ஆசிரியர் குறிப்பு:
செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். இருபத்தொன்பதாம் வயதில் இருந்து சென்னையில் வசித்தவர். A writer’s writer. அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அதிகபட்சமாக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார். ஞானபீட விருதை எப்போதோ பெற்றிருக்க வேண்டியவர். தமிழில் மட்டும் தான் இது போல் அநீதிகள் நடக்கும்.
இந்த நூல் வெளியான போது படித்தது. அதற்குள் முப்பத்து நான்கு வருடங்கள் முடிந்து விட்டன. வாழ்க்கை, பள்ளத்தை நோக்கி ஓடும் பந்தைப்போல் வேகமெடுத்து
ஓடுகிறது. 1987க்குப்பிறகு இரண்டாம் பதிப்பு வந்ததா தெரியவில்லை, இந்தப்பிரதி காலச்சுவடின் முதல்பதிப்பு.
கதையோ, கட்டுரையோ அசோகமித்திரனின் எழுத்து நுட்பமானது. க.நா.சு பற்றிய கட்டுரையில் சொல்கிறார் “ஜனரஞ்சகத் தன்மையே இலக்கியநயமாக என்றென்றும் நியதியாகிவிடும் தமிழ் எழுத்துத்துறையில் என்று மலைப்பூட்டிய நாளில்….” இன்னொரு இடத்தில் சொல்கிறார் ” இளைஞர்கள் படிப்பை முடிக்காத நிலையில் சிறுபத்திரிகைகளிடம் ஈர்க்கப்படுவது குறித்து எனக்கு கவலை உண்டு. பெருவாரிப் பத்திரிகைகளை நாடிப் போகிறவர்கள் இருபது வயதானாலும் சரி, அறுபது வயதானாலும் சரி, லௌகீக விசயங்களில் சமர்த்தர்களாக இருக்கிறார்கள்”.
ஒரு வரியில் அதிகபட்ச சலனங்களை ஏற்படுத்தி விட்டு எளிதாக அடுத்த வரிக்குக் கடப்பது அசோகமித்திரன் அடிக்கடி செய்வது. ” தி.ஜானகிராமனின் படைப்புகளில் முற்றிலும் தீயபாத்திரம் என்று ஒன்று கிடையாது”. ” தி.ஜானகிராமனின் மகோன்னத பாத்திரங்கள் பெண்கள் தான்”. “மரணம் எப்போது நேர்ந்தாலும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது”.
அசோகமித்திரன் இந்த நூலில் குறிப்பிட்ட எழுத்தாளர்களில் இயன் பிளெமிங் தவிர மீதி எல்லோருமே தவறாது படிக்க வேண்டியவர்கள். வில்லியம் பாக்னர் பற்றிய கட்டுரை எல்லாவற்றிலும் முக்கியமானது. அசோகமித்திரனின் இந்த நூல் முழுதும் தேடினாலும் அவருடைய மேதைமையைக் காட்டும் முயற்சியாக ஒரு வரியைக்கூட காண்பிக்க முடியாது. எல்லாக் கட்டுரைகளுமே கணிணி யுகத்திற்கு முந்தியவை, அதனால் படிக்காமல் இவ்வளவு நுணுக்கமாக எழுதியிருக்க முடியாது. குறைகளைச் சொல்வதைக்கூட வலி தெரியாமல் அடிக்கிறார்.
நூல்களில் சா.கந்தசாமியின் சாயாவனம் மற்றும் தொலைந்து போனவர்கள் குறித்து எழுதியிருக்கிறார். அவன் ஆனது நாவல் என் மனதுக்கு நெருங்கியது. ஆதவனின் காகிதமலர்களை ஒரே நாவல் எனினும் தமிழ் இலக்கியத்திற்கு கணிசமான சமர்ப்பணம் என்கிறார். இந்தக் கட்டுரையை எழுதும் போது அநேகமாக என் பெயர் ராமசேஷன் வந்திருக்க வாய்ப்பில்லை. பின்னாளில் என் பெயர் ராமசேஷன் ருஷ்ய மொழிக்கு மாற்றப்பட்டு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. தமிழில் சில ஆயிரங்கள் விற்றிருக்கலாம். சுஜாதாவின் எழுத்து அசலான ஆற்றல் கொண்ட ஒருவரின் எழுத்து என்பதை யாரும் மறுக்கமுடியாது என்கிறார். ஹெமிங்வேயின் நாவல்கள் காலப்போக்கில் அதன் Charmஐ இழந்தன, ஆனால் இன்றும் காலத்தை எதிர்த்து நிற்பவை அவருடைய சிறுகதைகள். சுஜாதாவின் சிறுகதைகளையும் அவ்வாறே என்று சொல்கிறார்.
அப்போது படித்ததில் இருந்தும் நானும் தொலைதூரம் பயணம் செய்திருக்கிறேன். இதிலுள்ள பல ஆங்கில எழுத்தாளர்களை அப்போது நான் படித்திருக்கவில்லை. இப்போது படிக்கையில் எவ்வளவு எளிமையாக அசோகமித்திரன் சொல்லிப் போகிறார் என்பது புலப்படுகிறது. தி.ஜா சொல்வது போல் பண்ணையாரின் மனைவி எண்ணெய் ஸ்நானத்திற்கு நகையை எல்லாம் கழட்டிவைத்து உட்கார்ந்திருப்பது போன்ற எளிமை.
தமிழ்கட்டுரைநூல்கள்
பிரதிக்கு :
காலச்சுவடு பதிப்பகம் 4652- 278525
முதல்பதிப்பு செப்டம்பர் 2021
விலை ரூ.175.