ஆசிரியர் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். யாவரும் பதிப்பகம், B4 books போன்றவற்றின் மூலம் தொடர் இலக்கியத் தொடர்பில் இருப்பவர். திறமை வாய்ந்த புதிய தலைமுறை எழுத்தாளர்களின் நூல்களைத் தன் பதிப்பகம் மூலம் கொண்டு வருபவர். ட்ரங்க்பெட்டி கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளது. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
‘கண்ணம்மா’ தொகுப்பு 2017 டிசம்பரில் வந்திருக்கிறது. பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. கடல், மீன் ரூபத்தில் வந்து பழிவாங்குகிறது. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் இந்திக்காரர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். கோயிலில் பெண் சிலை ரகசியத்தைப் பரிமாறுகிறது. நகரம் காலி செய்யப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டம் வருகிறது. கிராமங்களில் உலகச்சந்தை நிறுவனங்கள் எளிதாக நுழைந்து சூழலை மாசு படுத்துகின்றன. கரிகாலனின் எந்த ஒரு கதையிலும் பிறிதொரு கதையின் சாயல் இருப்பதில்லை. பல பெண்களின் சாயல்களை ஒரே கலவையாக்கி இட்ட பெயர் தான் கண்ணம்மா.
இந்த சிறுகதைத் தொகுப்பு வெளிவந்து நான்கு வருடங்களே ஆகிறது. நான்கு வருடங்களில் பொதுவாகப் பெரிய சமூக மாற்றமேதும் நிகழ்வதில்லை. ஒரு கதையில் பேரிடர் வந்து ஊரைக்கட்டிப்போடுகிறது. இன்னொரு கதையில் நகரத்தைக் காலிசெய்து மக்கள் சாரிசாரியாகத் தெருவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறார்கள். வேறொரு கதையில் பூஜைசெய்ய அந்தணர் யாருமில்லை என்று கோயில் கர்ப்பகிருகம் பூட்டி வைக்கப்படுகிறது. நான்கு வருடப்பழைய புனைவே வானத்தில் இருந்து பூமியைப் பார்க்கும் உணர்வை நமக்கு அளிக்கும் போது, பின் நடக்கும் விசயங்களை முன்பே தெரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானதாக இருந்திருக்கும்!
‘மீனு’ தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை. வேறொரு கதையில் இவர் லீனியர் என்பதே இல்லை என்று நிரூபிக்க விரும்புகிறார், எனினும் தொகுப்பின் அநேகமான கதைகளில் இருந்து வேறுபட்டு நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை இது.
Six Four என்ற Hideo Yokoyamaவின் பிரபலமான நாவலில் பணியிடத்தின் பிரச்சனையும் மகள் வீட்டை விட்டு ஓடிப் போனதையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் தந்தையின் கதை. இப்போது புக்கர் இறுதிப் பட்டியலில் வந்த Bewilderment கதைக்கருவும் பணியிடப்பிரச்சனையையும், மகனின் பிரச்சனையையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்வது. இந்த சிறுகதையும் அதையே அழகாகச் சொல்கிறது.
வேறு யாரும் அதிகம் தொடாத விசயங்களையே கரிகாலனின் கதைகள் பெரும்பாலும் களமாகக் கொண்டிருக்கும்.
மெல்லிய அவலநகைச்சுவை எழுத்தில் கலந்திருக்கும். சமகால உலகச் சிறுகதைகள் போலவே இவரது கதைகளும் அடிக்கடி புனைவுக்கும் அல்புனைவுக்கும் இடையே இருக்கும் கோட்டை மாறிமாறித் தாண்டிச் செல்லும். சமூகப்பிரச்சனைகளைப் பேசினாலும், பிரச்சாரநெடி சிறிதும் வந்துவிடாமல் வாசகரைத் திசைதிருப்ப பி பார் பாலவிடுதி என்று யாராவது வந்து சொல்வார்கள். கதைகள் என்னை விட்டு விடு என்று கதறும்படி பலர் கதை எழுதுகையில், முடிவுக்கு சற்று முன்பே கதையை முடித்துக் கொள்ளும் யுத்தி கரிகாலனுடையது. அதனால் தான் இந்தத் தொகுப்பில் பல நல்ல கதைகளாகியிருக்கின்றன.
சிறுகதைகள்
பிரதிக்கு:
யாவரும் பதிப்பகம் 90424 61472
முதல்பதிப்பு டிசம்பர் 2017
விலை ரூ.150.