வினோத் தேசிய மற்றும் உலக திரைப்பட விழாக்களில் விருது வாங்கிய திரைப்படங்களை எடுத்தவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன் இருபத்தி மூன்று வருடங்கள் பத்திரிகையாளராக இருந்தவர். இந்த நூல் சமீபத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தைப் பற்றியது.
Ghaziabadல் இருந்து பீகாரின் கிராமத்திற்கு தூரம் கூகுள் மேப்பின்படி 1232 கி.மீ. 24/3/2020 திடீரென அறிவிக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழந்து சொந்த ஊருக்குப் பயணத்தை மேற்கொண்ட, ஏழு இளைஞர்களைக் காரில் தொடர்ந்து, ஆசிரியர் ஏழுநாள் பயணத்தின் நிகழ்வுகளைத் தொகுத்ததே இந்தநூல்.
வீட்டுவேலை செய்பவரின் பெயர் தெரிந்திருக்கும், பால்காரர், காய்கறிக்காரர், பேப்பர் போடுகிறவர்……… இது போல் எத்தனையோ பேர் அன்றாட நம்வாழ்வில் பெயரில்லாமல், முகங்களால், செய்யும் வேலையால் அடையாளம் கண்டுகொள்ளப் படுகிறார்கள்.அது போன்ற சாதாரணர்களின் கதையே இது.
“Let them eat cake” என்ற வரிகள் வேறுவேறு சொற்களால் நிரப்பப்பட்டு மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக உலகின் பல பகுதிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அன்றாடம் உழைத்து அன்றைய உணவுக்கு வழிசெய்பவர்கள் எத்தனை பேர்? அவர்களில் கர்ப்பிணிப் பெண்கள் எத்தனை பேர்? கிட்டத்தட்ட எழுபது நாட்கள் தேசம் கதவடைத்துக் கொண்ட போது அவர்கள் என்னவானார்கள்? ஏழைகளாய் இருப்பதில் தவறில்லை, இந்தியா போன்ற தேசத்தில் ஏழையாய் இருப்பது தான் தவறு.
உணவிற்காக தெருவில் அலைகையில் காவல்துறையிடம் அடிவாங்கிய பெண், பலர் முன்னிலையில் சேலையைத் தொடைவரை தூக்கி, நீலம்பாரித்த லத்தித் தடங்களை ஆசிரியரிடம் காட்டியிருக்கிறார். ஆசிரியர் காவல்துறை உயரதிகாரியிடம் புகார் செய்கிறேன் என்றதற்கு இல்லை வீடியோ எடுத்து மோடிஜீக்கு அனுப்பு என்றிருக்கிறார். (அந்தப்பெண் பிறகு தன் குடும்பத்துடன் 836 கிலோ மீட்டர் கால்நடைப் பயணம் செய்து சொந்த ஊர் சென்று விட்டார்.) மணிப்பூரில் பெண்கள் நிர்வாண ஊர்வலம் நடத்தியபோது நாம் பெரிதும் மதிக்கும் மன்மோகன் சிங் மற்றும் அப்துல்கலாம் பதவியில் இருந்தார்கள்.
அதிகாரிகளின் அத்துமீறல்களுக்கு அவர்கள் அதிகவிலை கொடுக்கும் காலம் வரும்வரை இந்தியாவில் ஏழைபாழைகளுக்கு விடிவுகாலமில்லை.
நெடிய பயணம் இது. காவல்துறையின் அடிக்குப்பயந்து காட்டு வழிகளில் போகும் போது இன்னும் சிரமமான பயணம் ஆகிறது. Secondhand சைக்கிள்கள் தொடர்ந்து தொல்லை தந்திருக்கின்றன. ஓய்விற்குத் தங்கக்கூடாது கொரானா தொற்றிக் கொள்ளும் என்று விரட்டிய மனிதர்களும் இருந்திருக்கிறார்கள். மூடிய கடையைத் திறந்து சைக்கிளைப் பழுதுபார்த்து, டிரக்கில் ஏற்றிச்சென்று, உணவளித்துப் பணம் வாங்கிக் கொள்ள மாட்டேன் என்ற மனிதர்களும் இருந்திருக்கிறார்கள்.
இவர்களை அதிகம் நாம் கவனித்ததில்லை. இவர்களின் வாழ்வும் நமக்கு அதிகம் தெரிந்ததில்லை. நான்கு சகோதரர்கள் கூலிவேலை செய்து மொத்தமாக இரண்டு லட்சம் சேர்த்து தங்கைக்கு மணமுடிக்கத் தீர்மானித்திருந்தார்கள். ஒரு லட்சம் சேர்த்து பின் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஒருவர் காத்திருந்தார். எல்லோருடைய திட்டங்களையும் கொரானா தலைகீழாகத் திருப்பிப் போட்டுவிட்டது. பிழைத்தவர்கள் இப்போது வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
“கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ” – மகாகவி பாரதியார்.