ஆசிரியர் குறிப்பு:

இலங்கை யாழ்ப்பாணம் அரியாலையில் பிறந்தவர். அகழ் இணையஇதழின் ஆசிரியர்களில் ஒருவர். சதைகள், பச்சைநரம்பு என்று இவரது இரு சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.

புலம்பெயர்ந்த இளைஞர்கள் கதை எழுதுவதில் சில நல்ல விசயங்கள் என்னவென்றால், அறிந்தோ அல்லது அறியாமலோ அந்த நாட்டில் அவர்கள் வாழும் கலவைக் கலாச்சாரத்தைக் கதைகளில் பிரதிபலிக்கிறார்கள். அடுத்தது புதிய குரல்களில் மனத்தடை, விழுமியங்களைக் கடந்த ஒரு Openness அவர்களது எழுத்தில் வந்துவிடுகிறது. உபரியாக, வெகு சிலரைத் தவிர இலங்கையைத் தாயகமாகக் கொண்டு தமிழில் எழுதுபவர்களின் மொழிநடை செறிவாக இருக்கிறது.

எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. தலைப்புச் சிறுகதை ஏற்கனவே, அகரமுதல்வன் தொகுத்த துயிலாத ஊழ் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்ற கதை. புத்தகவடிவில் ஏற்கனவே வந்த கதைகளை அடுத்த தொகுப்பில் விட்டுவிடுதல் நலம்.

முதல் கதை சாய்வு, கடைசிக்கதை உதிரம் தவிர மற்ற எல்லாக் கதைகளிலுமே, ஈழத்தில் தமிழர்கள் மேல் நடந்த வன்முறை, கதாபாத்திரங்களிடம் மனரீதியாக அழியாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்பா, தம்பியின் முன்னால் நிர்வாணமாக நடத்திக் கூட்டிச் செல்லப்பட்ட பெண், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் வெடிகுண்டு சிதறல் பாய, கர்ப்பப்பையை எடுத்த பெண், யானையைப் பார்க்க ஆசைப்பட்டு அண்ணனை இழந்த தம்பி, சிறுவர் சண்டையில் நண்பனைக் காட்டிக்கொடுத்துப்பின் அவன் கொலைசெய்யப்பட தீராத குற்றஉணர்வில் அலைபாயும் ஒருவன் என்று பலர் கடந்த காலம் துரத்த ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

வேறு கலாச்சாரத்திற்கு அந்நியமாகி உறவுச்சிக்கலை வரவழைத்துக் கொள்வதை, கதிர்ச்சிதைவு, ஆடையுற்ற நிர்வாணம் கதைகள் சொல்கின்றன. லோகா, ஜேம்ஸ் போல அவனால் ஒரு உறவை விட்டு எளிதாக விலகிக்கொள்ள அவனால் முடியாததற்கு கடந்தகாலம் மட்டுமில்லை, கலாச்சாரமும் காரணம். அது போலவே பெல்லாவால் ஒத்துப் போக முடியாததற்கு கலாச்சாரமே காரணம்.

முதல் கதை சாய்வு ஒரு Incest relarionshipன் குற்றஉணர்வில் இருந்து வெளிவரமுடியாது தவிப்பதையும், கடைசிக்கதை படுக்கையில் பெண்ணிடம் தோற்பவன் அவளை அடித்து, உதைத்து ஆணின் மேட்டிமையை நிலை நிறுத்திக் கொள்வதையும் பேசுகிறது.

அனோஜனின் மொழிநடை அவரது முதல் தொகுப்பிலிருந்து இப்போது நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இந்தத் தொகுப்பில், பெண்ணுடன் ஒருமுறை உறவு கொள்பவன் அவளுடன் அடுத்த உறவை ஒரு Matter of right ஆக எடுத்துக் கொள்வது, சிறுபெண்ணால் தாங்க முடியவில்லை என்னும் போது, கணவன் பாலியல் வல்லுறவு மற்றும் வன்முறையில் இறங்கி Sexual satisfaction அடைவது, வாய் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக்கொள் என்றால், வலிய ஒரு முத்தத்தைக் கொடுக்கும் ஆணின் மனோபாவம் என்பது போல் பல விசயங்கள் நுட்பமாக வந்திருக்கின்றன. மோகனம் போன்ற விடுபட்ட நல்ல கதைகளையும் தொகுப்பில் சேர்த்திருக்கலாம். தனித்துவமும், இலக்கியத்தில் எதிர்காலமும் கொண்ட மற்றுமொரு இளைஞர் அனோஜன்.

சிறுகதைகள்

பிரதிக்கு:

காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.160

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s