நெல்லையில் பிறந்தவர். பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையில் முடித்தவர். ஆசிரியர். ஏற்கனவே இவரது கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. இது இவரது மதுரை நினைவுகள் குறித்த கட்டுரை நூல்.
மதுரை என் முதல் கால்நூற்றாண்டின் நினைவுகளின் பேழை. எல்லா முதலும் அங்கே தான். எண்பதுகள், தொன்னூறுகளின் மதுரையைப் பற்றியே ஆசிரியர் எழுதியிருக்கிறார். தொன்னூறுகளின் மதுரை நான் அறியாதது.
சித்திரை மாதம் அழகர் திருவிழா, மதுரை மக்களின் திருவிழா. பிற மதத்தினரும் ஆர்வமாகக் கலந்து கொள்ளும் பண்டிகை.
அக்கம் பக்கத்து கிராமங்களில் இருந்துவந்த மக்கள் ஒன்று கூடி மதுரை வெயில் வாசம் கொள்ளும். பின்னாளில் எப்போதாவது பெங்களூரில் வெயில் அதிகம் என்று என்னை அறியாது சொல்கையில், என்னில் ஒரு பாதி என்னை விலகி நின்று உற்றுப் பார்ப்பது போலிருக்கும்.
எண்பதுகளில் இலங்கை வானொலி வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம். உற்சாகக் குரல்களில் அப்துல் ஹமீது மட்டுமே நம்மிடையே இருக்கிறார். Sony, TDK, National காஸெட்டுகளின் காலம். இளையராஜாவைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாலும் மதுரை மக்களுக்கு பழைய பாடல்களின் மேல் தீராத போதை.
சைக்கிள் ரிக் ஷாக்காரர்கள், சும்மாடுக்கு மேல் காய்கறிக்கூடையைச் சுமந்த பெண்கள் (காய்கறி விற்கும் பெண்களிடம் ஜொல்வடித்து தெருவில் அவமானப்பட்ட ஆண்கள்), வீதிகள் எங்கும் நிறைந்திருந்த அண்ணாச்சி பலசரக்குக் கடைகள், நீலவண்ண பால்பூத்கள், நாக்கில் சுர்ரென்றுபடியும் சூடமிட்டாய்கள், அவசரத்திற்குப் பேசுவதற்கும் போஸ்ட்ஆபிஸ் கியூவில் நின்று பேசும் ட்ரங்கால்கள், பச்சைவண்ண பாண்டியன் எக்ஸ்பிரஸின் சூடான வாடை, ஒளியும் ஒலியுமிற்கு காத்திருந்த நாட்களும் பரிமாறிய பார்வைகளும், தமுக்கம் மைதானத்தின் பொருட்காட்சிகள் என்று எத்தனையோ நூறு நினைவுகள் தேன்கூட்டைக் கலைத்தது போல் பறந்து வந்து இந்த சிறிய புத்தகத்தை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
ஏற்கனவே சொல்லியது போல் இவர் நெல்லையில் பிறந்தவர். வளர்ந்து படித்த மதுரை மேல் தீராக்காதல் கொண்டவர். மதுரை தூங்காநகரம். அதனாலேயே அதற்கு இன்னொரு முகம் உண்டு. அதைப் பார்க்காதவர்கள் பாக்கியசாலிகள், படிப்பாளிகள். சுப்பிரமணியனின் மதுரை சிக்கலில்லாதது. ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நூலில் முழுவதும் மதுரையின் மலரும் நினைவுகள். நண்பர் சுப்பாராவின் மதுரை நினைவுகள் குறித்த நூல் வரவிருக்கிறது. அதுவரை மதுரையில் பிறந்து வளர்ந்து மதுரையைப் பற்றி எழுதாத ஏராளமான நண்பர்கள் சார்பில் சுப்பிரமணியனுக்கு நன்றி.
English
பிரதிக்கு:
Notion Press Vanagaram Chennai
Amazon.in
First print. Sep 2021
Price Rs. 149.