“மீனாட்சி அம்மன் கோவிலில் தான் வழக்கமாக வெள்ளிக்கிழமை மாலை சந்திப்போம். போனமுறை பொற்றாமரை குளப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்த போது, குனிவது போல் அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டேன்” என்றான் அவன். அது சொந்தமாக டெலிபோன், விரல்விட்டு எண்ணும் வீடுகள் வைத்திருந்த காலம். STD கிடையாது. டிரங்கால் தான் பேச வேண்டும். அடுத்த வெள்ளி நான்கு நண்பர்கள் போய் காத்திருந்தார்கள். குளம் இருந்தது. ஆட்கள் வந்தார்கள். போனார்கள். அவனும் வரவில்லை. அவளும் வரவில்லை. மறுநாள் அவன் ஆரம்பிக்கக் காத்திருந்தோம். “போனமுறை முத்தம் கொடுத்ததால் குளப்படிக்கட்டில் அரையடி தள்ளி உட்கார வேண்டும் என்று சொல்லி விட்டாள். கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்றிருக்கிறேன்” என்றான் அவன்.
நண்பரிடம் நேற்று பேசிக்கொண்டிருந்த போது அந்தக் கட்டுரையை எழுதக் கடுமையாக உழைக்க வேண்டியதாகி விட்டது என்றார். ஒரு எழுத்தாளரின் எல்லாப் படைப்புகளையும் குறித்து எழுத வேண்டுமானால், மறுவாசிப்புக்குக் குறைந்தது ஒரு வாரம் வேண்டியிருக்கும். என்னாலுமே மறுவாசிப்பு இல்லாமல் கட்டுரை எழுத முடியாது. நான்கு கதைகளை மட்டும் படித்துவிட்டு எழுதுபவர்கள் இருக்கிறார்கள். கதைகளே படிக்காமல் Summaryஐப் படித்து விட்டு நான்கைந்து Reviews படித்துவிட்டு, அழகான ஆய்வுக் கட்டுரை எழுதும் திறமைசாலிகள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்கள் விமர்சனம் எழுதிய நூல்களின் Summaryல் வராத, Neet Questions போன்ற திருகலான கேள்விகளை நேரில் சந்திக்கையில் கேட்காத வரையில் அவர்கள் அப்படித்தான் எழுதப் போகிறார்கள். நான் உட்பட யாரிடம் பேசினாலும் அது போன்ற கேள்விகளைக் கேளுங்கள். உதாரணத்திற்கு நளபாகத்தில் பங்கஜத்தை முதலில் காமேச்வரன் பார்க்கும் காட்சி எப்படி சார் என்று கேட்கலாம். பங்கஜம் என்ற பெயரை மங்களம் என்று மாற்றி அதே கேள்வியைக் கேட்டால் இன்னும் உத்தமம்.
நோபல் பரிசு யாருக்குக் கிடைக்கும் என்ற கணிப்பை விட பெரிய ஏமாற்றம் தான்சானிய ரசாக்கின் பாரடைஸை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று வழக்கமாக ஏராளமான புத்தகங்கள் எழுதி, எல்லா நாட்டு எழுத்தாளர்களையும் படித்தவர்கள் யாரும் சொல்லாதது தான். சொல்ல மறந்து விட்டது. அந்த முத்தம் கொடுத்தவனின் பொய்யை, எதற்கு ஒருவர் இப்படி அநாவசியமாகப் பொய் சொல்ல வேண்டும் என்று வியக்கும் அப்பாவியாக நான் அப்போது இருந்தேன்.