அமியா இந்தியப்பெற்றோருக்கு பக்ரைனில் பிறந்தவர். பின்னர் தைவான், சிங்கப்பூர், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களில் வசித்தவர். தத்துவயியலாளர். முனைவர் பட்டத்தைத் தத்துவயியலில் பெற்றவர். ஆக்ஸ்போர்டு பல்கலையில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரியும் இவரது இந்த முதல் நூல் செப்டம்பர் 21, 2021ல் வெளியாகியது.

பெண்ணுக்கு பாலியல் சுதந்திரம் என்பது உலகம் முழுதும் பல ஆண்டுகளாகப் பேசப்படும் ஒரு கருத்து. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே இன்னும் பரிபூர்ண சுதந்திரம் பெண்களுக்குக் கிடைத்ததாக சொல்ல முடியாது. ஆண்களைப் போலவே தன் கீழ் வேலைபார்ப்பவரை மிரட்டிக் காரியத்தை சாதிக்கும் பெண் உயரதிகாரிகள் இந்தியாவில் இருப்பதாக என்னளவில் கேள்விப்படவில்லை. இந்தியப் பெண்கள் No என்ற வார்த்தையை இந்த விசயத்தில் கேட்க விரும்பாத உளவியல் கூட இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

முதல் கட்டுரை ஆண்களுக்கு எதிரான சதியைப் பற்றிப் பேசுகிறது. இங்கிலாந்தில் பாலியல் வல்லுறவு என்று பெண்களால் குற்றம் சாட்டப்பட்ட மொத்த வழக்குகளில் 3% மட்டுமே பொய் வழக்குகள்.
இங்கிலாந்து போலிஸாரும், FBIம் இது எட்டு சதவீதம் என்று சொல்கின்றனர். இரண்டு போலிஸாருமே காயங்கள், போராட்டம் நடந்ததற்கு ஆதாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் தரப்படும் புள்ளிவிவரம் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியது. சென்ற வருடம் பதிவான வழக்குகளில் 53% காவல்துறை கணக்கின்படி பொய்யாகத் தொடுக்கப்பட்ட வழக்குகள். புரையோடிப் போன அதிகார இயந்திரத்தை விடுங்கள். சமூகப்புறக்கணிப்பு இன்னும் இருக்கும் சூழலில் அவமானத்தையும் சந்தித்து, அநீதியைப் பரிசாகப்பெறும் பெண்களின் நிலைமை?

கறுப்பினத்தவரில் ஆண்களை ரேப்பிஸ்ட்டாகவும், பெண்களை Rapeக்குத் தகுதியில்லாதவர்கள் என்ற பொதுவான Myth இன்றும் இருந்து வருகிறது.

உலகின் ஜனத்தொகை UNன் புள்ளிவிவரப்படி ஏறக்குறைய 7.9 பில்லியன்.
Porn Hub என்ற ஒரு தளம், 2017ல் மட்டும் 28.5 பில்லியன் வருகை நிகழ்ந்ததாகச் சொல்கிறது. Pornஐ யாரும் தடை செய்வதற்கில்லை, அதில் பெரும்பான்மை நிதர்சன உலகில் நடத்தமுடியாது என்ற புரிதல் பதின்பருவத்திலேயே ஏற்பட்டது என்றால் போதுமானது. Porn is not Pedagogy.

Victim blaming என்பது இந்தியாவில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்திலும் கூட இருந்து வருகிறது. பெண்கள் அணியும் உடைகள் அவர்கள் பாட்டி பெருமைப்படும் வகையில் இருக்கவேண்டும் என்று இங்கிலாந்திலும் சொல்கிறார்கள். அங்கே உயர்நிலைப்பள்ளி Faculty meetingல் சொல்லியது இது: ” I don’t see how the boys are supposed to learn the quadratic equation if they are staring at girl’s thong”

பாலியல் உரிமை (Right to sex) என்பது இருபாலாருக்கும் பொதுவானது. அது போல் ஒரு பாலின, இருபாலின, எதிர்பாலின உறவுத்தேர்வுகளும். அதற்கும் பெண்ணியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்ணியவாதி Pro-sex அல்லது Anti sexualஆக இருக்க முடியும். பாலியல் உரிமை என்பது எப்போதும் இருவரின் சம்மதத்திற்கும், சம்மதத்திற்குப் பின்னும் விருப்பமில்லாத பாலியல் வன்முறையை செய்யாதிருப்பது போன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

சம்மதம் என்று பேசுகையில், ஆசிரியர்- மாணவர் உறவு. (Common gender) அமெரிக்காவில் இது பெரிய குற்றம். அது போலவே Advocate-Client, Doctor-Patient போன்ற பல உறவுகள் அமெரிக்காவைப் பொறுத்தவரை வேலைக்கான லைசென்ஸை இழக்க வைப்பவை. இந்தியாவைப் பொறுத்தவரை நாம் பெரிதாக இதற்கு எதிர்வினை செய்வது கிடையாது. மற்ற உறவுகளை விட ஆசிரியர்- மாணவர் உறவில், சம்மதம் சொல்லும் வயதை அடைந்திருந்தாலும், அவர்களே முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எடுத்தாலும், அவர்கள் குழந்தைகள் என்ற பொறுப்புணர்வு ஆசிரியருக்கு இருக்க வேண்டும். சட்டம், சமூகம் எல்லாவற்றையும் விட Conscious பெரிதாக செயல்பட வேண்டிய சந்தர்ப்பமிது.

விபச்சாரத்தைப் பொறுத்தவரை அது பரிவர்த்தனை. அங்கே சம்மதம் என்பது தொகையில் முடிகிறது. இது இருபாலினத்துக்கும் பொருந்தும். ஆண் விபச்சாரிகள் கூட பணத்தை வாங்கியபின் சம்மதம் சொல்லத் தேவையில்லை. ஆனால் பெண்களில் பெரும்பாலான பாலியல் தொழில் செய்வோரிடம் உடல்சார்ந்த வன்முறையில் ஈடுபடுவர் அதிகமாவது உலகமெங்கும் நடைபெறுவது. விபச்சாரிகளைக் கொல்லும் சீரியல் கில்லர்கள் குறித்த உண்மைக்கதைகள் மேலைநாடுகளில் வந்திருக்கின்றன.

அமியா அடிப்படையில் தத்துவயியலாளர். சமூகவியல், அரசியல் கோட்பாடுகளைக் கற்பிப்பவர். இந்த நூலில் பாலியலின் அரசியல் பற்றிப் பேசுகிறார். இது ஒரு முழுமையான பெண்ணியவாதி எழுதிய நூல். எங்கே, யார் ஒடுக்கப்பட்டாலும் குரல் கொடுப்பதே பெண்ணியம். கறுப்பின ஆண்கள் வெள்ளையினத்தவர் செய்யும் அதே குற்றத்திற்கு சராசரியாக 3.5 மடங்கு கூடுதல் தண்டனை பெறுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

அடுத்தது பெண்ணியம். வெள்ளையினப் பெண்ணியமும் கறுப்பினப் பெண்ணியமும் ஒன்றா? இஸ்லாமியப் பெண்ணியமும் கிருத்துவப் பெண்ணியமும் ஒன்றா? Me too போன்ற கூட்டு நடவடிக்கைகள் கூட எந்தப் பெண்களுக்கு உதவுகின்றன? டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைக்கு எழுந்த நாடு தழுவிய எதிர்ப்பு கன்னியாகுமரியில் நடந்தால் அதே Intensity இருக்குமா? உயர்ஜாதிப்பெண் என்று சொல்லப்படும் பெண்ணுக்கும், தலித் இனத்தைச் சார்ந்த பெண்ணுக்கும் பாலியல் வன்முறை நடந்தால் சமூகத்தின் எதிர்வினை ஒன்றே போலவா இருக்கிறது? அமியாவின் கட்டுரைகள் பதில்கள், தீர்வுகளை விட ஒரு உரத்த சிந்தனையை எழுப்ப வழி வகுக்கின்றன. அந்த வகையிலும் இது முக்கியமான நூல்.

Incel movementல் எழுந்த தொடர் கொலைகளே அமியாவின் The Right To Sex கட்டுரைக்கு காரணியாக இருந்திருக்கிறது. அமியா ஒரு தேர்ந்த வழக்கறிஞரின் சாதுரியத்தோடு பாலியல் உரிமை பிரச்சனையை பல கோணங்களில் இருந்து அணுகியிருக்கிறார். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய மூன்றுநாடுகளில் உள்ள பெண்களின் நிலை மற்றும் பிரச்சனைகளை நூலுக்காகக் கருத்தில் கொண்டுள்ளார். அந்த வகையிலும் இந்த நூல் முக்கியமானது. Notes என்று நூலின் பின்பகுதி இணைப்பே நூறு பக்கங்களுக்கு மேல் போகிறது. அவை வெறுமனே கூகுள்தள இணைப்புகள் மட்டுமில்லை, புத்தகங்களின் பெயர்கள் மட்டுமல்ல, யார், என்ன, எப்போது, எதில் சொன்னார் என்ற குறிப்புகளோடு இருப்பவை. Stydy resultsஐக் கூட கட்டுரைக்காக இணைத்திருக்கிறார்.
பெண்களுக்கு மட்டுமல்ல, இங்கே அல்புனைவு நூல்கள் எழுதுபவர்களுக்கும் பலமாகப் பரிந்துரை செய்கிறேன்.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s