தளும்பல் – எஸ்.சங்கரநாராயணன்:
பெண்பிள்ளைகளுக்கு அப்பாவின் மேல் பிரியம் எவ்வளவு இருந்தாலும் நெருக்கம் அம்மாவிடம் தான். அடிவயிறு போட்டுப் பிசைவதை அப்பாவிடம் சொல்ல எந்தப்பெண்ணும் விரும்புவதில்லை. அதீத ஒழுங்கில் அம்மாவால் வளர்க்கப்பட்ட பெண், அவள் இல்லாத போதும் முழுதாக அப்பாவிடம் மனதைத் திறப்பதில்லை. பரஸ்பர தியாகம், தன்னடக்கம் பெண்ணுக்கு அப்பாவிடம் இருந்தே வந்திருக்கும்.
நீலம்- நிர்வாணம்-நிதர்சனம்- சியாம் பாரதி:
முழுக்கவே ஓவியநுணுக்கங்கள் பற்றிய கதை. எனக்கு ஓவியங்கள் புரிவதில்லை.
பெருந்தேவிக்கு பி.ஜி.உடௌஸ் வேண்டாம்- பா.ராமானுஜம்:
Wodehouse பெயருக்குப் பதிலாக எந்தப் பெயரையும் வைத்துக் கொள்ளலாம். நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கதை இது என்றாலும் இன்றைய நடைமுறை உண்மையைக் கூறுகிறது. எண்பதுகளில் கூகுள் இல்லை, படிக்காத விசயத்தைப் பேசமுடியாது. இன்று கூகுளில் கிடைக்கும் விசயம் ஆழ்ந்த வாசகருக்கே குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.
கோழிக்குஞ்சுகள் – அமர்நாத்:
தலைப்பு ஒரு Metaphor. இந்தியத் திருமணங்கள் மிகவும் சிக்கல் வாய்ந்தவை. நூற்றாண்டுகளாக நாம் எளிதாகத் திருமணங்களை நடத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளைக் காரணம் வைத்தே நிறையத் திருமணங்கள் பிழைத்திருந்திருக்கின்றன. இப்போது மாறும் கலாச்சாரத்தில் குழந்தைகளுடன் Quality time என்பதே அரிதாகிவருகிறது.
இதே கதைக்கருவில் மேல்நாட்டு மருமகள் என்று ஒரு திரைப்படம் வந்தது.
ரசம் – தருணாதித்தன்:
மற்ற ரசனைகளில் இருந்து மாறுபட்டது இசை. சாப்பாடு அதன் சகோதரி. அதனால் தான் இசையை ரசிப்பவருக்கு சாப்பாட்டு ரசனையும் பெரும்பாலும் இருக்கும். ஆனால் சாப்பாட்டு ரசனை இருப்பவருக்கெல்லாம் இசை ரசனை இருக்க வேண்டிய கட்டாயமில்லை.
நோவு – ஸிந்துஜா:
பயத்தையும், குரோதத்தையும் வெளிப்படுத்தும் கதை. மனித மனத்தில் ஒளிந்திருக்கும் வக்கிரங்கள் தான் எத்தனை! வெளிப்படுத்தாதவரை எல்லோரும் நல்லவரே.