கடைநிலை ஊழியன் – அ.முத்துலிங்கம்:
முத்துலிங்கத்தின் கதைகளில் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடும். “சிரிப்பிலேயே லாபம் சம்பாதித்து விடுவார்”.
அடுத்தது வரிகளைத் தாண்டிய அர்த்தங்கள் அவரது மொழியில் இருக்கும். இந்தக் கதையில் வரும் ஆக்டோபஸ் ஷூ போடுவது போல.
கடைநிலை ஊழியன், நிறுவனத்தின் கடைசிப்படியில் இருக்கும் ஒருவரைக் குறித்து நிறுவனத்தின் தலைவர் சந்தர்ப்ப சூழ்நிலையால், அறிந்து கொள்வது. அவசரகதியான உலகத்தில் நமக்கு அனுதினம் உதவியாக இருப்பவரைக் குறித்து நமக்கு எதுவுமே தெரியாது. நம்மைப் பொறுத்தவரை பால்காரர், பேப்பர்காரர் அவ்வளவே. கென்யாவில் நடக்கும் கதை, அங்கேயும் ஜாதிக்குத் தகுந்த வேலை கொடுப்பது இருக்கும் போலிருக்கிறது. முத்துலிங்கத்தின் கதைகள் வாசிப்பதற்கு சுவாரசியமானவை.
கனா – பொன்முகலி:
கவிஞர்கள் கதை எழுத வந்தால் கவிதை வரிகளைக் கதையில் கண்டெடுப்பது உபரி இன்பம் என்று கொள்க.
“காற்றில் மறைகிற கைகள், வெளியில் மிதக்கிற முத்தங்கள் எதுவும் எனக்கு வேண்டாம். இருளை ஒரு போர்வையைப் போலப் போர்த்திக் கொண்டு நீ வருவதெல்லாம் போதும். நல்ல வெய்யில் உறைக்கிற நண்பகலில் காற்றில் கரைந்துபோகாத கைகளோடு வந்து என் கதவைத் தட்டு.”
இந்த புக்கர் இண்டர்னேஷனில் Andrzej Tichy
எழுதிய Wretchedness என்ற ஸ்வீடிஸ் நாவலும் இந்த சிறுகதையும் ஒரே யுத்தியில் எழுதப்பட்டவை. நினைவெது, கனவெது எனத் தெரியாது இரண்டும் ஒன்றாகக் கலந்திருப்பவை.
நம்பத்தகாத (Unreliable narrator) கதைசொல்லி கதை சொல்லும் போது, வாசகரின் பங்கும் கதையை முழுமையடையச் செய்வதில் பாதி இருக்கிறது. இந்தப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவள். வாழ்வின் நிகழ்வுகள் Nightmares ஆகத் துரத்துவதால் தூக்கத்தை இழப்பவள். இரவில் தூக்கம் வராதவர், எட்டுமணிநேரம் நிம்மதியாகத் தூங்குபவரை விட இந்தக் கதையில் எளிதாக ஒன்றமுடியும். யுத்தியிலும், உள்ளடக்கத்திலும் நல்ல கதை. பாராட்டுகள் பொன்முகலி.