ஆசிரியர் குறிப்பு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். முதுகலைப் பட்டதாரி. சினிமாவில் துணை இயக்குனராகப் பணிபுரிகிறார். இவரது சிறுகதைகள், சினிமா குறித்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவரது முதல் நாவல் இது.
திருச்செங்கோடு என்ற உடன் நினைவில் வருவது, நான் பணிபுரிந்த வங்கி குறிப்பிட்ட ஜாதிப்பெரும்பான்மை கொண்டிருந்தாலும், அந்த ஜாதியில் உள்ள மேலாளர்கள் யாரையுமே அந்தக்கிளைக்கு அமர்த்த மாட்டார்கள். வேறுகாரணங்களுக்காகப் பகலில் திருச்செங்கோடு வரும் அப்பிரிவினர் சூரியன் மறைவதற்குள் திருச்செங்கோடை விட்டு மறைந்து விடுவார்கள். இன்றும் தொடரும் நம்பிக்கையிது.
இரு சிறு பெண்களின் நட்புக்கிடையே சாதீயம் குறுக்கே புகுவது நாவலின் கதை. எதிர்பாலினத்தவரின் நட்புக்கு இன்றும் கூட சமூகஎதிர்ப்பு பரவலாக இருப்பது போல் ஒரேபாலின நட்பை எதிர்க்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. திரைக்கதையாக எழுதி பேரிடர்காலத்தில் திரைப்படம் எடுக்க முடியாது நாவலாக எழுதியதாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். தமிழ் திரைக்கதைக்கேயுரிய நிதர்சனத்தை விட்டு விலகிய தன்மை நாவலிலும் தெரிகிறது.
அணங்கு மிக நல்ல, பொருத்தமான தலைப்பு. நாவலில் கடந்த காலமும் நிகழ்காலமும் மாறிமாறி வந்து போவது நல்ல யுத்தி. உரையாடல்கள் மூலம் சமூக மற்றும் தனிப்பட்ட கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை வாசகர் புரிந்து கொள்ளும்படி அமைத்திருப்பது நன்று.
ஆனால் சம்பவங்கள் நாவல் என்ன சொல்ல விரும்புகிறதோ அதற்குரிய பாதிவலுவைக்கூட ஏந்தியிருக்கவில்லை. அது போல முழுக்கவே ஒரு இனம் முழுநல்லவர்களாகவும் மற்றொரு இனம் முழுக்கவே கெட்டவர்களாகவும் சித்தரிப்பது நாம் நாற்பதுகளில், ஐம்பதுகளில் நாவல்களில் எழுதியது.
அருண்பாண்டியனின் முதல் நாவல் இது. இவர் கடக்க வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. நாவல் எழுதுவதை விட அதிக நேரம் எடிட்டிங்கில் செலவு செய்ய வேண்டும்.
செய்திருந்தால் நாவலின் ஆரம்பத்தில் இருக்கும் அதே வேகத்தை அப்படியே கடைசிவரை கையாண்டிருக்கமுடியும். எனினும் இந்த நாவல் ஒரு நல்ல முயற்சி.
நாவல்கள்
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.180.