ஆசிரியர் குறிப்பு:
நெல்லை மாவட்டம் உவரியில் பிறந்தவர். எம்ஃபில் பட்டம் பெற்றவர். வணிகக் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவரது முதல்நாவல் ஆழி சூழ் உலகு வாசிக்காத இலக்கிய வாசகர்கள் குறைவு. அடுத்த நாவலான கொற்கை சாகித்ய அகாதமி விருது பெற்றது. இது சமீபத்தில் வெளிவந்த இவரது நான்காவது நாவல்.
மீண்டும் ஒரு கடற்கரையூரின் கதை. சிறுவனின் பார்வையில் விரியும் கதை அவன் வளர்ந்து பெரியவனாகும்வரைத்
தொடர்கிறது. அவனுக்கு விடை தெரியாது ஆயிரம் கேள்விகள். குடிக்க நீரின்றி, பசிக்கு உணவின்றி மக்கள் அவதியுறுகையில் தேவாலயக் கோபுரங்கள் எப்படி எழும்பிக் கொண்டே இருக்கின்றன? தச்சனின் மகனாக எளிய பின்னணியுடன் வந்தவனின் புகழ்பாட வந்த பாதிரிகள் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறார்கள்? கான்ஸ்டான்டின் காலத்திய வடிவமைப்பில் இயங்கும் கத்தோலிக்கம் ஒரு அரச மதமா?ஏதோ ஒரு சூழ்நிலையில் இந்த நம்பிக்கையை ஏற்று மதம் மாறிய மக்களை, திருச்சபைகள் அறியாமையில் வைத்திருப்பதும், சொந்த தேசத்தில் வேற்றுமத நம்பிக்கையினால் ஆட்சி அதிகாரம் இவர்களை அந்நியராய்க் கருதுவதும் ஏன்?. எங்கே தவறு நேர்ந்தது?
மாயயதார்த்தம் கதையில் நடுநடுவில் நுழைந்து வந்த சுவடில்லாமல் மறைகிறது.
வேப்பமரம் சிறுவனுக்கு அவன் பிழைத்த கதையைச் சொல்கிறது. ஆழிப்பேரலையை அரசகுமாரி தன் உயிரைக் கொடுத்து, அமைதியடையச் செய்கிறாள். சம்மனசு பறந்து வந்து, அறிவுரை சொல்லிப் போகிறது. கடல் அதன் ஆதங்கத்தைச் சொல்லி, அதற்காகக் குரல் கொடுக்கக் கேட்டுக் கொள்கிறது.
இஸ்லாமில் பிரம்மச்சரியம் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இந்துக்கள், கத்தோலிக்கர்கள் பிரம்மச்சரியத்திற்குப் புனித முகம் கொடுத்துத் திரைமறைவில் உடல் சொல்லும் உத்தரவிற்குக் கீழ்ப்படிகிறார்கள்.
தி.ஜாவின் மொழிபெயர்ப்பில் வந்த அன்னை ஒரு மதகுருவின் அன்னையின் போராட்டம்.
ஆழிசூழ் உலகில் ஆரம்பித்த திருச்சபை மீதான விமர்சனங்கள் இதிலும் தொடர்கின்றன. யாத்திரை என்ற தலைப்பு ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைக் குறிக்கிறது. சுயசரிதைக்கூறுகள் நிறைந்த நூல் இது. கத்தோலிக்கத்தில் வளர்ந்த சிறுவன், மார்க்சியத்தில் கவரப்பட்டு பின்னர் அதையும் கைவிட்டு முதலாளித்துவ அமைப்பில் அடைக்கலம் புகுகிறான்.
நெய்தல் நில வாழ்க்கையை, அவர்கள் நம்பிக்கைகளை, போராட்டங்களை, அந்த சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அழகாகப் பதிவு செய்தவர் குருஸ். இந்த நாவல் சுயசரிதைக்கூறுகள் இருக்கும் காரணத்தினால் ஒரு தனிப்பட்ட தேடல் மற்றும் மனத்தாங்கலில் முடிகிறது. ஒருவகையில் அது இந்த நாவலின் பலவீனம். சிறைகளை நாமே தேடிக் கொள்கிறோம். பின் கைதி என்று புலம்புகிறோம். மரணம் மட்டுமே சிறையிலிருந்து விடுதலை தர முடியும். அதுவரை அவரவர் சிலுவைகளை அவரவர் தூக்கித்தான் ஆக வேண்டும்.
நாவல்கள்
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.175.