Hiroko 1983ல் ஜப்பானில் பிறந்தவர். ஜப்பானிய இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். Franz Kafka மற்றும் Mario Vargas Llosa ஆகியோரை தன் இலக்கிய உத்வேகங்கள் என்று சொல்லும் இவரது சிறுகதைத் தொகுப்பு மற்றும் இவருடைய பணியாற்றிய அனுபவங்களை வைத்து எழுதிய Factory என்ற நாவல் இரண்டுமே பலத்த வரவேற்பைப் பெற்றன. இந்த இரண்டாவது நாவல் ஜப்பானின் புகழ்மிக்க விருதான அகுதாகவா விருதைப் பெற்றது.
David Carolina பல்கலையில் ஜப்பானிய மொழியைக் கற்பிக்கும் உதவிப் பேராசிரியர். Hirokoவின் முந்தைய நாவல் மட்டுமல்லாது Kawakami உட்பட வேறு பல ஆசிரியர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
தற்போதைய நாவல்கள் ஜப்பானின் தொழிற்சாலை/அலுவலகங்களில் இந்திய தனியார்துறை கலாச்சாரம் உள்புகுந்ததைச் சொல்கின்றன. நிரந்தரப் பணியாளர்களுக்கு உரிய ஊதியம், ஊக்கத் தொகை கொடுத்துவிட்டு தற்காலிகப் பணியாளர்களைச் சுரண்டுவது மற்றும் ஒரு வர்க்கபேதம் நிரந்தர தற்காலிகப் பணியாளர்கள் இடையே நிலவுவது என்று பல விசயங்கள் இந்தியாவைப் போலவே.
ஜப்பானில் இளம் வயதினருக்கு வேலை கிடைப்பது போல் இப்போது முப்பது வயதைத் தொடுபவர்களுக்குக் கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் கணவனுக்கு அவன் சொந்த ஊருக்கே (நகரமும் இல்லை கிராமமும் இல்லை) மாறுதல் கிடைக்க, தான் பார்த்துக்கொண்டிருந்த தற்காலிக வேலையை விட்டு அவனுடன் சென்ற பெண்ணைச் சுற்றி நகரும் கதை இது.
பெண் என்றால் இன்னாரின் மனைவி அல்லது மருமகள் மட்டுமா? சமுதாயம் அவளுக்காகக் கச்சிதமாகத் தோண்டிய குழியில் அவள் விழுந்து விடுகிறாளா? குடும்ப வாழ்க்கையில் ஆண் என்பவன் எப்போதும் பெறுபவன், பெண் வழங்கிக் கொண்டே இருப்பவளா? ஜப்பானில் குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு சுமை என்ற எண்ணம் வளர்கிறதா? பெண்கள் வேலையில்லை என்றால் தான் குடும்பத்திற்கு சுமை என்று நினைக்கிறார்களா? இது போல் எல்லாக் கேள்விகளும் இந்த நாவலில் நேரடியாகக் கேட்கப்படுவதேயில்லை. வாசகர்கள் நாவலை முடிக்கையில் இது போன்று நிறைய கேள்விகள் வரும்.
காஃப்கா முரகாமி போல் கதை எழுதினால் எப்படி இருக்குமோ அது போல் இருக்கிறது
Hirokoவின் மொழிநடை. சர்ரியல் காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் எது நிஜம் எது சர்ரியல் என்று தெரியாதவகையில் கலந்திருக்கின்றன. நாவலில் எந்த விளக்கமும் Hiroko கொடுப்பதில்லை, வாசகர்களே விஸ்தரித்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கதைசொல்லியை அந்த ஊரில் எல்லோருமே மணப்பெண் (Bride).என்கிறார்கள். மணம் ஆகி பலவருடம் ஆன பெண்ணை எதற்கு மணப்பெண் என்று சொல்ல வேண்டும்? ஏனென்றால் அவளது பெயர் முக்கியமில்லை, அவள் இன்னார் வீட்டு மருமகள் என்று அறிந்தால் போதுமானது. Kawabata காண்பித்த ஜப்பானிய சமூகம் வேறு, முரகாமியுடையது வேறு, Hirokoவின் சமூகம் வேறு, முழுக்க பெண்ணின் பார்வையில் பார்க்கப்படும் சமூகம்.
நூறு பக்கங்களுக்கும் குறைவான நாவலை இவ்வளவு அழுத்தமாக எழுதமுடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் Hiroko.
David மூல ஆசிரியரின் உதவியுடன் மொழிபெயர்த்ததாகக் கூறிஇருந்தாலும் உண்மையில் இது ஒரு Wonderful translation. எல்லோருக்குமான நாவல் அல்ல இது.
Hole என்ற Title கூட Metaphor. கடைசி அத்தியாயம் பலருக்குக் கூடுதல் புரிதல்களை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு பெண்ணும் கடைசியில் அவளுடைய முந்தைய தலைமுறைப் பெண்ணின் நீட்சியாக முடிகிறாள், இந்தியா இல்லை ஜப்பான் என்பது ஒரு வசதிக்காகச் சொல்லிக் கொள்வது.