நன்றி சமயவேல் சார்.

நன்றி தமிழ்வெளி. தொடர்புக்கு 9094005600

தமிழ்வெளி அக்டோபர் இதழில் வெளியான கட்டுரை இது. இதில் குறிப்பிடப்பட்ட இரண்டு புத்தகங்களுமே புக்கிகளின் இன்றைய தேதிக் கணிப்பில் முன்னணியில் இருப்பதில் அற்ப சந்தோஷம்.

எதிர்பார்ப்புகளைத் தகர்த்த இறுதிப்பட்டியல்;

புக்கர் அரைநூற்றாண்டாக ஆங்கிலத்தில் வெளியிடப்படும் நூல்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதாக கருதப்பட்டு வருகிறது. நீண்ட பட்டியலில் நோபல் பரிசை வென்ற Kazuo Ishiguro, புலிட்சர் விருதை வென்ற Richard Powers முதலியோர் இடம்பெற்றிருந்தார்கள். புக்கர் தேர்விற்கு Ishiguro நான்காவது முறையாகவும், Powers மூன்றாவது முறையாகவும் நீண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். அவர்கள் தங்களது நூலை தேர்வுக்கு அனுப்பியிருப்பது புக்கரின் மதிப்பை மேலும் அதிகரித்திருக்கிறது. பெரிதும் எதிர்பார்த்த Sally Rooney நீண்டபட்டியலில் இடம்பெறாதது ஒரு ஏமாற்றமே.

இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ அக்டோபர் 2020ல் இருந்து செப்டம்பர் 2021 வரை பிரசுரமான நூல்கள், புக்கர் பட்டியலுக்கு தகுதிவாய்ந்தவை ஆகின்றன. இந்தக் காரணத்தினாலேயே புக்கர் நூல்களின் தேர்வில் ஆங்கிலேயர் மற்றும் அமெரிக்க எழுத்தாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. புக்கர் இன்டர்னேஷனலைப் பொறுத்தவரை அனைத்து நூல்களுமே மொழிபெயர்ப்பு என்பதால் உலகம் முழுவதுமிருந்து பரவலாகப் படைப்புகள் வருகின்றன.

158 நூல்கள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் இருந்து நீண்ட பட்டியலுக்கு பதிமூன்று நூல்கள் தேர்வாகியிருந்தன. அதிலிருந்து ஆறு நூல்கள் கொண்ட இறுதிப்பட்டியலை புக்கர் தேர்வுக்குழு இவ்வருடம் செப்டம்பர் 14ல் வெளியிட்டது. நீண்ட பட்டியலுக்குத் தேர்வான ஐந்து பிரிட்டன் எழுத்தாளர்களில்,
Nadifa ஒருவர் மட்டுமே இறுதிப்பட்டியலுக்குள் நுழைந்திருக்கிறார். பெரிதும் எதிர்பார்த்த நோபல் பரிசு பெற்ற Ishiguro கடைசிப் பட்டியலில் இடம்பெறவில்லை. அமெரிக்க எழுத்தாளர்கள் மூவரும், இலங்கை எழுத்தாளர் ஒருவரும், தென்ஆப்பிரிக்கா எழுத்தாளர் ஒருவரும் இறுதிப்பட்டியலில் தேர்வான மீதம் ஐந்து பேர்.

இறுதிப்பட்டியலுக்குத் தேர்வான நூல்களின் கதைக்களங்களைப் பொறுத்தவரை வேறுபட்ட களங்கள் இம்முறையும். இலங்கையின் விடுதலைப்போராட்டத்தைத் தமிழரின் கோணத்தில் இருந்து சொல்லும் அருட்பிரகாசத்தின் நாவல். தென் ஆப்பிரிக்காவின் நிறவெறியையும், கறுப்பினத்தவர் வாழ்வின் மாற்றத்தையும் சொல்லும் நாவல், மற்றொன்று கடந்தகால வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்வது, பிறிதொன்று வரலாற்றுப்புனைவு. டிவிட்டர் பதிவுகள் போன்ற நடையில் ஒரு நாவல், நவீனஅறிவியலும் புனைவும் கலந்து ஒரு நாவல் என்று அனைத்துமே வித்தியாசமான கதைக்களங்கள். ஒவ்வொரு நாவலையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

  1. A Passage North- By Anuk Arudpragasam:

அருட்பிரகாசம் கொழும்பில் தமிழ் பெற்றோருக்குப் பிறந்தவர். சிங்கள ராணுவம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதை, குட்டிமணியின் கண்கள் மரணத்திற்குப்பின் தமிழ் ஈழத்தை பார்வையில்லாத ஒருவருக்குப் பார்வை அளித்துப் பார்க்கும் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவர் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டதைத் தெளிவாகக் கதையினூடே பதிவு செய்கிறார். புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற இந்த நூல் தொண்டை நெறிக்கப்பட்ட தமிழர் குரலை சத்தமாக உலகஅரங்கில் ஒலிக்க வைக்கிறது. கிருஷ்ணன் என்ற இருபத்தைந்து வயது இளைஞனைச் சுற்றிக் கதை நகர்கிறது. பாட்டிக்கும் பேரனுக்கும் இருக்கும் உறவும், இலங்கையில் வேறு நாடுகளுக்குப் பெயராது, தமிழன் என்ற அடையாளத்தோடு வாழ்பவரின் வாழ்க்கையும், உலகம் முழுதுமுள்ள எதைத் தேடுகிறோம் என்று அறியாத தீவிரத்தேடலும் இந்த நாவலின் முக்கிய அம்சங்கள். கிருஷ்ணனின்பாட்டிக்கு உதவியாளராக இருந்த ராணி வடகிழக்குப்பகுதி கிராமத்தில் இறந்த செய்தி வருகிறது. ஈமக்கிரியைக்கு கிருஷ்ணன் பயணத்தில் முன்னோக்கிச் செல்லும் போது அவன் நினைவுகள் பின்னோக்கிப் போகின்றன. The Stranger
Meursaultல் பாதி கிருஷ்ணன். எல்லாவற்றிலும் ஈடுபடுவதும் எதிலும் பற்றில்லாது விலகுவதும், மனதில் வெறுமை சூழ்ந்து இருப்பதும், தத்துவார்த்த சிந்தனைகளும் கலந்த கலவை கிருஷ்ணன். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மேகத்தைத் தூது விடும் பாடல், புத்தரின் சரிதை, குட்டிமணி கதை, பெண் கரும்புலிகள் கதை, பாலி மொழியில் எழுதப்பட்ட புத்தமதப் பெண்கள் எழுதிய கவிதைகள் என்று வேறுபட்ட விசயங்கள், நினைவுகளில் கலப்பதால் கதையுடன் இடரில்லாது கலக்கின்றன. இறப்புக்குப் பின் என்ன? மனம் தாளமுடியாத வலியை அனுபவிக்கும் பொழுது ஏன் உடல் அனுபவிக்கும் வேதனைகள் பெரிதாய் தோன்றுவதில்லை என்று தத்துவார்த்த விசயங்களும் கலந்து வருகின்றன. சிப்பத்தில் மொத்தமாகச் சேர்த்துக்கட்டிய பலவும் மேற்கத்திய வாசகர்களுக்குப் புது உலகத்தின் வாயில். அந்தக் காரணத்தினாலேயே இது நீண்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கக்கூடும்.

  1. The Promise – Damon Galgut

Damon தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்.
யூதர் இனம் மற்ற மதங்களைப் போலல்லாமல் தலைகீழ் வளர்ச்சி அடைந்துள்ளது. 1939ல் 17 மில்லியன் யூதமக்கள் தொகை 2015ல் 14 மில்லியனாகி இருக்கிறது. உலக யூத மக்கள் தொகையில் இஸ்ரேலில் 30% யூதமக்கள் தொகை இருக்கையில் அமெரிக்காவில் 51 சதவீத யூதர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் Protestant மற்றும் பெந்தேகோஸ்தே தவிர வேறு மதங்கள் தழைப்பது கடினம். எனவே யூத இனம் ஒரு இக்கட்டில் இருக்கிறது. இந்தப் பின்னணியில் ரச்செல் என்ற தென்ஆப்பிரிக்க வெள்ளையின கத்தோலிக் கிருத்துவரை மணந்த, மூன்று குழந்தைகள் கொண்ட யூதப்பெண்ணின் ஈமச்சடங்கில் வரும் குழப்பத்தை அணுக வேண்டும். வாக்குறுதி இந்த நாவலில் கணவன் மனைவிக்குக் கொடுத்தது. உண்மையில் இரண்டு வாக்குறுதிகள். முதலாவது ரச்செல் தன் தாய் மதத்திற்குத் திரும்புவது. அதன்படி ரச்செலின் ஈமச்சடங்கு யூதமுறைப்படி நடக்கும், அவள் அவளது உறவினர்களுடன் யூதக்கல்லறையில் புதைக்கப்படுவாள், அவளது கணவன் இறக்கும் போது தனியாகப் புதைக்கப்படுவான், Death do us part என்பது இங்கே Literal meaning ஆகிப் போகிறது. இரண்டாவது அவ்வளவுகாலம் ரச்செல் படுத்தபடுக்கையாக இருந்த போது பணிவிடை செய்த கறுப்பினப் பெண்ணுக்கு வீட்டை அவள் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். கணவன் தன் வாக்குறுதிகளை மறக்கிறான் அல்லது நினைவில் கொண்டு வர விரும்பவில்லை. ஒரே சிக்கல் என்னவென்றால் அவர்களது கடைசி மகள் வாக்குறுதிகள் கேட்கப்பட்டதையும், கொடுக்கப்பட்டதையும் கேட்டு விடுகிறாள். நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நாவல், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரைத் தாங்கிவருவதன் காரணம் கடைசியில் விளங்கும். ஒவ்வொரு பாகமும் பத்துவருடங்கள் கால இடைவெளியில் நடக்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் குடும்பத்தில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்கிறது, அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவில் கருப்பின மக்களின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைகிறது. தென் ஆப்பிரிக்கா குறித்த சித்திரமும் பின்னணியில் வந்து கொண்டே இருக்கிறது. எதுவுமே நாவலில் புனிதம் இல்லை, பாவமன்னிப்பு கொடுத்த பாதிரி அந்தப்பெண்ணின் உடலை வெறித்துப் பார்க்கிறார். குடும்பம் பற்றியோ, கருப்பினம் பற்றியோ அல்லது கொடுத்த வாக்குறுதி பற்றியோ இந்த நாவல் என இதைச் சுருக்க முடியாது. பல திசைகளில் பரவும் ஓளி போல பயணிக்கிறது. குறிப்பாக நான்கைந்து வாழ்க்கைகள் மூலம் பல புதிர்கள் கட்டவிழ்க்கப்படுகின்றன. மதங்கள் குறித்த கேள்விகளும் இருக்கின்றன. ஆழமும் அழுத்தமும் கொண்ட நாவல்.

  1. No One Is Talking About This – Patricia Lockwood

Patricia அமெரிக்க எழுத்தாளர். ஆங்கிலத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான Genres இருக்கும் போது Patricia இந்த நாவலில் புதிதாக ஒரு Genreஐ அறிமுகப்படுத்துகிறார். நாவலின் முதல் பகுதி ஆயிரக்கணக்கான Twitter கணக்குகளில் இருந்து எடுத்தாற்போல் Sex toysல் இருந்து விளையாட்டு, துணுக்குகள், Incest என்று ஏராளமான விசயங்களைப் பேசுகின்றன. இதுவே முதல் முழுநீள Internet genre novel.
மெய்நிகர் உலகம் பெரும்பாலோனோருக்கு நாளில் பெரும்பகுதியை முழுங்கி விடுகிறது. முப்பத்தாறு வயதான பெயர் சொல்லாத, எழுத்தாளர் ஒரு extremely online, Twitter celebrity. அவரது டிவிட்டுகள் மக்களிடையே பிரபலமாக அவர் பலரைச் சந்திக்கிறார். அவரது சிந்தனைகள் மெய்நகர் உலகில்….. அல்லது மெய்நிகர் உலகின் சிந்தனைகள் அவரது சிந்தனையாக மாற்றமெடுக்கிறது. எல்லைமீறி மெய்நிகர் உலகில் இருப்போருக்கு இரண்டு வாழ்க்கைகள். ஒன்று மெய்நிகர் மற்றது நிகர்வாழ்வு. நாவலின் இரண்டாவது பகுதியில் நிஜவாழ்வு இவரை அழைக்கிறது.
Scattered fragments ஆக இருக்கும் பத்திகளை தொடர்ந்து வாசிக்கையில் ஒரு வடிவம் கிடைத்து விடுகிறது. அடிப்படையில் இவர் கவிஞர் அதனால் சில வரிகளில் அழகியல் கலக்கிறது. இந்த நாவலில் உண்மையும் புனைவும் எது எங்கே என்று கண்டுபிடிக்க முடியாமல் இரண்டறக் கலந்திருக்கின்றன.
முதல் நாவலிலேயே பரிட்சார்த்த முயற்சியை எடுத்திருக்கிறார். இது எளிதாகப் படிக்கக் கூடிய நாவல் அல்ல. ஆரம்பத்தில் வாசகரை வெளியே தள்ளுவதற்கு இயன்றவரை முயற்சிக்கும். விடாப்பிடியாக உள் நுழைந்து விட்டால் இன்றைய நவீன உலகத்தின் காட்சிகள் கலைடயாஸ்கோப்பில் காண்பது போல் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம்.

  1. The Fortune Men – Nadifa Mohamed 9/13

Nadifa, Somalilandல் பிறந்தவர், Ishiguro ஐந்து வயதில் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்தது போல இவர் நான்கு வயதில் பிரிட்டனுக்குச் சென்றவர். 1950 களில் நடந்த உண்மையான சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட புனைவு இந்த நாவல். Mahmood என்ற Somaliaவில் இருந்து பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்த கறுப்பின மனிதன் மேல் சந்தேகத்தின் பேரில் கொலைக்குற்றம் சாட்டப்படுகிறது.
வெள்ளையினப் பெண்ணை மணந்து மூன்று குழந்தைகளைப் பெற்றவன். கறுப்பர் என்பது ஒரு குற்றம் என்றால் வெள்ளையினப் பெண்ணை மணந்தது இன்னொரு குற்றம். சந்தேகத்தில் மாட்டிக் கொண்டது அவனது துரதிருஷ்டம். 1981ல் பிறந்த பெண் இந்த நாவலாசிரியர்.
நாற்பதுகளிலும், ஐம்பதுகளிலுமான பிரிட்டனை மீண்டும் எழுத்தில் கொண்டு வருவது எளிதான விசயமேயில்லை.. காவல்துறை விசாரணை, வழக்கை முன்கொண்டு செல்லுதல், நீதிமன்ற வழக்கு விசாரணை என்று எல்லாமே கடந்த காலத்தில் நடப்பதற்கு நிறையவே ஆய்வுகள் செய்ய வேண்டியதாயிருந்திருக்கும்.
Mahmoodஐ சுற்றியே கதை நகர்கிறது. இன்றைய உலகத்திலேயே கறுப்பராய் இருப்பது கடினம், நூறு வருடங்களுக்கு முன் அவர்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டார்கள். இங்கே இந்தியாவில் ஆங்கிலேயர்கள் செய்ததையே, இந்த நாவலிலும் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார். ஆங்கிலேயரிடம் விசாரணை நடக்கும், முறையான Trial நடக்கும், சாட்சிகள் விசாரிக்கப்படுவார்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எல்லா வாய்ப்புகளும் நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் ஆனால் தீர்ப்பை மட்டும் அவர்கள் முன்பே முடிவு செய்து விடுவார்கள்.
Nadifa முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர். அவருடைய அப்பாவும் இந்த நாவலின் கதாநாயகனைப் போலவே Sailor. அதனால் ஒரு முஸ்லீமின் மதநம்பிக்கைகள், சிந்தனைகள், மற்ற மதங்களைப் பார்க்கும் பார்வை முதலியவற்றை ஆழமாகச் சொல்ல முடிகிறது. ஆப்பிரிக்க இலக்கியத்தின் புதுக்குரல்களும் இனிமையாகத்தான் இருக்கின்றன.

5.. Great Circle – Maggie Shipstead:

Maggie அமெரிக்க எழுத்தாளர். இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் (இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் மற்றும் நிகழ்காலம்)
நகரும் இரண்டு பெண்களின் கதை. Marian சிறு குழந்தையாக இருக்கும் போது, கப்பல் விபத்தில்இருந்து தப்பித்து மாமாவிடம் வளர்ந்தவள். பைலட் ஆகும் ஆசையை வளர்த்து அதை நிறைவேற்றிக் கொண்டவள். Hadley ஹாலிவுட் நடிகை. Marian வரலாறைத் திரைப்படமாக எடுக்கும் போது Marian ஆகவே ஒன்றி நடிப்பவள். இரண்டு பேருமே மாமாவிடம் வளர்ந்தவர்கள் என்பதைத் தாண்டி இருவரது லட்சியங்கள், சுதந்திரமாகச் செயல்படும் விருப்பு, மற்ற குணாதிசயங்கள் மட்டுமன்றி இருவர் வாழ்விலும் ஏற்படும் ஒரு பெரிய பிரச்சனையிலும் கூட ஒற்றுமை இருக்கிறது.
வரலாற்று புனைவு வகையைச் சேர்ந்தது இந்த நாவல். நாவலுக்காக மாதக் கணக்கில் விமானஓட்டிகளுடன் நேரம் செலவழித்து ஆய்வு மேற்கொண்டதாக ஆசிரியர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதே போலவே ஹாலிவுட் நடிகையின் வாழ்க்கையும், ஹாலிவுட்டின் பின்னணியும். Montana வில் இருந்து Seattle, Los Angels, Hawali, New Zealand இரண்டாம் உலகப்போர் காலத்திய இங்கிலாந்து என்று கதை உலகம் சுற்றுகிறது. Maggieம் சுற்றி இருக்கிறார். அண்டார்டிகாவிற்கு கப்பலில் சென்றால் நாவலில் தத்ரூபத்தைக் கொண்டு வரமுடியாது என்று விமானத்தில் சென்றிருக்கிறார். அடிப்படையில் Risk averse பெண்ணான Maggieன் இரு கதாநாயகிகளுமே வாழ்க்கையில் பெரிய Riskஐ எடுக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பெண்கள் வீட்டுவேலைக்கு என்று பரவலாகக் கருதப்பட்ட காலத்தில், தளைகளை உடைத்து வானில் பறந்த பெண்கள் இந்த நாவலுக்கு Inspiration ஆக இருந்திருக்கிறார்கள். தகவலுக்கான ஆய்வு, கள ஆய்வு இவற்றுடன் புனைவைக் கலந்து இந்த Modern epic உருவாக்கப்பட்டிருக்கிறது. Arctic பகுதிக்கு இரண்டுமுறைகளுக்கு மேல் பயணம், Historic Aircraftல் பயணம் உட்பட நாவலுக்காக ஏராளமான ஆய்வுகளும், பயணங்களும் செய்திருக்கிறார். Hadley வெறுமனே கதாபாத்திரம் ஏற்று நடிப்பதோடு மட்டுமல்லாமல், Marianன் வாழ்க்கையை முழுதாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள்.
ஆனால் யார் தான் யாரைத்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்? மரிக்கையில் யாருக்கும் தெரியாது கொண்டு செல்ல இரகசியங்கள் இல்லாதவர் யார்!

6.. Bewilderment: – Richard Powers

ரிச்சர்ட் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர். நவீன அறிவியலையும் புனைவையும் கலந்து எழுதுபவர். இதுவரை பன்னிரண்டு நாவல்களை எழுதியுள்ளார். புலிட்சர் பரிசை 2019ல் வென்றவர். புக்கர் பட்டியலுக்கு இவர் வருவது மூன்றாவது முறை. இந்த நாவல் புக்கரின் இறுதிப் பட்டியலுக்கும், National book awardன் முதல் பட்டியலுக்கும் ஒரே நேரத்தில் வந்துள்ளது. செயற்கை அறிவாற்றல் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த தாயின் உணர்வுகளை மகனுக்குக் கடத்தும் தொழில்நுட்பத்தை (brain mapping) வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. எளிதில் வன்முறையில் இறங்கும் சிறுவன், தாயின் பொறுமையான குணத்தைப் பெறுவதுடன், தாயின் பொழுது போக்கான, பறவைகள் குறித்த அறிவையும் பெறுகிறான். சுற்றுச்சூழலியல் குறித்த நாவல் இது. பல வனவிலங்குகள் இந்த பூமியை விட்டு இல்லாது போனாலும் அது குறித்த பிரக்ஞை இல்லாது தொடர்ந்து அழிக்கும் மனிதர்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டுவர சிறுவன் போராடுகிறான். பூமியில் 98 சதவீதத்தை ஆக்கிரமித்துக் கொண்ட மனிதர்கள், இரண்டு சதவீதம் இடம் மட்டுமே கொண்ட வனவிலங்குகளை அழிக்க நினைப்பது நியாயமில்லாதது என்று பொதுமக்கள் ஆதரவைக் கோருகிறான்.முந்நூறு பக்கத்திற்கு சற்றே குறைவான நாவலில், அப்பாவும் மகனும் பேசிக்கொள்வதே தொன்னூறு சதவீதம். அவர்கள் நினைவில் மனைவி/அம்மா வருகிறாள். ரிச்சர்ட் மிகத்திறமைசாலியான எழுத்தாளர். மனைவி மேல் ஏன் சந்தேகம் வருகிறது, அது உண்மையா இல்லையா என்பது போன்ற பகுதிகள் நுட்பமாகக் கடந்து செல்கின்றன. குழந்தையை வளர்க்க, பதில்சொல்ல முடியாது தந்தை திணறுவதுடன் பணியிடத்தில் எழும் பிரச்சனைகள், மகனால் பள்ளியில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற விசயங்களின் பின்னால் இந்த பூமிக்கு, சுற்றுச்சூழலுக்கு, விலங்குகளுக்கு நாம் இழைக்கும் தீங்குகளையும் சொல்லிக் கொண்டே செல்கிறது இந்த நாவல். மிகுந்த இலக்கியநுட்பத்துடன் எழுதப்பட்ட நாவல் இது.

புக்கர் விருதுகளின் இறுதிப்பட்டியலில் Ishiguro இல்லை. பெரிதும் எதிர்பார்த்த An Islandம் இறுதிப்பட்டியலில் இல்லை. இறுதிப்பட்டியல் அறிவிப்பில் நீதிபதிகள் கூறிய ” என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை விட எப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்பதில் தேர்வுக்கு அதிக கவனம் செலுத்தினோம், எனவே எந்த தேசத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை” என்ற கூற்று முக்கியமானது.

மற்ற விருதுகளுக்குள்ள அதே எதிர்மறை விமர்சனங்கள் இந்த விருதுக்கும் உண்டு. நோபல் பரிசு வென்ற ஒருவர் விருதை வெல்லாமல் புதிதாக வந்த ஒருவர் முதல் நூலுக்குப் பரிசு பெற்றால் எதிர்மறை விமர்சனங்கள் வந்தே தீரும். அதையும் தாண்டி புக்கர் விருதுகள் சமகால இலக்கியப் போக்கைக் கண்டுகொள்ள உதவும் முக்கியமான பட்டியல்களை அளிக்கின்றன. இந்த வருட புக்கர் நீண்ட பட்டியலின் ஐந்து பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர்களில் Nadifa மட்டுமே இறுதிப்பட்டியலுக்குத் தேர்வாகி இருக்கிறார். ஐந்து தேர்வாளர்களின் பின்னணியைப் பார்க்கையில், இஸ்லாமிய நம்பிக்கையை நாவல் முழுதும் பேசும், முஸ்லீம் எழுத்தாளர் தேர்வாகி இருப்பது பாரபட்சமற்ற தேர்வுக்கு ஒரு சான்று. புக்கர் மற்றும் புக்கர் இன்டர்னேஷனல் வழங்கும் இறுதிப்பட்டியலில் இடம்பெறும் தலா ஆறு புத்தகங்கள் சமகால உலக இலக்கியத்தின் கண்ணாடி.

நவம்பர் மூன்றாம் தேதி இவ்வருட விருதைப் பெறும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். பரிசை வெல்பவருக்கு தோராயமாக ஐம்பது லட்சத்து தொன்னூறாயிரம் ரூபாய்கள் இன்றைய இந்திய மதிப்பில் கிடைக்கும். அதை விட இந்தப் பட்டியலில் இடம் பெறும் எழுத்தாளர்கள், உலக வாசகர்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு வருவார்கள். ஐநூறு பிரதிகள் வெளியிட்டும் விற்காத Karen Jennings போன்றோரின் நாவல்கள் இனி லட்சங்களில் விற்கப்படும். புக்கர் பட்டியலில் வருவதில் இருக்கும் பெரிய நன்மையே ஒரு இரவில் கிடைக்கும் உலகளாவிய வாசகர் வட்டம் தான்.

தேர்வுக்குழு ஐவரில் ஒருவர் பிஷப்/கவிஞர். ஒருவர் ஆங்கிலேய நடிகை. ஒருவர் ஹார்வர்ட் பல்கலையில் வரலாறு கற்பிப்பவர். இவரது பெற்றோர் இருவருமே ஹார்வர்ட் பேராசிரியர்கள். ஒருவர் நைஜீரிய எழுத்தாளர். கடைசியாகப் பத்திரிகையாளர். கார்டியன் போன்ற பத்திரிகைகளில் எழுதும் பைனான்சியல் டைம்ஸ் இணையாசிரியர். மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள். கல்வியாளரான மாயா தேர்வுக்குழுத் தலைவர்.

தனிப்பட்ட வாசிப்பனுபவத்தில் Bewilderment பந்தயத்தில் சற்றே முன்னிலையிலும் அதைத் தொடர்ந்து Promise அடுத்த இடத்திலும் இருக்கின்றன. Patricia மற்றும் Maggie இருவரது புத்தகங்களுக்கு வாசகர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அருட்பிரகாசம் அதிகம் உலக இலக்கியத்தில் பதிவுசெய்யப்படாத தமிழரின் பார்வையில் இலங்கைப் போரை புனைவில் கொண்டு வந்திருக்கிறார். சமீபகால சரித்திரத்தில் நடந்த ஒரு இனப்படுகொலை என்பது நிச்சயம் புக்கர் தேர்வாளர்களின் பார்வையில் இந்த நூலுக்கு விசேஷகவனத்தை ஏற்படுத்தும். தேர்வுக்குழுவில் ஒருவரான Horatia Harrod அருட்பிரகாசத்தின் நாவல் ஒன்பது மாதங்களில் படித்த வேறு எந்த நாவலில் இருந்தும் வித்தியாசமானது என்று குறிப்பிட்டிருந்தார். நைப்பாலைச் சேர்க்காமல் இது வரை நான்கு இந்தியர்கள் மட்டுமே புக்கர் விருதைப் பெற்றவர்கள். அதிலும் அருந்ததிராய் ஒருவர் மட்டுமே முழுக்கவே இந்தியாவில் வாழும் புலம்பெயராத இந்தியர். அருட்பிரகாசம் இந்த விருதைப் பெற்றால் புக்கர் விருதைப் பெறும் முதல் தமிழர் ஆகிறார். இந்தியாவில் வெளியிடப்படும் நூல்கள், குறைந்தபட்சப் பிரதிகளேனும் இங்கிலாந்தில் வெளியிடப்பட வேண்டும். உலகளாவிய போட்டி நம்முடைய எழுத்தை மெருகேற்ற உதவுவது மட்டுமன்றி, திறமைசாலியான எழுத்தாளர்களுக்கு உலகச்சந்தையை உருவாக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s