ஆசிரியர் குறிப்பு:
முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள், இந்திய மெய்யியல், நாவல்கள் உள்ளிட்ட இருநூறுக்கும் மேலான நூல்களை எழுதியவர். வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை இருபத்தாறு தொடர் நாவல்களாக, இருபத்தையாயிரம் பக்கங்களில் எழுதியிருக்கின்றார்.
விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் நூல் இது. மின்னூலாகவும், அச்சுப்பதிப்பாகவும் வந்திருப்பது, பரவலான வாசிப்புக்கு உதவும். அநேகமான காலச்சுவடு பதிப்புகள் ஏற்கனவே மின்னூலாக வந்திருக்கின்றன.
நாவல் பற்றிய செய்தியைப் பார்த்ததும், தரவிறக்கம் செய்து வாசிப்பதில் இருக்கும் ஆனந்தம் தனி. மின்னூல்கள் காதலி என்றால் அச்சுநூல் மனைவி. வணிக நோக்கம் இல்லாததால் சொந்த பதிப்பகம் பற்றி சிந்தித்ததில்லை என்று இவர் சொல்வதும் உண்மை. அச்சு இதழ் வந்த பின்பும் இணையதளத்தில் அப்படியே கதைகளை வைத்திருக்கும் ஜெயமோகனுக்கு அதைச் சொல்வதற்கு முழுஉரிமை இருக்கிறது.
முதல் அத்தியாயத்திலேயே ஏராளமான வரலாற்றுச் செய்திகள் வந்து போகின்றன. சாண்டில்யன் கதைகளில் வரும் வரலாறு அல்ல, “இரணியசிங்கநல்லூர் அருகே நட்டாலத்தில் எங்களுக்குரிய குடிநிலமும் ஆலய உரிமைகளும் திரும்ப அளிக்கப்பட்டன.” என்பது போல் வரலாற்றுத் தகவல்களாக வருகின்றன. இவற்றிற்கான அடிப்படை?.இன்னொன்று இந்த நாவலை, ஆரல்வாய் மொழியில் மீனாட்சி அம்மன் ஐம்பத்தொன்பது வருடங்கள் இருக்க நேர்ந்ததை செய்தியாகப் படித்து, இரண்டு நாள்களில் எழுதிய நாவல் இது என்றிருக்கிறார். எனக்கெல்லாம் பத்துபேர் மட்டும் படிக்கும் ஒருகட்டுரையை எழுதவே ஒருவாரத்திற்கு வேறெதையும் வாசிக்காமல் அது குறித்துப் படிக்க வேண்டியதாகிறது.
என்னிடம் அடிப்படையில் ஏதோ தவறு இருக்கிறது என்பது புரிகிறது.
கதைக்குள் நம்மைக்கூட்டிச்செல்ல மொழிநடை அவசியம். வசீகரமான மொழிநடை நல்லகதைகளைச் சிறந்த கதைகளாக்குகிறது. ஆனால் எந்த வசீகரமும், மோசமான கதைகளை நல்ல கதைகளாக்க முடிவதில்லை.
“நான் சிவந்த வெட்டுகல் பாவியிருந்த சாலையில் குதிரையின் குளம்புகள் நிதானமாக தாளமிட நடந்தேன். எனக்குப் பின்னால் குதிரையின் வாலின் சுழலல் எனக்கே ஒரு சிறிய சிறகு முளைத்ததுபோல உணரச்செய்தது. சுண்ணாம்பு பூசப்பட்ட சுவர்களின் மேல் மழையில் கருகிய ஓலைக்கூரை சரிந்து இறங்கி வந்து தாய்க்கோழி முட்டையை அடைகாப்பதுபோல மூடியிருந்தது”
வழக்கமாகக் கதைகளின் நடுவில் வரும், இவரது இலக்கியச்சுழிகள் இதிலும் இருக்கின்றன. “துருக்கியர் இந்துக் கோயில்களின் மூலவர் சிலைகள் உட்பட வெடிக்க வைத்தார்கள்”. “கோபுண்யம் நாடாள வைக்கும்.” ஆனால் அதை எல்லாம் புறந்தள்ளும் கற்பனைவளம் நாவல் வாசிப்பின்பத்தைத் தவறாது வழங்கும்.
குறிப்பாக கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் இருந்த அம்மனை அனுப்ப, அவர்கள் செய்யும் முடிவு. அடுத்தது பிறந்த வீட்டுப்பெண் ஏதாவது ஒரு நகையைப் பிறந்த வீட்டில் விட்டுச் செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையைச் சுற்றி வரும் நிகழ்வு.
ஸ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா இதே போன்ற கதைக்களத்தில் கொஞ்சம் விரிவான நாவல். குமரித்துறை நாவல் முழுக்க மங்கலம்
என்று எழுதியிருக்கிறார். அது உண்மை.
“அழகும் நிறைவும் கூடியது. அவ்வகையில் இன்னொரு நவீனநாவல் தமிழில் இல்லை என நினைக்கிறேன்” என்றிருக்கிறார். அது தான் எனக்குப் புரியவில்லை. ஜெயமோகன் சுயஉழைப்பையும், ஆய்வையும் செய்து நாவல் எழுதினால், இந்த மொழிநடைக்கும், கற்பனை வளத்திற்கும் நல்ல நாவலாக வரும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.
//“அழகும் நிறைவும் கூடியது. அவ்வகையில் இன்னொரு நவீனநாவல் தமிழில் இல்லை என நினைக்கிறேன்” என்றிருக்கிறார். அது தான் எனக்குப் புரியவில்லை.//
ஒன்றை செய்யலாம் நீங்கள். அழகும் நிறைவும் கூடிய வேறொரு நவீன நாவலை நீங்கள் வாசித்திருந்தால் முன்வைக்கலாம். ஆசிரியர் சொல்வது தவறு சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள் என சொல்லலாம்.
இல்லை என்றால் யாராவது இதற்கு பதில் அளிக்கிறார்களா என்று காத்திருக்கலாம்.
LikeLike