மரத்தில் மறைந்தது- எம்.கோபால கிருஷ்ணன்:
நல்ல, பொருத்தமான தலைப்பு. கலைஞர்களுக்கு கருணை இருந்தால் மட்டுமே கலை பிறக்கும் என்பதில் இலக்கியவாதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். “கருணை மறந்தே
வாழ்கின்றார் கடவுளைத்தேடி
அலைகின்றார்” என்ற கண்ணதாசனின் வரிகள் இந்தக்கதைக்கு கச்சிதமாய்ப் பொருந்துகின்றன. தாஜ்மஹாலில் பௌர்ணமி இரவு கதையில் இதே விசயத்தைச் சொல்லியிருப்பார் ஆதவன். இரண்டாம் முறை கேட்கவும், மூன்றாம் முறை சொல்லவும் ஈகோ ஒத்துக்கொள்வதில்லை. குரு நித்யா கதைகளில் இருந்து மற்ற கதைகளை எழுதும் கோபாலகிருஷ்ணன் பெரிதும் வேறுபடுகிறார். நல்ல கதையிது.
பொட்டை – போகன் சங்கர்:
போகன் சங்கரின் இந்தக்கதை வெகு Sharp ஆக வந்திருக்கிறது. பல விசயங்கள் கதையில் கலந்து முடிவின் திருப்பத்தை நோக்கி விரைந்து செல்லும் முந்தைய கதை போன்றே இதுவும். ‘கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்டமான ஒன்று’ என்பது போன்ற மொழிநடை கதாபாத்திரத்தின் கையறுநிலையை ஒரே வரியில் உணர்த்தும். இந்தக் கதையில் மட்டுமல்ல போகனின் பல கதைகளில் சிறப்பம்சமே அவசரமாகப் பிரச்சனையைக் கைகழுவி விட்டுத் தப்பித்துப் போக நினைக்கும் கதாபாத்திரங்கள். பொட்டை என்பதை வழக்கமாக எதற்கு சொல்வார்களோ, அது இல்லை என்பதை தீர்மானம் செய்துவிட்டு மீண்டும் பொட்டை என்று சொல்வது போகனின் Special touch. சிறப்பு.
மஞ்சள் பலூன்கள் – திருச்செந்தாழை:
சிறுகதைகளில் வரியை எடுத்து எழுதுவது நவீன விமர்சனத்தில் பொதுவாக யாரும் செய்வதில்லை. ஆனால் திருச்செந்தாழையிடம் என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. மொழியின் பிரவாகம். “நிரஞ்சனா அழுகின்ற போதெல்லாம் எனது கோளத்தின் பிரகாசத்தை நான் அவளிடம் இழந்தேன். நான் மௌனமடையும் போதெல்லாம் அவளது கோளத்தின் சிறுபரப்பை நான் அபகரித்தேன்.” வார்த்தை எதுவும் கண்களின் வழியே நழுவிவிடக்கூடாதெனக் கவனமாய் படித்தேன். காதல் ஒரு விளையாட்டு. பேசுவதற்கு பெண்ணோ/ ஆணோ கிடைப்பது கடினமான காலத்தில் அது மிக கவனமாக வெற்றி தோல்வி யாருக்கும் சேராத வகையில் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளப்பட்டது. கல்யாணத்திற்குப் பின்னரே சுயரூபம் வெளிப்படும். தகவல் தொழில்நுட்பம் தந்த அதிக வாய்ப்புகள் சுயரூபங்களை முன்னரே காண்பிக்க வைக்கின்றன. காமம் ஒரு பெருவிளையாட்டு. முடிவில் அதுவே வெல்லும். படம் யார் கோகுலா?
காகளம்- செந்தில் ஜெகன்னாதன்:
திரையிசையை தொடர்ந்து கேட்டு அதன் வரிகளை சந்தர்ப்பத்திற்கு ஏற்ப உபயோகித்த காலத்தை நினைவுக்குக் கொண்டு வந்த கதை. குழந்தையை முதன்முதலாகப் பள்ளிக்கு அனுப்பி மறுநாள் அசெம்பிளியில் பாடிய பாடலைப் பாடிக் காட்டினாள் “நீ எல்லாம் தெய்வமில்லை’.
பாடல்கள் பல நினைவுகளைக் கொண்டு வரும். கதை முழுதும் பாடல் வருகிறது. அத்துடன் ஒரு துரோகமும். ஏன் தொட்டுத் தூக்க முடியவில்லை, ஏன் அழுகை வரவில்லை என்பது போன்ற நுட்பமான விசயங்களோடு கதையை நன்றாக நகர்த்தியிருக்கிறார் செந்தில். தொடர்ந்து எழுதுங்கள்.
நல்லாற்றின் நின்ற துணை – ஹரிஷ் கணபதி:
ஹரிஷ் அதிகம் தொடாத Topicஐ இந்தக் கதையில் எடுத்திருக்கிறார். நீதிமன்றத்திற்குள் நுழைபவர்கள் ஒவ்வொருவருக்குமே நாவல் எழுதும் அளவிற்கு அனுபவங்கள் கிடைத்திருக்கும். ஆணோ அல்லது பெண்ணோ perpetrator
யார் Victim யார் என்பது நீதிமன்ற வழக்குகளில் பொதுவாக வெளிவருவதில்லை. யார் பாதிக்கப் பட்டவரோ அவருக்கு மேலும் மேலும் மனஉளைச்சல் அளித்து நிம்மதி இழக்கச்செய்யும். குடும்ப நீதிமன்றங்கள் வந்தும் பெரிய மாறுதல்கள் வரவில்லை. மனதில் தோன்றுவதை வடிகட்டாமல் எழுதுவதற்கு அமெரிக்கா போன்ற சூழல் இங்கே இல்லையே என்பது எப்போதாவது தோன்றும். இப்போது தோன்றிற்று. ஹரிஷ் அழகாக ஒரு Situationஐ எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.
எலனாரின் இல்லம் – வில்லா கேதர்- தமிழில் இல.சுபத்ரா:
கொஞ்சம் சிக்கலான கதை. மொழிபெயர்ப்பதும் கடினம். முதல் மனைவியின் மரணத்தை ஒத்துக் கொள்ளாது அவளுடன் வாழ்ந்த வீட்டில் அவள் நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்யும் கணவன். முதல் மனைவியின் நெருங்கிய தோழி. தோழியை அழைத்துக் கொண்டு கணவனை மீட்கப் புறப்படும் இரண்டாம் மனைவி. பார்வையாளராக, கடைசியில் விளக்குபவராகத் தோழியின் கணவர். இவர்களைச் சுற்றி நகரும் கதை. இறந்து எழுபத்தைந்து வருடம் ஆனவரின் வெகு சாதாரணக் கதையை சிரமப்பட்டு எதற்காக மொழிபெயர்க்க வேண்டும் என்பது குறித்து யோசித்தும் புரியாததால் யோசிப்பதை நிறுத்திக் கொண்டேன்.
இளம் பெண்ணொருத்தியின் ஒப்புதல் வாக்குமூலம்- மார்சல் ப்ரூஸ்ட்- தமிழில் எஸ்.கயல்:
குழந்தைமையில் இருந்து பெண்ணின் பாலியல் உணர்வுகள், அம்மா-மகள் உறவு எல்லாவற்றையும் சேர்த்து நுணுக்கமாக ப்ரூஸ்ட் கொடுத்திருக்கும் கதை. வலியேற்படுத்தும் புறக்கணிப்புகள், பொறாமை என்று எல்லா உணர்வுகளும் அடியாழத்திற்குச் சென்று மீள்கின்றன. காதல் என்பது சாபமாகையில் சாதல் என்பதே உசிதம். கயலின் மொழிபெயர்ப்பு தெளிவாக, எளிய நடையில் இருக்கின்றது.
முற்றத்துக்குள் நுழைந்த கோவேறுக்கழுதை- வில்லியம் ஃபாக்னர்:
கழுதையை விரட்டுவதை நகைச்சுவையாகச் சொல்லும் போதே, அந்த ஊரின் அமைப்பு, பெண்களின் சமூகப்படிநிலை, சிறிய ஊரின் பழக்கவழக்கங்கள், ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர், ஒரு சின்னப் பழிவாங்கல் எல்லாமே கதையில் உரையாடல்கள், வாக்குவாதம் மூலம் கொண்டு வரப்படுகிறது. தன்மையில் சொல்லப்படாது Third personல் கதை சொல்லப்படுவது ஒரு பார்வையாளனின் மனநிலையை வாசகர்களுக்கு கொண்டு வருகிறது. கார்குழலியின் அருமையான மொழிபெயர்ப்பு கதைக்குச் சுவை சேர்க்கிறது.