ஹஸன் வங்கத்தின் மூன்று முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் என்று பதிப்பகத்தாரின் குறிப்பு சொல்கிறது. முதுகலை பட்டப்படிப்பை முடித்துப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இருபத்து நான்குக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். வங்கத்தின் பல விருதுகளைப் பெற்றவர்.
பாஸ்கர் சட்டோபத்யாய வங்கத்திலிருந்து ஆங்கிலத்திற்கு பலநூல்களை மொழிபெயர்த்தவர். எழுத்தாளர்.
தாமரைச் செல்வி, தென்றல் சிவக்குமார் என்ற பெயரில் பரவலாகத் தெரிந்தவர். எனில் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். ஏற்கனவே ஒருநூலை சாரு நிவேதிதாவுடன் இணைமொழிபெயர்ப்பு செய்தவர்.
கணிசமான பாகிஸ்தானிய, பங்களாதேஷ் எழுத்தாளர்களிடம் இந்திய, இந்து எதிர்ப்பு நிறைந்திருக்கும். இவ்வளவிற்கும் அவர்களின் தாய் வீடு இது. அதனால் தான் மண்ட்டோ போன்ற வெகுசிலர் இலக்கியத்திற்காகவே எல்லோராலும் விரும்பப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள்.
ஹஸன் ஓரிடத்தில் சொல்கிறார், இந்து மதத்தில் மாட்டுச்சாணத்தைத் தின்பது புனிதம் என்றிருக்கிறதாம். இன்னொரு இடத்தில் பாகிஸ்தானில் இரண்டு வேளை சோறாவது கிடைக்கும், இந்தியாவில் வறுமையில் இறக்க வேண்டியது தான். இது போல் பல கதைகளில் பல இடங்களில்.
பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது. 1964ல் இருந்து 1999க்குட்பட்ட காலத்தில் சிறுகதைகள் நிறையவே எழுதியிருக்கிறார். தொகுப்பின் முதல்கதை நாற்பத்து இரண்டு பக்கங்களில் சொல்லும் கதைக்கருவை, நகரம் கதையில் இன்னும் அழுத்தமாக சுஜாதா சொல்லி விட்டார் என்று தோன்றுகிறது. அது போலவே இரண்டாம் கதையின் அதேகருவில், வண்ணநிலவனின் சிறுகதை எஸ்தர் நேர்த்தியிலும், கலைநுட்பத்திலும் சிறந்தது.
ஹஸன் அடித்தட்டு மனிதர்கள் பற்றியே இந்த தொகுப்பு முழுவதுமுள்ள கதைகளை எழுதியிருக்கிறார். துக்கத்தின் நிலவறை, கழுகு, மந்திரவாதி, மின்னும் தண்டவாளம், புதிர்பாதையை ஊர்ந்து கடக்கும் மரவட்டை போன்ற கதைகள் இவரை சிறந்த சிறுகதை எழுத்தாளராக அடையாளம் காட்டுகின்றன.
புலம் பெயர்ந்தவர்களின் துயரங்களை இவர் தனது கதைகளில் அடிக்கடி விவரித்திருக்கிறார்.1947ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிகையில் இவருக்குஎட்டுவயது. அதன்பின் 1971ல் கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிறது. கிட்டத்தட்ட 9% இருக்கும் இந்துக்கள், முஸ்லீம்களைத் தாக்குவார்கள் என்று கதைகள் எழுதுவதை நாம் இங்கிருந்து பார்க்கையில், அதீத கற்பனையாகத் தோன்றுகிறது.
ஹஸனின் மொழிநடை “மரித்துப்போன அம்மாவின் நகைகளை வருடிக் கொடுப்பது” என்பது போல் அழகியலுடன் பல இடங்களில் வாசிப்பைத் தொடர விடாமல், வேகத்தடை போடுகிறது.
பெங்காலியில் இருந்து, ஆங்கிலத்திற்கு வந்து பின் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் தாமரைச் செல்வி. வாசிக்கத் தமிழ்க்கதைகள் போலிருக்கிறதே என்று Vulture கதையை ஆங்கிலத்தில் முழுதும் படித்தேன். எதையுமே மாற்றவில்லை. இத்தனை நாட்களாக ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரை வெற்றிகரமாக ஒளித்து வைத்திருந்திருக்கிறார் இவர். (இணை மொழிபெயர்ப்பு நூலை இன்னும் வாசிக்கவில்லை) உலக இலக்கிய வரிசை என்ற மேலட்டைக் குறிப்பு இன்னும் பல உலக இலக்கியங்கள் வருவதற்கான முன்னறிவிப்பு. வரவேற்போம் நாம்.
மொழிபெயர்ப்புநூல்கள்
பிரதிக்கு:
Zero degree Publishing 98400 65000
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.280.