ஆசிரியர் குறிப்பு:
ஆங்கிலத்துறையின் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1970ல் இருந்து, சோஃபியின் உலகம், மார்க்ஸின் ஆவி, உலகச்சிறுகதைகள், வசைமண் உட்பட பல முக்கியமான நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர்.சங்கப்பாடல்கள், நகுலனின் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இது இவருடைய முதல் நாவல்.
ஒரு புள்ளியில் ஆரம்பித்து முழுவட்டத்தையும் வரைந்து முடித்து, முடிகிறது நாவல். சந்திரன் என்னும் சிறுவன் பிறப்பதற்கு முன், அவனது அப்பாவின் கதையிலிருந்து ஆரம்பிக்கும் நாவல், அவனது பார்வையிலேயே குடும்பத்தின் பல நிகழ்வுகளையும், அவனது வளர்ச்சி மற்றும் நம்பும் சித்தாந்தம் குறித்தும் பேசுகிறது.
இடதுசாரி சித்தாந்தம் இந்த நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகம் வாசிப்போர் ஏதாவது ஒரு சமயத்தில் மார்க்சியத்தால் ஈர்க்கப்படாமல் இருந்திருக்கவே முடியாது. லோகாதயச் சிக்கல்களில் பலர், அடுத்த நான்கு தலைமுறை உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற வேட்கையில் பலர், குடும்பப் பிரச்சனைகளால் பலர் என்று வேறுவேறு காரணங்களினால் மாறுபாதை செல்கிறார்கள். அடிப்படையில் எந்த மதத்தின் தத்துவத்தையும் தாண்டிய உயரிய நோக்கம் கொண்டது மார்க்சியம்.
ராமசாமி ஒரு சராசரி ஏழை இந்தியக் குடிமகனின் பிரதிநிதியாக இந்த நாவலில் வருகிறார். கைக்கும் வாய்க்கும் எட்டாத வாழ்க்கையில் சர்க்கஸ்காரர்களை விட அதிக வித்தைகள் செய்து, பிள்ளைகளை ஒரு நிலைக்குக் கொண்டுவர சகல அவமானங்களையும் நேர்கொண்டு, வாழ்ந்து முடிப்பதில் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?
சந்திரனில் எத்தனை சதவீதம் சிவக்குமார் என்பது அவருக்குத் தான் தெரியும். எழுபதுகளில் வளரும் இளைஞன், குடும்பபாரத்தை அப்பாவிடம் இருந்து வாங்கிக் கொள்ளத் துடிக்கும் இளைஞன்,
மார்க்சிய கருத்துகளால் ஈர்க்கப்படும் இளைஞன், அந்த காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு நேரும் எதிர்பாராத விபத்துகள், துர்மரணங்களைக் கண்டு திகைக்கிறான்.
மார்ட்டின் ஓ கைன், Sophie’s World போன்ற நூல்கள் எளிய வாசிப்புக்கு உகந்தவை அல்ல. அவற்றைத் திறம்பட மொழிபெயர்த்தவர் சிவக்குமார். ஆனால் அவற்றின் சாயலோ அல்லது அவர் வாசித்த பல மேலைநாட்டு நூல்களின் சாயலோ சிறிதும் இன்றி, மிக எளிய நடையில், நேர்க்கோட்டில், சம்பவங்களின் கோர்வையாக ஒரு குடும்பத்தின் கதை நகர்கிறது. பார்வையாளர் கதைசொல்லும் தொனியில் குடும்பக்கதை நகர்வதும், எங்கெல்லாம் மார்க்சியம் குறித்த விசயங்கள் வருகின்றதோ, அவை உரையாடல், விவாதங்கள் மூலம் நகர்த்துவதும் நல்ல யுத்தி. ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கு கதைகள் இருந்தே தீரும். ரிஷிகர்ப்பம் போல் ராத்தங்காது பிறப்பதும் உண்டு. அறுபது வருடங்கள் கர்ப்பம்தரித்து அவசரமில்லாது வெளிவருவதுமுண்டு.
நாவல்கள்
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.190.