முகுந்தன் மலையாள நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவருடைய பதினேழு நாவல்களும், பதிமூன்று சிறுகதைத் தொகுப்புகளும் ஏற்கனவே வெளிவந்தவை. சென்ற வருடத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல் JCB இறுதிப்பட்டியலில் வந்த ஐந்து நூல்களில் ஒன்று.

டெல்லி நகரைக் குறித்து City of Djinns போன்ற ஏராளமான நூல்கள் வெளி வந்துள்ளன. இரத்தம் உலர்வதற்குள் புது இரத்தம் சிந்திய பூமி அது. சபிக்கப்பட்ட நகர் என்றும் சொல்வார்கள். ஆனால் டெல்லியில் வாழ்ந்தோருக்கு அது சொர்க்கம். சீனா படையெடுத்து அஸ்ஸாமுக்குள் நுழைகையில் நாவல் ஆரம்பிக்கிறது. செய்தியைக் கேள்விப்பட்ட கம்யூனிஸ்ட் ஒருவர் மாரடைப்பால் இறக்கிறார். நேரு, கிருஷ்ணமேனன் எல்லோரும் துரோகத்தின் வலியைத் தாங்க முடியாது துடித்த நேரமது.

பிழைப்பைத் தேடி சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கே பெரும்பாலோனோர் செல்லும் காலம் அது.
இன்றைய தேதியிலும் கூடப் பணமில்லாது
டெல்லியில் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மலையாளிகள் அது குறித்துப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. எல்லா இடங்களும் அவர்களுக்குச் சொந்த ஊரே. டெல்லியில் குடியேறிய மலையாளக் குடும்பங்களின் வாழ்க்கை அறுபதுகளில் இருந்து ஆரம்பிக்கும் நாவல் இது.

வறுமை இந்த நாவலில் ஒரு முக்கிய அம்சம் குழந்தைகளின் உணவிற்கு, மார்க்கெட் முடியும் நேரத்தில் சிதறிக்கிடக்கும் பாதி சிதைந்த காய்கறிகளை எடுத்துச் செல்லும் அளவிற்கு வறுமை. நாவலில் வரும் மலையாளக் குடும்பங்கள் எல்லோருமே விளிம்புநிலையில், என்றாவது விடியும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்துபவர்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின் இங்கிலாந்து திவால் ஆன தேசம் ஆனது. அவர்கள் கொள்ளையடிக்க இந்தியாவில் மீதம் ஏதுமில்லை. பஞ்சம் தன் விஸ்வரூபம் எடுக்கையில் சுதந்திரம் கிடைக்கிறது.

பங்களாதேஷ் விசயத்தில் இந்தியா எடுத்த முடிவிற்கு, அகதிகள் லட்சக்கணக்கில் தலைநகருக்குப் புகுவதைத் தடுக்க முடியவில்லை. இன்றைக்கும் Illegal immigrants பங்களாதேஷிலிருந்து வந்து டெல்லியில் லட்சக்கணக்கில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியாவில் முஸ்லீமாக இருப்பது தென் மாநிலங்களில் ஓரளவு பரவாயில்லை. ஹைதராபாத், நிஜாமாபாத் போன்ற பகுதிகளில் அவர்களது எண்ணிக்கையினால் Dominate செய்கிறார்கள். காஷ்மீரில் பண்டிட் குடும்பங்களை அநேகமாக நாடு கடத்தியாயிற்று. ஆனால் நாட்டின் பிற பகுதிகளில், குறிப்பாக டில்லி, குஜராத் போன்ற இடங்களில் அவர்கள் ஒரு இனம்புரியாத பயத்துடன், Second citizen treatmentsஐப் பொறுத்துக் கொண்டு வாழ வேண்டியதாகிறது. நாவலின் களம் டெல்லி என்பதால் முஸ்லீம்கள் அடிக்கடி தாக்கப்படுகிறார்கள் அல்லது அவமானத்தை சந்திக்கிறார்கள்.

சகாதேவன் என்ற பிரதான கதாபாத்திரத்தைச் சுற்றி மலையாளக் குடும்பங்களின் கதை நகர்கிறது. அத்துடன் டெல்லியின் கதையும். 1959ல் இருபது வயது நிரம்பாமல் வருபவன் முதியவனாகும் வரை டெல்லியில் எத்தனையோ நிகழ்கிறது.
அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது, அதனைத் தொடர்ந்து வலுக்கட்டாயக் கருத்தடைகள், பலர் நிரந்தரமாகக் காணாமல் போகுதல், குடியிருப்புகளை அகற்றுதல் என்று கறைபடிந்த நாட்கள்.
சொந்தப் பாதுகாவலர்களால் இந்திரா காந்தி கொலை செய்யப்படுகிறார். டெல்லியில் கலவரத்தில் பல சீக்கியர்கள் உயிரையும், உடைமையையும் இழக்கிறார்கள். மறதி ஒரு மாமருந்து, எல்லோருக்கும்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமே எளிதாக உயிர் கொடுத்திருக்கிறார் முகுந்தன். குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்கள். கதையில் அதிகம் வராத லலிதாவை எடுத்துக் கொள்வோம். விரக்தி, கோபம், வெறுப்பு என்ற எல்லா உணர்ச்சிகளுமே கணவன் அவளை நம்பியே வாழவேண்டும் என்றாகும் போது மாறிவிடுகிறது. லலிதாவின் மனத்தை எளிதாக நம்மால் உணரமுடிகிறது. போலவே எல்லாக் கதாபாத்திரங்களுமே. சகாதேவனின் பார்வையில் இல்லாது வேறுயாரை எடுத்தாலும், அவர்களின் கதை நாவலாக விரியும். 536 பக்கங்களில் இந்த நாவல் பல கதைகளின் தொகுப்பு. வார்த்தை விரயம் இல்லாமல் அனாயாசமாய் கடந்து செல்கிறார் முகுந்தன். ஐம்பது வயதைக் கடந்தவனைப் பற்றி சொல்கிறார் “He has visited so many places, except the body of a woman”.
பலர் கதைகள், அரசியல், வரலாறு கலந்தும் நாவல் கட்டுக்கோப்பை இழக்கவேயில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் Competence ஒரு நாவலுக்கு எவ்வளவு அவசியம் என்பதை இதைப் படித்தால் தெரியும். தமிழுக்கு வருமாயின் ஆங்கிலத்தில் படிக்காதவர்கள், ஒரு நல்ல நாவலைப் படிக்கும் வாய்ப்பு இருக்கிறது. டெல்லியில் Embassyல் வேலைபார்த்த முகுந்தன், தான் பார்த்த டெல்லி வாழ்க்கையை மலையாளக் குடும்பங்களின் வாயிலாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் இது மலையாளிகளுக்கு மட்டுமான கதையல்ல, ஒருவகையில் நம் எல்லோருடையதும்.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s