் தவறவிடக்கூடாத படைப்புகள், The Unbearable Lightness Of Being, Immortality மற்றும் The Book of Laughter and Forgetting. இந்த மூன்று நூல்களும் குந்தெராவின் இலக்கிய அந்தஸ்திற்கு பலமாக இடப்பட்ட அஸ்திவாரம்.