அகவெளி வண்ணங்கள் – சாரோன்:
அகவெளி வண்ணங்கள் ஒரே கதாபாத்திரத்தையும், அவனுக்குப் பாதிப்பு அதிகம் ஏற்படுத்திய இரண்டு பெண்களையும் பற்றியது. பொழுது போக்காக அவன் இரவுநேரக் காவலாளி வேலையைத் தற்காலிகமாக செய்தாலும், முழுநேரப்பணியாக சிறுவயதில் இருந்தே ஒன்றைத் தொடர்ந்து செய்து “காலமெல்லாம் உந்தன் காதலில் இளைத்தேனே” என்று பாடாமல் இளைக்கிறான். இடையே பல ஓவியங்கள் வரைகிறான். பள்ளியில் படிக்கையில் நிர்வாண ஓவியங்கள் வரைவது நிச்சயம் மனநலப்பாதிப்பின் அறிகுறி. அப்பாவின் வழியை மகன் பின்பற்றுவது, இலங்கை வெடிகுண்டு வெடிப்பில் வேண்டியவர் இறப்பது என்று பலவிசயங்கள் வந்து எதுவும் மனதில் நிற்காது போகின்றன. சிறிய மாற்றங்கள் மற்றும் நீளத்தைக் குறைத்திருந்தால் நல்ல கதையாகி இருக்கும்.
தாதி- பத்மா சச்தேவ்- தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:
மனைவி உயரமாக இருந்தால் வயது கூடியவளாக இருந்தால் இந்திய ஆணுக்குத் தாழ்வு மனப்பான்மை வருவது பொதுவான விசயம். மேலைநாட்டில் இது சகஜம். விதிவிலக்காக சிலர் சச்சின் ஐந்து வயது கூடிய பெண், Saif பன்னிரண்டு வயது கூடிய அம்ருதாவை மணம் செய்தது போல் செய்திருக்கிறார்கள். சிறுவயதில் அவமானமாக நினைத்த ஒன்று பின்னர் குற்ற உணர்வாக ஒருவருக்கு மாறுவதும், மற்றொருவர் மூன்றாம் நபராக ஒரு விசயத்தைப் பார்க்கையில் Empathize செய்வதையும் கதை சொல்கிறது. ஆனால் நூர் போல எத்தனைபேர் வாழ்ந்து மடிந்திருப்பார்கள். சொல்லிய விதம் நன்றாக உள்ளது. மொழிபெயர்ப்பும், கதைத் தேர்வும் மிகஅருமை அனுராதா.
செம்மொழிப் பாதுகம் – நாஞ்சில்நாடன்:
இனி எந்த விருதும் தரமாட்டார்கள் என்று நாஞ்சில்நாடனுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது போலிருக்கிறது. கிரிக்கெட்டில் அவுட் ஆவதற்குக் கவலைப்படாத பேட்ஸ்மென் போல இறங்கி அடித்து ஆடுகிறார். இந்தக் கதையை யாரேனும் நிஜமாக ஆக்காமல் இருந்தால் சரி. நகைச்சுவைக்கு யாருமே தப்பிக்கவில்லை. ஒன்றிய அரசு என்ற வார்த்தையை உபயோகிப்பது போல் பல இடங்களில் வார்த்தையின் உபயோகத்தை மாற்றியதே நகைச்சுவையைக் கூட்டுகிறது.
கும்பமுனியையும் தவசுப்பிள்ளையையும் யாரும் ஒன்றும் செய்வதற்கில்லை.
பார்வோ 30 – ஆர்த்தி சிவா:
Sci fi கதைகள் என்றால் முழுதும் கற்பனைக் குதிரையை ஓட்டுவது என்று நம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. ஒன்றும் செய்வதற்கில்லை.
கற்றல் கற்பித்தல் – எஸ்.சங்கரநாராயணன்:
எல்லோரும் கடந்து வந்த பாதை இந்தக்கதை. குழந்தைகள் வளர்வதை அணுஅணுவாகப் பார்த்து அனுபவிக்காது போனவர்கள் அபாக்கியசாலிகள். அவர்கள் முழுவதும் நம்மைச் சார்ந்து இருந்த காலம் மனதில் உறைந்து விடுகிறது. வளர்ந்து பின்னால் வெளிநாடுகளில் வசிக்கப் போனாலும், இந்த நினைவுகள் நம்மை விட்டு போவதில்லை. குட்டி தவழ்வதும் வளர்வதும் அழகாகக் கதையாக்கி இருக்கிறார் சங்கரநாராயணன். குழந்தை பெற்ற பெண்ணின் தராசு கணவனை விட்டுக் குழந்தையின் பக்கம் சாய்வதும் நடுவில் வந்து போகிறது.
தலைப்பில்லாதவை- யுவன் சந்திரசேகர்:
சிறுகதைகளை சிறுகதைகள் என்றே சொல்லலாம். பக்கம் குறைந்ததற்காக அதனைப் போய் பாவம் குறுங்கதை என்று புது நாமகர்ணம் சூட்ட வேண்டியதில்லை.
கதை 16ல் ஒரு குற்றம் நடக்கப்போவதைக் கண்டும் காணாது நடக்கும் ஒரு சராசரி மண்ணின் மைந்தன்.
கதை 17ல் காலச்சக்கரம் சுழல்கையில் மேலிருந்தோர் கீழே கீழிருந்தோர் மேலே போகிறார்கள்.
கதை 18 – ஏழைவீட்டில் முதிர்கன்னியைப் பார்க்க சாக்குச் சொல்லி வருவதும் பெற்றோர் அனுமதிப்பதும்.
கதை 19.மற்றும் 20.பற்றி சொல்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை.
ஒரு எழுத்தாளர் என்பவர் எல்லா வடிவத்திலும் எழுதியாக வேண்டும் என்று கட்டாயமில்லை. புதுமைப்பித்தன் நாவல் எழுதவில்லை, அம்பை, வண்ணதாசன் எழுதவில்லை. அதனால் என்னவாகிவிட்டது?.