ஆசிரியர் குறிப்பு:
மதுரையில் பிறந்து, வளர்ந்து, கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அங்கேயே வேலை பார்ப்பவர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சிறந்த வாசகர். இது சமீபத்தில் வெளியாகிய இவரது மதுரை நினைவுகள் குறித்த நூல்.
ஒரே ஊரில் வாழ்ந்து முடிப்பவர்களைக் கண்டால் எனக்கு சற்றே பொறாமை வரும். அலுவல் நிமித்தம் ஒவ்வொரு மூன்று வருடங்களிலும் புதிய ஊருக்குச் சென்றது, அனுபவச்சேர்க்கைக்கு உதவினாலும் கூட,
பழகிய தெருக்களில், பழைய நினைவுகளில் வலம் வருவது கொடுப்பினை, முப்பது வருடங்களுக்குப் பிறகு போனால், மதுரையே எனக்கு அந்நிய ஊர் போல் ஆகிப் போனது.
கல்விக்கு மதுரை ஒரு முக்கியமான ஊராக இருந்தது. கத்தோலிக்க மிஷனரிகள் ஏராளமான பள்ளிகளை, கல்லூரிகளை மதுரையில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்ததால், அர்ப்பணிப்புடன் கூடிய அற்புதமான ஆசிரியர்கள் பலருக்குக் கிடைத்திருக்கிறார்கள். இவர் படித்த சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தான் சில மாதங்கள் பாரதியார், தமிழாசிரியராக வேலைசெய்தார். பாரதியின் நடவடிக்கைகள் நிர்வாகத்துக்குப் பிடிக்காமல் அவர் விலக வேண்டியதாகியது. இன்றும் வாசலைப் பார்த்த படி, யாரும் பார்வைக் கோணத்தில் தவறவிடாது, பாரதி சிலையும் அதனடியில் “பாரதி தமிழ்பணியாற்றிய பெருமையுடைத்த…” என்ற வரியும் இருக்கின்றது.
இலக்கியம் மதுரைக்காரர்களின் ரசனைக்கு எடுத்துக்காட்டு. எத்தனை விதமான பரிந்துரைகள். Alberto Moravioவை ஒருவர் சொன்னால், James A. Michenerன் போலந்தை மற்றொருவர். கூகுள் பார்த்து சொல்பவர்கள் அல்லர் அவர்கள், முழுநூலைப் படித்துவிட்டு சிறுவன் என்று பாராது விவாதிப்பவர்கள். நவீன தமிழ் இலக்கியத்திற்கு R.P. ராஜநாயஹம். இவருக்கு வாசிப்புப் பசிக்கு முதல் ஆகாரம் ஜனதா மன்றத்தில் வாங்கிய புத்தகங்கள்.
வரிகள் கூட்டிச்செல்லும் தூரத்திற்கு எனனை ஒப்புவித்துப் பயணிப்பது எனக்கும் பிடிக்கும். சித்திரகலா ஸ்டூடியோ என்று நூலில் வந்தால், அங்கே அம்மா, அப்பா திருமணத்திற்குப்பின் எடுத்துக் கொண்ட முதல் போட்டோ. அது குறித்து அம்மா சொன்ன தகவல்கள் என்று ஒன்றைத் தொற்றி ஒன்று என்று சென்றதாலேயே இருநூறு பக்கங்கள் கொண்ட இந்த சிறிய புத்தகம் வாசிக்க அதிகநேரம் எடுத்துக் கொண்டது.
சினிமாவும், சினிமாப்பாடல்களும் மதுரை மக்களின் வாழ்வில் ஒரு அங்கம். கனவிலும் நினைவிலும் இணைபிரியாத பாடலை ஆரம்பிப்பது P A பெரியநாயகி என்று நான் சொன்னால் எதிரிருப்பவர் ஆச்சரியப்படுவார்கள். எத்தனையோ பாடல்களின் வரிகள் நாற்பது வருடங்கள் கழிந்தும் இன்னும் மறக்காமல். கேஸட்டுகளில் பாடல்கள் பதிய பைத்தியமாக அலையாதவர் யார் அப்போது இருந்திருக்க முடியும். கேசட்டுகள் குறித்தே ஒரு அத்தியாயம் நூலில்.
சுப்பாராவின் மொழிநடை இயல்பும், சரளமும் நிறைந்தது. நல்ல வாசகருக்கே உரித்தான, வார்த்தைப்பஞ்சம் இல்லாது அதனதன் இடத்தில் வார்த்தைகள் வந்து அமர்வது. மதுரை மாநகரைப் பிடிக்காதவர்களுக்கும், ஒரு வருடம் படிப்பதற்கான புத்தகங்களைப் பரிந்துரை செய்திருக்கின்றார். அதற்காகவே நீங்கள் இந்த நூலைப் படிக்கலாம். நாடகம், சினிமா, இசை, ஆன்மீகம், நாட்டுப்புறப் பாடல்கள் என்று பல விசயங்கள், பல தகவல்கள் அடங்கிய நூல்.
சுப்பாராவின் இந்த நூலில் இரண்டு விசயங்களைப் பற்றி அவர் சொல்லி இருப்பது எல்லா வளரும் எழுத்தாளர்களும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை. முதலாவதாக, மதுரை என்ற மகாசமுத்திரத்தில் என் கைக்குக் கிடைத்தது இவ்வளவே என்ற விசயம் இவருக்குத் தெரிந்திருப்பது மட்டுமல்லாது குறிப்பிடவும் செய்திருக்கிறார். அது உண்மை. என் மதுரை வேறு. இனி நிஜத்தில் அணுகவே முடியாத, மனமேடையில் மட்டும் நடமாடும் பெண் போல ஆகிப்போனது மதுரை எனக்கு. போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனது. இரண்டாவது ஐம்பது வருடங்கள் வாழ்ந்த ஒரு நகரைப் பற்றி எழுத, எத்தனை தகவல்கள் சேகரிக்க வேண்டியதாகிறது, எத்தனை பேர் உதவ வேண்டியதாகிறது என்பதை நூலின் பின்குறிப்பில் படியுங்கள். இப்படித் தான் நல்ல நூல்களை எழுத முடியும், நாற்காலியை விட்டு நகராமல் பிருஷ்டவேர்வையை அவ்வப்போது துடைத்துக் கொண்டு அல்ல. மிக நன்றாக வந்திருக்கிறது இந்த நூல் சுப்பாராவ், பாராட்டுகளும், நன்றியும். .
தமிழ்கட்டுரைநூல்கள்
பிரதிக்கு:
சந்தியா பதிப்பகம்
முதல்பதிப்பு 2021
விலை ரூ 200.