பாரதிராஜா படம் – மணி எம் கே மணி:
மணியின் வழக்கமான திரையுலகோடு தொடர்பு கொண்ட கதை. பெண்கள் மேல் அகஸ்மாத்தா கைபடுவது போல திரையுலக இரகசியங்கள் வெளிவருகின்றன. அங்கங்கே எடிட் செய்தது போன்ற கதை சொல்லலில் மினி உண்மையில் யாரென்று தெரியாததும், காதல் ஓவியம் பாடல் மறுபடி வருவதும் நன்றாக இருக்கின்றன.
கடுகண்ணாவைக்கு ஒரு பயணம்- எம்.டி.வாசுதேவன் நாயர்- தமிழில் ரிஷான் ஷெரீப்:
எம்.டி.வியின் கதைகளில் அநேகமாக சுயசரிதைக்கூறுகள் இருக்கும். இதிலும் இருக்கிறது. நிஜவாழ்க்கையிலும் இவரது அப்பாவின் மகள் இலங்கையைச் சேர்ந்த லீலா. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரு பரபரப்புடன் செல்லும் கதை. லீலாவைக் கூட்டி வந்ததும் பின் இலங்கைக்கே கூட்டிச் சென்றதும் தான் கதையின் வித்தாக இருந்திருக்கும். பார்வையாளராக இருந்தாலும் பாவத்தில் பங்கு உண்டு தானே. கதையைப் படித்ததும் சோகம் பரவுகிறது. நல்ல மொழிபெயர்ப்பு ரிஷான்.
பங்கு – பாவண்ணன்:
இந்தக் கதையில் செயற்கைத்தனம் நிறைய கலந்து வாசிப்பைத் தொந்தரவு செய்கிறது. வண்ணநிலவன் கிட்டத்தட்ட இதே கருவில் ”கயத்தார் ‘ என்ற கதையை எழுதியிருப்பார். இன்னும் நினைவில் இருக்கிறது.
தோள்கள் – கன்னடமூலம் சாந்தி கே அப்பண்ணா- தமிழில் கே.நல்லதம்பி:
கன்னடத்தில் புதிதுபுதிதாய் நல்ல எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். முதல் சிறுகதைத் தொகுப்பிலேயே யுவபுரஸ்கார் விருது வென்றவர் இவர். நிஜமும் நிழலும் இருவேறு உலகங்கள். ஒரு உலகத்தில் இருப்போர் இன்னொரு உலகத்தை அறிவதில்லை. எது நம்முடைய இருத்தலை பாதுகாக்க உதவுகிறதோ அது சரி. மற்றதெல்லாம் தவறு. இதை உணராதவர் சகலத்தையும் இழப்பார்கள். புதிய யுத்தியில் சொல்லப்பட்ட நல்ல கதை. நல்லதம்பியின் திருத்தமான மொழிபெயர்ப்பு, சிறந்த தேர்வு.
பள்ளத்தாக்கு – கவிதைக்காரன் இளங்கோ:
முதலில் இந்தக்கதையின் பல வரிகளை இவரது தமிழிலிருந்து நம் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியிருக்கிறது.
அடுத்தது மூன்றாம் உலகப்போருக்குப் பின்னான இடிபாடுகளில் இவர் வாசகருக்குக் கடத்த நினைக்கும் விசயத்தைத் தேடுவது. ஆனாலும் அந்தக் கதை எழுதிய தாள்கள் சூறாவளிக் காற்றில் பறக்கையில் எனக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
பண்டனம்- மித்ரா அழகுவேல்:
லாவண்யா சுந்தரராஜனின் புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை கதையின் முக்கால்பாகம் இந்தக் கதையில் வந்திருக்கிறது. அதிலிருக்கும் நேர்த்தி இதில் Missing.
பிரதிக்கு- 99628 14443
மற்றும் Commonfolks