மார்ட்டின் ஓ’ கைன் அயர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர். ஐரிஷ் மொழிபெயர்ப்பாளராக, விரிவுரையாளராகப் பணியாற்றியவர். ஐரிஷ் நவீன இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர். இது இவரது கடைசிக் குறுநாவல்.

ஆலன் டிட்லி அயர்லாந்தில் பிறந்தவர். எழுத்தாளர், கல்விப்புல அறிஞர், பேராசிரியர். பல படைப்புகளின் இடையே ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்தவர்.

ஆர்.சிவக்குமார் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல முக்கியமான நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர். இதே ஆசிரியரின் இன்னொரு நாவலான வசைமண் என்ற நூலும் அதில் ஒன்று.

காஃப்காவின் K போல இந்த நாவலின் கதாபாத்திரம் N. அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளில் அதிருப்தியும், சமூகத்தின் மீது அவநம்பிக்கையும் கொண்டவன். பல நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த அவன் மனைவி இறந்ததால் ஈமக்கிரியைகளுக்கு தயார் செய்யச்சொல்லி மனைவியின் சகோதரியிடம் இருந்து அலுவலகத்தில் இருக்கையில் தொலைபேசி அழைப்பு வருகிறது. அடுத்த இரண்டு நாட்களில் அவன் சந்திக்கும் மனிதர்களும் பிரச்சனைகளுமே இந்தக் குறுநாவல்.

மனைவியின் இறப்பினால் ஏற்படும் துயரத்தை விட, Indecision and avoidance என்பதே இந்த சிறிய நாவலில் முக்கியபங்கு வகிக்கிறது. நம்பத்தகாத கதைசொல்லியின் கோணத்தில் கதை நகரும் பொழுது, வாசகர்களின் மனத்திரையில் வேறு கதை ஒன்று ஓடிக் கொண்டே இருக்கும். Stranger நாவலில் வரும் Meursault போலவே N ஏன் அப்படி நடந்து கொள்கிறான் என்று நம்மால் புரிந்து கொள்வது சிரமம்.

N என்ன செய்ய வேண்டும் என்று அநேகமாக எதிர்ப்படும் எல்லோருமே சொல்வது ஒன்றைத் தான். ஆனால் சொல்லி வைத்தது போல் அவன் சந்திக்கும் யாருக்குமே அவனுக்குப் பணஉதவி செய்ய விருப்பமில்லை. சமூகம் குறித்த, அரசாங்க அலுவலர்கள் குறித்த, மதவாதிகள் குறித்த விமர்சனமும் மறைமுகமாக வந்து கொண்டே இருக்கிறது.

அவனது மனைவியின் சகோதரிகள் மற்றும் சகோதரன் மேலிருக்கும் வெறுப்புக்கு அவன் காரணம் சொல்வதில்லை. அதே போல் மனைவியின் மீதான கரிசனத்தை வெளிப்படுத்தும் ஒருவரி கூட நாவலில் இல்லை. “கடைசியாக இறந்து விட்டாள்” என்று சொல்வது கூட அவள் மேலிருக்கும் அனுதாபத்தை விட, இவன் பெருமூச்சு விட்டு விடுதலை என்று சொல்வது போல் இருக்கிறது.

எவருமே சரியில்லை என்று நினைக்கும் இவன், மனைவியின் சடலத்தை வைத்துக் கொண்டு எதற்காக அலுவலகம் செல்ல வேண்டும், அலுவலகத்தில் உள்ளவர் எல்லோரும் வீட்டுக்குச் செல்ல அனுமதித்த பிறகு எதற்காக பல்பொருள் அங்காடியில் மலிவு விலை பொருட்களை வாங்கப் போக வேண்டும் என்பதில் ஆரம்பித்து அதன்பின் நடக்கும் ஒவ்வொன்றிலும், குற்றஉணர்வு, துயரம் என்பது இவனிடம் துளியுமில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வசைமண் நாவலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நாவல் இது. ஓயாத பேச்சின் மூலம் கதை நகர்வது வசைமண்ணில். இதில் சம்பவங்கள் மற்றும் திரி பொருத்திய வெடிக்குக் காத்திருப்பதைப் போல வாசகர்கள் ஒரு நிகழ்விற்காகக் காத்திருப்பதுமாகக் கதை நகர்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே மெல்லிய Black humour நாவலில் கலந்து வருகிறது. ஒரே அமர்வில் படித்துவிடக்கூடிய நீளம் கொண்ட நாவல். இது ஒரு Escapistன் கதை. சிவக்குமாரின் தெளிவான, திருத்தமான மொழிபெயர்ப்பு இதை ஐரிஷ் நாவல் என்று நம்ப மனம் மறுக்கும். கவனமாகப் படிக்க வேண்டிய, நல்ல வாசிப்பனுபவத்தை தரக்கூடிய நாவல் இது.

மொழிபெயர்ப்புநூல்கள்

பிரதிக்கு :

காலச்சுவடு பதிப்பகம் 4652- 278525
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.160.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s