சுதிஷ் மின்னி தலசேரி தாலுகாவில் கண்டங்குந்நு கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கணிதத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றவர். சங்பரிவார் அமைப்புகளில் இருபத்தைந்து வருடங்கள் சேர்ந்திருந்து விட்டு தற்போது சி.பி.எம்மில் இணைந்து பணியாற்றுகிறார்.
கே.சதாசிவனின் மொழிபெயர்ப்பு தெளிவாக இருக்கிறது. பொதுவாகவே ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதை விட இந்திய மொழிகளில் இருந்து செய்யப்படும் பெயர்ப்புகள் தமிழுக்கு நெருக்கமாகின்றன.
எந்த மதவாதமுமே அபாயமானது. சகமனிதனின் நம்பிக்கையை உடைக்கச் செய்யும் முயற்சிகளால் அவன் வாழ்வில் பலகெடுதல்களையும், அழிவையும் ஏற்படுத்துவது. கருணையே வடிவான புத்தரைப் பின்பற்றுபவர்கள் தான் சமீபகால வரலாற்றில் அதிக படுகொலைகளையும், மதசகிப்பின்மையும் வெளிப்படுத்தி
இருக்கிறார்கள். இந்துத் தீவிரவாதம் என்பதே இந்தியாவில் இல்லை என்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அதே நேரத்தில் ஜெயின்களைப் போல, சீக்கியர்களைப் போல, தங்கள் மதத்தில் தீவிரமான நம்பிக்கையிருந்தும் பிற மத உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்கும் பெருவாரியினர் பின்பற்றும் மதங்களே இங்கு இல்லை. ஒருவருடம், இருவருடங்கள் என்பது சகித்துக்கொள்ளக்கூடியது ஆனால் இருபத்தைந்து வருடங்கள் RSS போன்ற பாசிஸ அமைப்பில் இருந்துவிட்டு ஒப்புதல் வாக்குமூலம் தருவது குறித்து வாசகரே முடிவுசெய்ய வேண்டும்.
மதத்தீவிரவாதிகள் சிறுவர்களிடம் எப்போதும் சொல்லி வளர்ப்பது அவர்கள் மதம் ஆபத்தில் இருப்பதாக. வளர்ந்த பின் எந்த பாதகச்செயலும் மதச்சேவை என்ற மனநிலை இப்படியே உருவாகுகிறது. இது தர்மயுத்தம், கடைசியில் வரும் நன்மைக்காக
சில குற்றங்கள் தவறில்லை என்று சமாதானம் கொள்ள வைக்கிறது.
இந்து தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரித்ததை, முஸ்லீம் பகுதிகளில் கலவரம் ஏற்படுத்துவதை, திட்டமிட்டுக் கொலை செய்வதை, அடுத்தவர் மனைவியுடன் உறவு கொண்டு அதை வெளியில் தெரியாமல் மறைப்பதை, தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டதை, விதவைகளை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதை, சங்பரிவார் தலைவர்கள் செய்தபோது உடனிருந்ததாகக் கூறுகிறார். இவர் ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் உளவாளியாய் இருந்ததை, எர்ணாகுளத்தில் பலமடங்கள் மற்றும் மடாதிபதிகள் குறித்த இரகசியங்கள்/பலவீனங்களைக் குறித்த அறிக்கை சமர்ப்பித்ததை, ராணிபள்ளியில் ஆசிரியராக உள்நுழைந்து குழந்தைகள் குறித்த விவரங்களை சங்பரிவாருக்கு சமர்ப்பித்ததைப் பற்றி நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக மலையாளத்தில் மனசாட்சி மிக மெதுவாகப் பலவருடங்கள் கழித்துத்தான் வேலைபார்க்கும் போலிருக்கிறது. நிராயுதபாணி கம்யூனிஸ்டை காட்டில் வைத்துக் கொன்றதை காவலர் சொல்வது நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி. இவருக்கு இருபத்தைந்து வருடங்கள். இந்த விசயத்தில் திருடன் மணியன்பிள்ளை பரவாயில்லை. பணத்தேவைக்கு நூல் எழுதியதை ஒப்புக்கொண்டார். இந்த நூல்கள் அனைத்துமே ஏராளமான பிரதிகள் விற்பனையானவை.
சிறுவயதில் பெற்றோர் சேர்த்துவிட்ட சங்பரிவார் குறித்து முதல் பத்து அல்லது அதிகபட்சம் பதினைந்து வருடங்கள் தெரியாமல் போயிருக்கலாம். நாஸிகளுக்கு சற்றும் குறைந்தவர்களல்ல சங்பரிவார் அமைப்புகள் என்பது அத்தனை வருடங்கள் கழித்தும் புரியவில்லையா? குஜராத் கலவரம் நடந்தது 2002, இந்த நூல் வெளியானது 2015. எல்லா விவரிப்புகளிலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாட்டிக்கொண்ட victim தொனியும், செய்த தவறுகளுக்காக வருத்தப்படும் தொனியும் சேர்ந்திருக்கிறது. ஒருவேளை கண்ணூர் பாலியல் பிரச்சனை பூதாகரமாக மாறவில்லையென்றால்……….
வலதுசாரி தீவிரவாதத்தை எதிர்த்து Gauri Lankesh போல சிலர் உயிரிழந்திருக்கிறார்கள், பல சமூகப் போராளிகள் அதிகபட்ச நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். உண்மையைக் கூட யார் சொல்கிறார்கள் என்று பார்த்துக்கொள்வது எப்போதுமே நல்லது.
மொழிபெயர்ப்புநூல்கள்
பிரதிக்கு:
பரிசல் புத்தகநிலையம் 9382853646
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.120.