கிழவியும், பிக்காஸோவும், புறாக்களும்-
கலாமோகன்:
சம்பவங்கள், Stream of consciousness, Associative memory எல்லாவற்றையும் சேர்த்து கதையே இல்லாமல் ஒரு சிறுகதை எழுதுவது நவீன இலக்கியத்தில் பலரும் செய்வதே. ஆனால் கலா மோகனின் கதைகள் ஒன்று எனக்குப் புரிவதில்லை. அல்லது பெண்களுடன் நிகழ்த்திய காமசாகசங்களின் சாறு இவர் கதைகள். அந்த எண்பதுவயது மூதாட்டி கதையில் இருந்து மறையும் வரை படபடக்கும் நெஞ்சில் வலதுகையை ஆதுரமாக வைத்துக் கொண்டே படித்து முடித்தேன்.
திகம்பரபாதம்- சுஷில் குமார்:
சுஷில் குமாரின் மொழி வசீகரமானது. சரித்திர நாவலைப் படிப்பது போன்ற உணர்வைக் கொடுத்த சிறுகதை. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சித்தியடைந்த கோரக்கச்சித்தரின் கதை. ஆன்மீகத்துடன் அமானுஷ்யத்தைக் கலந்து எழுதுகையில் சுஷில்குமாரின் எழுத்து அப்போது தான் குளித்து வந்த அழகைப் பார்ப்பது போல் எழில் கொள்கிறது.
கம்பாட்டம்- ஜெயன் கோபாலகிருஷ்ணன் :
ஜெயமோகனின் Template கதைகளின் நீட்சியாக நிறைய எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். மூதாதையரின் கதைகளை வாய்மொழியாக பேரன்பேத்திக்குச் சொல்வது இனிமேல் இது போன்ற கதைகளில் தான் பார்க்கமுடியும்.
தாத்தா பதில் சொல்லாது கதை Openended ஆக முடிவதும் ஜெயமோகன் பாணி.
புறப்பாடு- முகம்மது ரியாஸ்:
இஸ்லாம் மதத்தின் ஆன்மீகத்தில் நுழைந்து வெளிவரும் கதை. ஆழ்ந்து பார்த்தால் எல்லா மதங்களின் அடிப்படைக் கருத்துகளும் ஒன்றே. எதில் இருக்கிறோமோ அதில் உண்மையாக இருப்பதும் ஆன்மீகம் தான், அது துறவாயினும் சரி, இல்லறமாயினும் சரி.
பாற்கடல் – எஸ்.சங்கரநாராயணன்:
குழந்தை உருவாகுவதில் இருந்து பிறக்கும் வரையான ஒரு Circle இந்தக்கதை. தாய்மையே பாற்கடல். அங்கு அமிர்தம் மட்டுமே எப்போதும் சுரக்கும். அநேகமாக எல்லோர் வாழ்விலும் பிரசவஅறையின் வெளியே கையைப்பிசைந்து கொண்டு நின்ற அனுபவம் ஒருமுறையேனும் இருந்திருக்கும். அந்த உணர்வின் Recap இந்தக்கதை.
முகம் புதை கதுப்பினள் – ரெஜி இசக்கியப்பன்:
கூந்தல் கொண்டு முகத்தை மூடுவது குறித்துத் தமிழில் எத்தனை பாடல்கள்! ஆனால் Autopsy Pathology பற்றி வெகு குறைவு. Patricia Cornwell அது குறித்து எழுதுவதில் மாஸ்டர். கடைசியில் வாசகருக்கு ஒரு Joltஐக் கொடுக்கும் வாய்ப்பை, தலையை Open பண்ணும் (Brainஐ எதற்கு வெளியில் எடுக்கவேண்டும்?) procedure spoil செய்து விடுகிறது.
நமக்கு நன்கு தெரியும் விசயங்களை வைத்தே எவ்வளவோ கதைகள் எழுதலாம் இல்லையா?
கத்துங்குயிலோசை – நந்தாகுமாரன்:
குயில் இரவில் கூவுமா? பூமியில் மொத்தமும் நமக்கு என்று மனித இனம் நினைத்துக் கொள்வதைப் பற்றி பல கதைகள் உலகெங்கிலும் இருந்து வருகின்றன. இந்தக்கதை அதை வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறது. ஒருவேளை குயில் இனி கத்தாவிட்டாலும் அவனைப் பார்த்த பார்வை தூக்கத்தைக் கெடுக்கப் போதுமானது.
புத்த மணியோசை- கன்னடத்தில் மகந்தேஷ் நவல்கல்- தமிழில் கே.நல்லதம்பி:
விவசாயிகளின் பிரச்சனையை சொல்ல நினைத்தது கூடிவரவில்லை இந்தக் கதையில். வேசி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்வது OK ஆனால் ஏழை விவசாயிகளுக்கு சம்பளத்தில் ஒரு பகுதி என்பது Oddஆக இருக்கிறது. இவன் விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சுபவர்களுக்கு துணைபோவதால் அவள் அதை செய்ய வேண்டுமா என்ன? அடுத்து எல்லா முகவர்களையும் விட அதிக விற்பனை செய்யவேண்டும் என்று வருடம் முழுவதும் அலையும் போது வராத தர்மசிந்தனை பாங்காங்கில் வருகிறது. இவன் கண்டிப்பாக ஜரோப்பா டூரும் போவான். தன்னைத் தவிர வேறு யாரையும் பராமரிக்கமுடியாத தோழர்கள் பேசும் இடதுசாரித் தத்துவங்களை இவன் போன்றவர் பேசுகையில் எரிச்சல் வருகிறது. நல்லதம்பி முதல்பரிசு வாங்கிய கதைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பு செய்வதற்கும், தெளிவான மொழிபெயர்ப்புக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்.
சாத்தானின் தந்திரங்கள் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்- தமிழில் சக்திவேல்:
நல்ல மொழிபெயர்ப்பு. ஆனால் இது சிறார் கதையா?