சஞ்சீவ்வின் தந்தைவழி தாத்தா, பாட்டி அறுபதுகளில் பஞ்சாபிலிருந்து பிரிட்டனுக்குப் புலம் பெயர்ந்தனர். மூன்று தலைமுறைகளாக அங்கே இருக்கும் இவர்
Jhumba Lahiriஐப் போல் பெயரளவில் மட்டுமே இந்தியர். இவருடைய The Year of Run aways என்ற மற்றொரு நூல் தவறவிடக்கூடாத நூல். அது புக்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது. இந்த நாவலின் மூலம்
புக்கரின் நீண்ட பட்டியலுக்கு இரண்டாம் முறையாக இடம்பெறுகிறார்.
Year of Run awaysல் புலம்பெயர்ந்தவர்களின் அனுபவங்களைப் பேசியவர் இந்த நாவலில் தன் கொள்ளுப்பாட்டியின் கதையைச் சொல்கிறார். கதை 1920களில் நடக்கிறது.Meharக்கு ஐந்து வயதாகையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பதினோரு வயதில் அவளைப் பார்க்கவரும் மாமியார் இவள் மாரைக்கிள்ளிப் பார்த்து, துணியை வைத்து வெளியே தெரியாமல் மறைக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கிறாள். பதினைந்து வயதில் புகுந்தவீடு செல்பவளுக்கு, இவள் வயதை ஒட்டிய இரண்டு மருமகள்கள் புதிய சகோதரிகள் ஆகிறார்கள். மூன்று மகன்களுக்கும் தன் மனைவி யார் என்று தெரியும், ஆனால் எப்போதும் தரையைப் பார்த்து நடப்பதால் மருமகள்கள் மூவருக்கும் யார் தன் கணவன் என்று தெரியாது. ஒருவனே தான் இரவில் மீண்டும் வருகிறானா என்பதும் தெரியாது. இது Meharன் கதை. Mehar காற்று. யார் தான் கட்டுப்படுத்தமுடியும்? இல்லை அவள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் காகிதத்துண்டா!
கலவியின் போது பெண்கள் எதிர்வினை செய்வது கேவலமானது என்ற நம்பிக்கையில் எத்தனை இந்திய பெண்கள் வாழ்ந்து முடித்திருக்கக்கூடும்! ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் வரை Emotional attachment மனைவியிடம் வைத்துக் கொண்டால், பின்னர் அவளை விலக்கிவைத்து வேறு பெண்ணை மணம் முடிப்பது கடினம் என்று எத்தனை மகன்களுக்கு அவர்களது தாயார்கள் சொல்லிக் கொடுத்திருக்கக்கூடும்!
சஞ்சீவ் நாவலின் இடையில் தன்மையில் கதை சொல்கையில் இது அவர்கள் குடும்பக்கதையில் இப்படி நடந்திருந்தால் என்ற புனைவு கலந்திருப்பது தெரிகிறது. அவரது அப்பாவுக்கு காலில் அறுவை சிகிச்சை, போதை மருந்துக்கு பதினெட்டு வயது வரை அடிமையாக இருந்தது எல்லாம் சுயசரிதைக்கூறுகள். பதினெட்டு வரை ஒரு நாவல் கூடப் படிக்காத சஞ்சீவ், விமான நிலையத்தில் தற்செயலாக வாங்கிய Midnights Children தொடர்ந்து நாவல் படிக்கவும், எழுதவும் காரணமாக அமைந்தது.
இருபதுகளின் பஞ்சாப் குழப்பமான நிலையில் இருக்கிறது. ஒரு புறம் பஞ்சமும், விளைச்சலின் மேலான ஆங்கிலேயரின் சுரண்டலும், மற்றொரு புறம் சுதந்திரப் போராட்டம், இன்னொரு புறம் இந்துக்களும் சீக்கியர்களும் முஸ்லீம்களுக்கு எதிராகக் கலவரங்களில் ஈடுபடுவது. இத்தனைக்கும் நடுவில் ஒரு காதலும் பூக்கிறது. அது தான் இந்தக் கதைக்கு வித்தாக அமைகிறது.