தீயணைப்பு- சித்துராஜ் பொன்ராஜ்:
“நெருப்பு’ என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்றார் லா.ச.ரா. சித்துராஜின் விவரணையில் அக்னி ஆக்ரோஷமாக எழுப்பும் சத்தமும் கேட்கிறது. ஒரு நிகழ்வு+ ஒரு சபலம்+.ஒரு பயந்தாங்கொள்ளி, இது தான் இந்தக் கதை. சித்துராஜின் கதையில் அனாவசியமான சொல் என்பதே இல்லை. கறுப்புப்புகை பூச்சியாய் மாறுவது, இரவுச்சந்தை குறித்த இடம் என்று மொழிநடையும் கூர்மையாக வந்திருக்கிறது. கதையின் எந்த இடத்திலும் நிதர்சனப் பார்வையை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை. எனக்கென்னவோ விமானப் பணிப்பெண்ணிடம் மேலும் முன்னேறக்கூட கதைசொல்லிக்கு சுசீலாவின் உதவி இல்லாமல் முடியும் என்று தோன்றவில்லை. அதனா என்ன கையில் கிடைப்பதை விட கிடைக்கலாம் என்ற நினைப்பில் வரும் ஆனந்தம் தனி. நல்ல சிறுகதை.
பறத்தல் – லாவண்யா சுந்தரராஜன்:
பறத்தல் இந்தக் கதையில் இருமுறை நிகழ்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, முன்பில்லாத வகையில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. வெளிநாட்டில் வேலை என்பது வேறு. அதற்குரிய ஆயத்தங்கள் தனி. ஆனால் குறுகிய பயணங்கள் எதிர்பாராத ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டவை. வீட்டைச் சுமந்து செல்லும் தமிழ் பெண்ணுக்கும், ஸ்வீடன் பெண்ணுக்கும் பெண் என்பதைத் தவிர வேறு சம்பந்தமேயில்லை. அமெரிக்கப் பெண்களை விட சுதந்திரமானவர்கள் ஸ்வீடன் பெண்கள். பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் நாடுகளில் முதல் வரிசையில் இருப்பது ஸ்வீடன். குழந்தைப்பேற்றின் போது Paternity leave அதிகமாக எடுப்பதும் அந்த நாட்டில். இந்த சூழ்நிலையில் சினேகாவை செலினா புரிந்து கொள்ள முடியாதது ஆச்சரியமில்லை. ஆனால் செலினா கொடுத்த சிறகு என்றேனும் சினேகாவுக்கு நிச்சயம் உதவும். இரண்டு வெவ்வேறு கலாச்சாரம் மட்டுமல்ல, ஏதேனும் நடந்து விட்டால் என்ற பயமும் இந்த இடத்தில் முக்கியமானது. Rape உலகின் எந்தப் பெண்ணுக்கும் விரும்பத்தக்கதல்ல ஆனால் அமெரிக்கப் பெண்கள், ஐரோப்பியப் பெண்களின் மனநிலை எப்படி உயிருடன் தப்பிப்பது என்பதில் இருக்கும். தனியாக இருக்கிறோமே என்று பயந்து அழும் பெண்ணின் கனவில் என்ன வருகிறது என்பதில் லாவண்யாவின் Special touch இருக்கின்றது.