படகில் பொறித்த அடையாளச்சின்னம் -வியட்நாமியில் பௌ நின்- ஆங்கிலத்தில் லின் தின்- தமிழில் விஜயராகவன்:
அமெரிக்க-வியட்நாமியப் போர் சமீபகாலச் சரித்திரத்தில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. அமெரிக்கப் பார்வையில் வியட்நாம் போர் ஒரு பயங்கரம், தியாகம். அமெரிக்கா வியட்நாம் போரில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டது. போர்கள நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்படுதலும், தொலைந்த ஒன்றை இடைவிடாது தேடுதலும் இந்தக் கதையின் சிறப்பம்சங்கள். விஜயராகவனின் மொழிபெயர்ப்பு நன்று. ஆனால் சில வாக்கியங்களைத் தமிழில் எளிதாக மாற்றலாம், தேவையெனில் வாக்கியங்களை இரண்டாக, மூன்றாக உடைக்கலாம்.
திரௌபதி- மகாஸ்வேதா தேவி – தமைமிழில் கார்குழலி:
திரௌபதி தேவியின் ஒரு முக்கியமான, பாப்புலரான கதை. பெங்காலில் நக்சல்பாரி இயக்கம் பற்றிய கதை. புராண திரௌபதியின் கோபம் ஒருவகை. இந்த மலைவாழ் பழங்குடி திரௌபதியின் கோபம் வேறுவகை. எது பெண்களின் மிகப் பலவீனமான விசயமோ அதை தனது பலமாக மாற்றிக்காட்டுகிறாள். தேவியால் மட்டுமே இது போன்ற கதைகளை எழுதமுடியும். புனைவுக்காக இவர் கையாண்ட விசயம் இந்தியாவில் பிற்காலத்தில் உண்மையானது காலத்தின் முரண்நகை. கார்குழலியின் மொழிபெயர்ப்பு அழகு.
மியாவ் – நரேஷ்:
சிறுகதை தான் உங்கள் Successful Format நரேஷ். நன்றாக இருக்கிறது கதை. Magical realism சரியான விகிதத்தில் Mix ஆகி இருக்கிறது. நம் அனைவருக்கும் முன்னோடி காஃப்கா. எல்லாம் சரி. அவன் இங்கே. பூனைக்குட்டிகள் இரண்டும் இங்கே. பெண் பூனை எங்கே? பழிகாரி. கடைசியில் வேலையைக் காட்டி விட்டாள் பார்த்தீர்களா?
நீண்ட மழைக்காலம் – ஜெகநாத் நடராஜன்:
“மழை நின்றால் போதும் என்பது தவிர, அவருக்கு வேறு யோசனைகள் எதுவும் எழவில்லை” என்ற வரிகளுடன் இந்தக் கதை முடிந்து விடுகிறது. அதற்குப்பிறகு வருவதெல்லாம் கதாநாயகியை ஏங்க விட்டு ஜீப்பில் வேகமாகச் சென்று விட்டு, பின் சைக்கிளில் முன்னால் ஏறிக்கொள் என்று சொல்லும் தமிழ் சினிமாத்தனம்.
கறுப்பு வெள்ளை – ஜிஃப்ரி ஹாசன்:
உலகமே நிறத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றும் அமெரிக்காவில் ஒரே குற்றத்திற்கு கருப்பருக்கும், வெள்ளையருக்கும் வழங்கப்படும் தண்டனை வேறு. அணிலுக்கு உணவு வைப்பது, உம்மா விசயத்தைச் சொல்வது, காய்கறியைக் கொண்டு கொடுப்பது போன்ற விசயங்களில் செயற்கைத்தன்மை தெரிகிறது.
பூக்களின் மொழி – கிருத்திகாதாஸ்:
வசனகவிதையில், ஒரு கடிதம், ஒரு காத்திருப்பு, ஒரு பிரிவு, ஒரு சந்தேகம், ஒரு பயம், சஞ்சலம் எல்லாம் சேர்ந்தது இந்தக்கதை. பெண்ணுக்கு ஆண் என்ன செய்யப் போகிறான் என்பது தெரியும் என்பது உண்மையானால் இவள் பரிதாபத்துக்குரியவள்.
தசரதம் – மணி எம்.கே.மணி:
தசரதனுக்குப் பதினாயிரம் மனைவிகள்.
ஆண்கள் ஒரு Womaniser ஆகக் காட்டிக் கொள்வதற்குப் பின்னால் இருக்கும் உளவியலைச் சொல்லும் கதை. அத்துடன் ஒரு தீர்க்க வேண்டிய கணக்கும் பாக்கி இருக்கிறது. மணியின் கதைகள் சமூகத்தின் புரையோடியகாயத்தில் சலங்களை வெளியே எடுத்துக் காட்டுபவை.
நிலாவில் பார்த்தது- எஸ்.ராஜகுமாரன்:
தினமலர் வாரமலர் படிக்கும் உணர்வை நல்கிய கதை.
மரம் சொன்னது – மஞ்சுநாத்:
மரம் சொல்லும் கதை. புதுமைப்பித்தனின் கட்டிலை விட்டிறங்காக் கதையில் யார் கதையைச் சொல்வது பாருங்கள். எந்த வருடத்தில் எழுதியது என்றும் பாருங்கள்.
இப்போது வருடம் 2021. இதற்கு மேல் நான் என்ன சொல்ல இருக்கிறது!
ஆத்தா டீ கடை – தரஹி கண்ணன்:
சென்டிமென்டலின் மொத்த வடிவம் இந்தக் கதை. தாய் மகளுக்குக் கட்டிய தாலி திரைப்படம் போல் எங்கேயோ ஆரம்பித்து எங்கோ முடிகிறது.
நிழல் இல்லா பிம்பங்கள் – பவானி பழனிராஜ்:
காதல் கைகூடாமல் கடமை அல்லது சதி இடைவருவது, காலமெல்லாம் உருகுவது, பின் இருவரில் ஒருவர் இறப்பது என்ற Templateல் தமிழில் எழுதுவதற்கு இன்னும் 1,17,318 கதைகள் பாக்கி இருக்கின்றன.
நிசியிலெழும் பசி – சுரேஷ் பரதன்:
ஒரு ஊனமுற்ற விளிம்புநிலை மனிதனின் சில மணிநேர வாழ்க்கை இந்தக் கதையில் நன்றாக வந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொள்வது வாழ்வாதாரத்திற்குத் தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் சுந்தரேசனுக்கு டிப்ஸ் தர மனமில்லாதவனும், அவனது பலவீனத்தை நேரம்பார்த்து உபயோகித்துக் கொள்ளும் சுந்தரேசனும், கடைசியாக அவன் பார்க்கும் வேலையும் என்று எல்லாமே நன்றாக வந்திருக்கின்றன.
பரிசும் தண்டனையும் – நந்தாகுமாரன்:
குமுதம் ஒருபக்கக் கதை.
தகப்பன் சாமி – பூங்கொடி:
சற்று வார்த்தைகளை மாற்றினால் ஒரு நல்ல குறுங்கதையாகும் சாத்தியம் கொண்ட கதை.
கலகம் இரண்டாவது இதழ் ஒரு கலவையான வாசிப்பனுபவத்தை அளித்திருக்கிறது. இதைக் கதைகள் மற்றும் குறுங்கதைகளை மட்டுமே வாசித்து விட்டு சொல்கிறேன்.
சந்தோஷூக்குப் படைப்புகளின் தேர்வில் பிரச்சனை இருக்கும் என்று நான் நம்பவில்லை. நல்ல படைப்புகளை அடையாளம் கண்டுபிடிக்கத் தெரிந்தவர். இலக்கிய இதழ் நடத்துபவர்களுக்கு Strong No சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். இல்லை நீச்சல் தெரியாதவன் உயிர் பிழைக்கத் தடுமாறி நம்மையும் சேர்த்து தண்ணீருக்குள் இழுப்பதைப் போல, ஜலசமாதி அடையச் செய்து விடுவார்கள். சந்தோஷின் ஆர்வம், உழைப்பு எப்போதுமே நான் பாராட்டுபவை. அந்த இரண்டும் இனிவரும் காலங்களில் அவரை வழிநடத்தட்டும்.