ஆசிரியர் குறிப்பு :

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். களப்பணியாளர், பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். இவருடைய முதல் நாவலான சோளகர் தொட்டி 2004ல்
வெளியானது. பெருங்காற்று என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது நாவலாகும்.

மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்த சோளகர் தொட்டி நாவலை அடுத்து முதல் உலகப்போரில் இந்திய வீரர்கள் பிரிட்டனுக்காக, எந்த குறிக்கோளுமின்றி, பல நாடுகளில் போர்புரிந்து மரணித்த கதையை சொல்கிறார். At Night All Blood is Black என்ற David Diopன் நாவலும் இதே கதைக்களம் தான். இந்த வருட புக்கர் இன்டர்னேஷனல் விருதை வென்ற நாவல்.
கறுப்பினத்தவர் முதல் உலகப்போரில் பிரான்ஸூக்கு ஆதரவாகப் போரிட வலுக்கட்டாயமாகக் கூட்டிச் செல்லப்பட்டுப் போர்முனையில் முன்னே நிற்க வைக்கப்படுகிறார்கள். இதில் இந்தியர்கள். அப்போரில் பங்கு பெற்ற இவரது தாத்தா ஓய்வூதியத்திற்காக எழுதிய கடிதங்களிலிருந்து தகவல்கள், அரசு ஆவணங்களிலிருந்து செய்திகள், ஆய்வாளர்களின் குறிப்புகள் முதலியவற்றில் இருந்து இந்த நாவல் உருவாகி இருக்கிறது.

டைகரிஸ் (Tigris) நதிக்கரையில் நடந்த போர் காட்சிகளுடன் நாவல் தொடங்குகிறது. உயிரிழந்தவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் குற்றுயிரும் குலையுயிருமாக உயிர் பிழைத்தோருக்கு மருத்துவசிகிச்சைக்கு உரிய சாதனங்கள், மருந்துகள், போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் எப்போதும் இருப்பதில்லை. போர்முனையில் சேவை செய்யும் மருத்துவர்கள் (David Nottன் War Doctor படித்துப் பாருங்கள்) உண்மையில் நடமாடும் தெய்வங்கள். பல இந்தியப் போர்வீரர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு தேசபக்தியை நிரூபிக்க உயிரைவிடத் தயார் என்று நாவலில் வரும் வரிகள் முக்கியமானவை. பெருவாரியான இந்தியப் போர்வீரர்களிடம் இந்த Misplaced loyalty அன்று இருந்தது.

எம்டன் சென்னையில் குண்டு வீசுகிறது. பஞ்சத்தில் மூன்றுவேளை சாப்பாட்டிற்கு மக்கள் உயிருக்கு ஆபத்தான பணியை விரும்பி ஏற்கிறார்கள்.பஸ்ரா துறைமுகம் நெருக்கடிகள் நிறைந்தது. இந்திய வீரர்களும் பட்டினி பொறுக்கமுடியாது குதிரை, கழுதை முதலியவற்றின் கறிகளைச் சாப்பிடப் பழகிக் கொள்ளுதல் என்பது போல் Period details ஏராளம்.

தமிழின் வெகுசில அசல் Historical Fictionல் இதுவும் ஒன்று. வரலாற்று நாவல்களிலும் முழுக்கவே போர் குறித்த நாவல்கள் தமிழில் வந்திருப்பதாக என்னளவில் தெரியவில்லை. புயலிலே ஒரு தோணி போன்ற நூல்களில் போர் ஒரு பகுதி. பாக்தாத் தெருக்களில் சாணம் இறைந்து கிடந்தது, பெரும்பாலான வீடுகள் காரைப்பூச்சு இழந்து செங்கல்கள் துருத்திக் கொண்டிருந்தன என்பது போல் நூற்றுக்கணக்கான நுணுக்கமான தகவல்களை எங்கு எடுத்திருக்கக்கூடும் என்று தெரியவில்லை. எதுவானாலும் இது வரலாற்றைச் சுற்றிப் பின்னப்பட்ட புனைவு.
பசி, பஞ்சம், தொடர் தோல்விகள் படையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரில் இருந்து கீழ்நிலை படைவீரன் வரை மனஉறுதியைக் குலைத்து மனநிலை பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற நிதர்சனங்களையும் நாவல் விவரிக்கிறது.

மெசபடோமியாவில் நடந்த நான்கு வருடப் போரே, இந்த நாவலின் பின்னணி. போரின் கொடூரங்கள் எத்தனை நூல்களில் படித்தாலும் மனதில் நிம்மதி இழக்கச் செய்பவை. இந்த நாவலிலும் தாகத்திற்கு தண்ணீர் இறைக்க, வாளியில் குழந்தையின் வெட்டப்பட்ட தலை வருகிறது, கிணற்றின் உள்ளே ஏராளமான பெண்களின் பிணங்கள். அவரவர் விடுதலைக்குப் போராடும் அல்லல்கள் வேறு, சம்பந்தமேயில்லாத இரு நாடுகள் போரிட்டு அந்த ஊரையும், மக்களையும் அழிப்பது வேறு. இதுபோல் பல போர்க்குற்றங்கள் நாவல் நெடுகிலும்.

National Archieve போல பிரமாண்டமான தகவல் சுரங்கம் எதுவும் இந்தியாவில் கிடையாது. சொல்லப்போனால் கடந்த எண்ணூறு வருட சரித்திரத்திற்கே முழுமையான, முறையான ஆவணங்கள் கிடையாது. இந்த சூழ்நிலையில் இது போன்ற நாவலை எழுதுவது கடினம். நாவலின் பெரும்பகுதி அல்புனைவு போல் இருப்பதும் இன்றைய உலக இலக்கியத்தில் நாம் காணும் ஒரு விசயமே. கல்யாண், வில்லியம்ஸ் போன்றோரை வழக்கமான தமிழ்நாவல்களில் Glorify செய்வது போன்ற சிறுசிறுகுறைகள் எளிதில் கடந்துவிடக்கூடியவை. இது போன்ற பல நூல்கள் தமிழுக்குக் கிடைக்கவேண்டும், அவை பரவலாக வாசிக்கப்பட்டு பேசப்பட வேண்டும். நூலை மிக அழகாக வடிவமைத்த எதிர்வெளியீட்டுக்குப் பாராட்டுகள்.

நாவல்கள்

பிரதிக்கு:

எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ. 550.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s