வழிகாட்டி – உஷாதீபன்:
இது ஒரு நல்ல கரு. வங்கியில் மனிதவளத்துறையில் தலைவராகக் கொடிகட்டிப் பறந்தவர் ஓய்வுபெற்று சில நாட்களில் ஒரு கிளைக்குப் போனதும் வெளியில் பெஞ்சில் உட்கார வைத்தார்கள். சந்திப்பில் ஓய்வுபெற்ற உயரதிகாரி தன்னடக்கமாகப் பேசுவதும், கீழ் வேலைபார்த்தவர்கள் அளவுக்கு மீறிப் புகழ்ந்து இப்போது ஒன்றும் சரியில்லை என்பதும் இயல்பாக வந்திருக்கிறது. ஆனால் மாமி இரண்டாயிரம் ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டு அமர்க்களமாக இருக்கையில் கதை முடியுமுன் கொல்வது நியாயம் தானா?
தாயம் – வேல்விழி மோகன்:
சுயரூபம் என்ற பெயரில் கு.அழகிரிசாமி ஒரு சிறுகதை எழுதியிருப்பார் கிட்டத்தட்ட இதே பின்னணியில். 1959. கலைமகளில் வந்தது.
வேல்விழி மோகனின் கதை அதற்கும் பிந்தைய காலத்திற்குப் போனது போல் ஒரு உணர்வு.
ஆழ்நிலைப் படிமங்கள் – ஐ.கிருத்திகா:
Alzheimer ன் பாதிப்புகள் சிறுகச்சிறுக ஆக்கிரமிப்பதைச் சொல்லும் கதை. ஆர்வமிருப்பவர்கள் Nicholas Sparkன் Note Book நாவலைப் படித்துப் பாருங்கள். கிருத்திகாவிடம் பிடித்த விசயமே கதைகளில் அவர் சேர்க்கும் தகவல்களின் Authenticity. இந்தக் கதையிலும் கணப்பொழுது சின்னப்பொண்ணு Alzheimerல் இருந்து வெளிவந்து நிலா, வளையலை அடையாளம் கண்டுபிடிப்பார்.
மறதியின் கரங்கள் மையிருட்டு பரவுவதைப் போல நிதானமாக இறுக்குவதை அழகாகச் சொல்லி இருக்கிறார். கடைசிப்பகுதி கதையின் சிகரம். பாராட்டுகள் கிருத்திகா.
அந்தர்வாஹினி – மாலதி சிவா:
பிராமண பாஷையில் இல்லை, அந்தக் குழந்தை தர்மு கடைசியில் பேசுவது, கடன் கொடுக்கவேண்டும், கடனில்லை என்ற பேச்சுகள் என கதையின் பல அம்சங்கள் சேர்ந்து தி.ஜானகிராமனை நினைவுறுத்துகிறது. இல்லை குழந்தை மொத்த சம்பாஷணையையும் கவனித்து விட்டு நீதி சொல்வதிலா? வாசித்து மனதுக்கு நிறைவைத் தந்த கதை.
கலவி,வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு- காலத்துகள்;
ஒன்றுமேயில்லாத ஒரு சின்ன நிகழ்வை அழகான கதையாக்கி இருக்கிறார் காலத்துகள். மனிதமனம் எப்படியெல்லாம் தழும்பைப் புண்ணாக்கிப் பின் மருந்தும் இட்டுக் கொள்கிறது. கடைசிப்பகுதி ஒரு ஆணின் செக்சுவல் பேண்டஸி. எல்லாக் கோழைக்குள்ளும் கண்டிப்பாக கற்பனையில் பயமறியாத வீரன் இருந்தே தீருவான். வெகு இயல்பான கதை. மிக நன்றாக வந்திருக்கிறது.
விசித்திரம் – யு.ஆர்.அனந்தமூர்த்தி- ஆங்கிலத்தில் தீபா கணேஷ்- ஆங்கிலம் வழித் தமிழில் தி.இரா.மீனா:
இத்தனை மொழிபெயர்ப்புக்குப் பிறகும் இந்தக் கதை துடிப்புடன் இருப்பது ஆச்சரியம் ஏற்படுத்துகிறது. மணவாழ்க்கையில் familiarity breeds contempt என்பது நிரூபணம் ஆவதே கதை. ஆனால் Too much of coincidence இந்தக் கதையின் அழகைச் சிதைக்கிறது. நாற்பது வருடங்கள் முன்பு எழுதிய கதை என்றாலும் Bara, Samskara, Avesthe எழுதிய கைகள். நல்ல, தெளிவான தமிழ் மொழிபெயர்ப்பு.