ஆசிரியர் குறிப்பு:
கேரளாவில் பிறந்து பொள்ளாச்சியில் வசிப்பவர். சிறுகதையாசிரியர். கவிஞர். நவீன தாந்த்ரீக ஓவியர். மொழிபெயர்ப்பாளர். இவரது ஒரு சிறுகதைத்தொகுப்பு மற்றும் கவிதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்துள்ளன. இது இவருடைய முதல் நாவல்.
உமர்பாரூக்கின் கோடிக்கால் பூதம் கொரானா காலப் பேரிடரை மையமாக வைத்து சிகிச்சைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் குளறுபடிகள் குறித்துப் பேசியது. இந்த நாவல் ஒரு மதநல்லிணக்கம் நிறைந்த, கற்பனை கிராமத்தில் பேரிடர் காலத்தில் நடைபெறும் மதங்களின்அரசியல் குறித்துப் பேசுகிறது.
ஷாராஜ் இந்த நாவலின் மூலம் கேட்கும் கேள்விகள் ஏராளம். இந்து மதத்தை சொந்த மதக்காரர்கள் விமர்சிப்பது போல் மத்த மதங்களில் ஏன் செய்வதில்லை? மதநல்லிணக்கம் என்பது அடுத்தவர் மதநம்பிக்கையை விமர்சிக்காததும் சேர்ந்தது அல்லவா? ஏன் கிறித்துவ மதம், இஸ்லாமிய மதம் சார்ந்தோர் இந்துக் கடவுள்களை விமர்சிக்கிறார்கள்? கிருத்துவ மதப்பிரச்சாரங்களை அவர்கள் இந்துக்களிடம் வைத்துக் கொள்வது போல் ஏன் முஸ்லீம்களிடம் வைத்துக் கொள்வதில்லை? கிருத்துவ மதத்தில் ஜாதி கிடையாது என்கிறார்களே, கிருத்துவ பிள்ளை, வன்னியர் கிருத்துவ தலித்துகளுடன் திருமணஉறவு வைத்துக் கொள்கிறார்களா? பொதுவாக மாமன், மச்சான் என்று பழகிவரும் இந்து முஸ்லீம் பொதுஜனங்கள் நடுவே நஞ்சைப் பாய்ச்சுவது யார்? கேள்விகள்…………..
ஒரிஸ்ஸாவில் ரத்னகிரியில் புத்தருக்கென்று ஒரு கோவில் இடிபாடுகளுடன் இருக்கிறது. முஸ்லீம் படையெடுப்புகளில் சிதிலமாக்கப்பட்ட கோவில். நான் அங்கே போயிருந்த போது ஆச்சரியப்பட்ட விசயம், புத்தரை அடுத்த அவதாரமாக்கி இந்துக்கள் அவரை வழிபட்ட தகவல்கள். முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒன்று கூடுதல் ஆனால் என்னவாகிவிடும். ஆங்கிலேயர்கள் இருமதத்தினரிடையே நித்தியபகைக்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றை செய்துவிட்டுப் போனார்கள். அதன் பின்னர் இந்துக்களுக்கு என்று ஒன்றிரண்டு கடவுள்களைப் பிரதானப்படுத்துகையில் மற்ற மதங்களின் துவேஷங்கள் இங்கும் நுழைந்தது. மதவாதக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்துத் தீவிரவாதிகள் வெளிப்படையாகத் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டனர்.
சமூகஊடகங்களின் பணி வதந்திகளைப் பரப்புவதில் முதன்மையானது. உண்மையில் அதுவே பெருந்தொற்று. தொழில்நுட்பத்திறனும் பயிற்சியும் பெற்ற பத்திரிகைகளே செய்திகளைத் திரித்துக் கூறுகையில், ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர் எல்லாம் எல்லா விசயங்களுக்கும் அபிப்ராயம் சொல்லுவது
மிக ஆபத்தான ஒன்று என்ற புரிதலும் இங்கில்லை.
கொரானா காலத்திய செய்திகள், வதந்திகள் எல்லாவற்றையும் வைத்தே இந்த நாவல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே புனைவம்சம் என்பதே இதில் அதிகம் இல்லை என்று சொல்லலாம். கொரானாவைத் தடுக்க தூதுவளை, மஞ்சள், மிளகு கலந்த பானகம் என்பதில் இருந்து, வீதிகளில் வேப்பிலைத் தண்ணீர், பினாயில், டெட்டால் தெளித்தது வரை கொரானா காலகட்டத்திய சமூகத்தின் எல்லா எதிர்வினைகளும் பதிவாகி இருக்கின்றன.
தப்லீக் மாநாட்டைச் சுற்றியே நாவலின் பெரும்பகுதியில் உரையாடல்கள் நடக்கின்றன. கும்பமேளாவிற்கு 90 லட்சம் பேர் பங்கு பெற்றிருக்கிறார்கள். மதங்கள் மனிதநேயத்தில் விஷத்தைக் கலக்கின்றன.
அடுத்து வரும் தலைமுறையேனும் மதங்களைக் களைந்து மனிதர்களாக வர வேண்டும்.
கொரானா காலத்தில் மதங்களை முன்னிலைப் படுத்தி வெளிவந்த நாவல் என்ற வகையில் இது முக்கியமானது. பாரம்பரியக்கதை வடிவம் இல்லாது, சமகால உலக இலக்கியங்கள் பலவற்றில் காணப்படும் அல்புனைவு பாணியில் நாவலை எழுதி இருக்கிறார். இதில் வரும் தகவல்கள் எல்லாமே நாம் அறிந்தவை. பரிட்சார்த்தமாக விவேகானந்தர் இஸ்லாம் குறித்துப் பேசியது, நபிகள் நாயகம் quotesஐ நாவலின் நடுவில் சேர்த்திருக்கிறார்.
Youtube comments, முகநூல் பதிவின் Comments என்று பலரும் எதிர்வினை செய்ததாக நாவலின் நடுவில் (புனைவு) வருகின்றது. நாவலின் கடைசிப்பகுதி முழுக்கவே புனைவாகிறது. இந்த நாவலை நன்கு எடிட் செய்திருந்தால் பக்கஅளவில் குறைந்து இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நல்ல முயற்சி இது.
பிரதிக்கு:
Zero Degree Publishing 98400 65000
முதல்பதிப்பு ஆகஸ்ட் 2021
விலை ரூ. 430.