ராமேஸ்வரத்தில் பிறந்து மதுரையில் வளர்ந்தவர். தமிழக வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். நாற்பது ஆண்டுகளாக சிறுகதை எழுதி வரும் இவரது முதல்நாவல் 2019ஆம் ஆண்டு வெளியானது. 2020ல் இவரது இரண்டாவது நாவல் வெளிவந்தது. இது சமீபத்தில் வெளிவந்த மூன்றாவது நாவல்.
தற்செயல்கள் நாவலில் நிறைய வருவதற்கு முன்னுரையில் விளக்கம் தந்திருக்கிறார். அது பரவாயில்லை, தற்செயல்கள், விலக்குகள் இல்லையென்றால் நாவல்கள் சிறுகதைகள் அளவில் முடிந்துவிடும். ஆனால் கடைசிவரை புதிதுபுதிதாய் ஆட்களை வேறுவேறு பெயரில் சந்திக்கும் மாயப்பிறவி தலையில் அந்த சாமியாரையும் கட்டி விட்டிருக்கலாம்.
நாவலில் ஒரு காதல் கதை சீராகச் செல்கிறது. தடைகளை உடைத்துச் சேர வேண்டிய காதல். இடையே பல குட்டிக்கதைகள் நானாசாகிப்பில் இருந்து வள்ளலார் கதை வரை வந்து போகின்றன. கடைசி அத்தியாயத்தில் வரும் மனிதன் தான் சர்வேஸ்வரனா இல்லை நந்தினி பயந்தது போல் சாமியார் தான் சர்வேஸ்வரனா? தெரியாது.
நேர்க்கோட்டு காதல்கதை, நல்லவர்களுக்கு வரும் கெடுதல் கதிரவனின் பார்வை பட்ட பனிபோல் விலகும் என்று வாசித்தவர்கள் யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக, எல்லாப் பருப்புகளையும் ஒன்றாய் கலந்து துவரம்பருப்பைத் தனியாக எடுக்கும் வேலையைக் கொடுத்தாகி விட்டது. கடைசியில் மாயப்பிறவி யாரென்ற கேள்விக்கும் பதில் சொல்லாமல் விட்டாயிற்று. Steeringல் கை பட்டும்படாமல் இருந்தாலே போதும், கார் சொன்ன பேச்சைக் கேட்டு விரையும். ஆனால் Steering கட்டுப்பாட்டை இழந்தால் எவ்வளவு திறமைசாலியான ஓட்டுனராலும் அதைச் சீர்செய்ய முடியாது. இந்த நாவல் கட்டுப்பாட்டை இழந்த கார்.
நாவல்கள்
பிரதிக்கு:
காலச்சுவடு பதிப்பகம் 4652-278525
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ. 150.