ஈயைத் துரத்திக்கொண்டு- ஸ்ரீகாந்தா- தமிழில் கே.நல்லதம்பி:
ஈ என்ற பெயரில் வெளிவந்த திரைப்படம் இந்தக் கதையின் பாதிப்பில் எடுக்கப்பட்டிருக்கக்கூடும். ஒரு Obsession பற்றியே கதை முழுவதும். கதை 1960ல் வெளிவந்தது என்ற குறிப்பு ஆச்சரியப்படுத்துகிறது. கதையின் முடிவில் ஒரு கவித்துவமும், Dark humourம் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. இதுபோல் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வரவேண்டிய நல்லகதைகள், நாவல்கள் ஏராளமாக இருக்கின்றன. நல்லதம்பியின் மொழிபெயர்ப்பு வழமை போல் இனிமை.
கலெக்டராபீஸ் கண்ணனும் இஸிட் சண்முகமும்- விசாகன்:
நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கதை என்பதைத் தாண்டி வேறு சொல்வதற்கில்லை.
காமம் புதிரானது – கதைப்பித்தன்:
சௌந்தரராஜனின் வேலை நிரந்தரத்திற்கு இந்த வேலைகள் என்றால் கதையை வேறு விதத்தில் சொல்லி இருக்கலாம். இவர் கதை எழுதுவது பிரச்சனையல்ல, அதை நாம் படிக்க நேர்வது தான் உண்மையில் பிரச்சனை. ஆறுபக்கக் கதையில் ஒரே கதாபாத்திரத்திற்கு முதலில் 35ல் இருந்து 40க்குள் இருக்கலாம் என்றும் அதற்கடுத்து முப்பத்தைந்து வயது இருக்கலாம் என்று எழுதும் திறமைசாலி. ஒருவேளை தூரத்தில் தோராய யூகம், பக்கத்தில் கச்சிதமான யூகமோ என்னவோ! அப்புறம் சிவப்பு, ரோஸ் இரண்டும் ஒரே கலரா?
மெர்லயன் அம்மை – சித்துராஜ் பொன்ராஜ்:
பிரத்யங்கரா தேவிக்குச் சிம்மமுகம். சிங்கப்பூரின் Merlion எல்லோருக்கும் தெரிந்ததே. சின்னச்சின்னத் தூறல் விழுவது தெரியாமல் தொடர்ந்து விழுந்து, உடை முழுதும் ஈரமாக ஆவது போல் அம்மா குறித்த தகவல்கள் அங்கங்கே புள்ளியாக, அவற்றை இணைக்கையில் அம்மாவின் சித்திரம் முழுமையாக. அத்தனைக்கும் பிறகும் அப்பாவைக் கும்பிட்டுக்க என்று சொல்லும் அம்மா. சிலபெண்கள் அப்படித்தான். சுதந்திரம் என்பதே ஏதாவது விலங்கைப்பூட்டிக் கொள்வது என்று நம்புபவர்கள். கடைசிப்பத்தி Class. மொத்தக்கதையும் அதை நோக்கியே நகர்கிறது. பாராட்டுகள் சித்துராஜ்.
நெஞ்சூடு- அண்டனூர் சுரா:
மரணச்சடங்கு குறித்த ஏராளமான தகவல்கள் அடங்கிய கதை. இறந்த பின்னும் கூட எது எதற்கெல்லாம் பயப்பட வேண்டியதாகிறது. கூட்டுக்குடும்பத்தில் பெரியப்பா, சித்தப்பாவையும் சேர்த்து அப்பா என்றே கூப்பிட்ட சமூகம் இருந்தது என்று இன்னும் சில ஆண்டுகள் கழித்து. சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும்.
குறி இதழ் ஆசிரியர் குழு சிறுகதைகளின் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. இரண்டு, மூன்று இருந்தாலும் தரமாக இருக்க வேண்டும். கவிதைகள் அனைத்தும் தரமாக இருக்கின்றன, கட்டுரைகளில் கருத்து உடன்பாடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் தரமாக இருக்கின்றன. இதழ் தொடர்ந்து வரவேண்டும்.