ஜேம்ஸ் கேரளாவின் செங்கணச்சேரியில் பிறந்தவர். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி. இதுவரை ஏழு நாவல்களும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. கேரள சாகித்யஅகாதமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
மினிஸ்தி ஒரு IAS Officer. இந்தி, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து பிற மொழிக்கு மொழிபெயர்ப்பவர். கே.ஆர். மீராவின் The Poison of Love இவருடைய மொழிபெயர்ப்புகளில் முக்கியமான ஒன்று.
ஆசிரியரின் முன்னுரையில், இந்த நாவலுக்காக ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டதாகவும், பல மணிநேரங்கள் கல்லறையிலும், அங்கு பணிபுரிவோரிடமும் செலவு செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அது போலவே மொழிபெயர்ப்பாளரின் குறிப்பில் இந்த நாவலுக்காக, கிருத்துவ பழக்க வழக்கங்களை, சடங்குகளை புரிந்து கொள்ள ஏராளமான நேரத்தை செலவிட நேர்ந்ததாகக் கூறியிருக்கிறார்.
one man’s meat is another man’s poison. பேரிடர் காலத்தில், உயிர்பிழைத்தது பல மருத்துவமனைகளின் நிதிநிலைமை. சவப்பெட்டியைச் செய்பவனுக்கு வாழ்வாதாரம் அடுத்தவர்களின் சாவு. குறிப்பாக சவப்பெட்டியில் புதைக்கும் மதத்தினரின் சாவு. கும்பலாக அவர்கள் இறக்க நேரிட்டால் சவப்பெட்டி செய்பவரின் வீட்டில் விருந்து சாப்பிடும் அளவிற்கு கையில் பணநடமாட்டம் இருக்கும்.
நெய்யார் அணைக்கட்டுத் திட்டம் 1951ல் தொங்கிய போது, கன்னியாகுமரி வரை நீர் கொண்டு வருவதாகவே திட்டம் தீட்டப்பட்டது. 1956ல் மொழி அடிப்படையில் கன்னியாகுமரி தமிழ்நாடுடன் சேர்ந்ததும், கலியக்காவிளையுடன் கால்வாய் திட்டம் நிறுத்தப்படுகிறது. மொழிவாரி மாநிலங்கள் மனிதர்களின் குறுகிய இதயத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
சவப்பெட்டி செய்யும் ஹென்ட்ரியைச் சுற்றியே நகரும் கதை. கேரளாவின் ஒரு கிராமத்தில் நடைபெறும் கதை. நாவல் இரண்டு தளங்களில் விரைகிறது. முதலாவது மனிதனின் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற மூன்று விசயங்களில். இரண்டாவது, காலம்- இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்கள். Anti clock என்பது காலம் பின்னோக்கி நகர்வதைக் காட்டும் கடிகாரம்.
ஒவ்வொரு அத்தியாயமும் விவிலியத்தின் ஒரு Stanza வைச் சொல்லி ஆரம்பிக்கிறது. ஹென்ட்ரி ஒரு இயல்பான, சராசரி குணாதிசயங்கள் கொண்ட மனிதனல்ல. அவனது Complex character இந்த நாவலில் ஒரு சுவாரசியம். அடுத்தது கடவுளின் மீது அசையாத நம்பிக்கையும், தினமும் பைபிளைத் தவறாது படிக்கும் ஒருவனின் மனதில் அழிக்கமுடியாது ஒளிந்திருக்கும் வஞ்சம் மற்றொரு சுவாரசியம்.
ஆண்டியப்பனுக்கும் ஹென்ட்ரிக்கும் இருக்கும் தலைமுறைகள் தாண்டிய நட்பு, பண்டிட்டுக்கும் ஹென்ட்ரிக்கும் இடையேயான குரு சிஷ்ய நட்பு, ஹென்ட்ரி மற்றும் கிரேஸிக்கு இடையேயான பிணைப்பு என்ற மூன்றிலுமேயே ஹென்ட்ரி மனதைத் திறந்து பேசுவது இல்லை, மற்றவர்களே பேசுகிறார்கள். ஹென்ட்ரிக்கு அவன் மனைவியிடம் மட்டுமே தடையில்லாது பேசமுடிந்திருக்கும்.
தத்துவார்த்தம் இந்த நாவலில் ஆரம்பத்தில் இருந்தே வருகின்றது. இறப்பும், காலமும் ஆகிய இரண்டு மையப்புள்ளிகளில் தத்துவார்த்தம் சுழல்கிறது. அடுத்தது கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி உதயமாகுமுன்பே அவர்களது செயல்பாடுகள் ஒரு கதாபாத்திரத்தின் மூலம்
வந்து கொண்டே இருக்கிறது. கடிகாரம் ரிப்பேர் செய்யும் நூற்றுப் பன்னிரண்டு வயது பண்டிட் மூலம் சுபாஷ் சந்திரபோஸின் சுதந்திர முயற்சிகள் வருகின்றது. காதலும் முக்கியமான பங்கை நாவலில் வகிக்கிறது.
ஹென்ட்ரியின் மனைவி மீதான காதலும், கிரேஸியின் ஒருதலைக் காதலும், டேவிட்டின் ஷரி மீதான காதலும் நாவலின் போக்கை மாற்றும் காரணிகள். இறப்புக்குப்பின் என்ன என்பதையும் அங்கங்கே தொட்டுச் செல்லும் நாவல்.
மினிஸ்தியின் மொழிபெயர்ப்புகள் மலையாளத்திற்கு நெருக்கமாக நம்மைக் கொண்டு சேர்க்கும். இறுதிப்பட்டியலில் இடம்பெறத் தகுதி வாய்ந்த நாவல்.