ஷபீர் காஷ்மீரைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர். இவருடைய முதல் நாவலான இது JCB பரிசின் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

காஷ்மீரின் கதையை அங்கிருக்கும் எழுத்தாளர் ஒருவர் சொல்வதே சரியாக இருக்கும். தொண்ணூறுகளின் காஷ்மீரின் கதை இது. காதல், இழப்பு, விருப்பு, நம்பிக்கை, நட்பு, துரோகம், அடையாளம், வன்முறை என்ற பலவும் சேர்ந்து வருகின்றன.

Non Linear முறையில் சொல்லப்படும் கதை இது. நான்கு கதைகளை ஒருவரே சொல்வதாகக் காட்டப்பட்டாலும், நான்கு பேரின் கோணத்தில் கதை நகர்வதால் நான்கு கதைசொல்லிகள். ஒரே கதையில் பார்வைகள் மாறும் போது கூறியதுகூறல் தவிர்க்க முடியாது போகிறது.

இராணுவம் போராளிகளை அழிக்க நிரந்தரமாக தங்குமிடத்தை அமைக்கிறது. யாருமே கேள்வி கேட்க முடியாத நிலையில் ராணுவம் இருப்பதால் Excesses இருந்தே தீரும். ராணுவம் ஆயுதங்களை மட்டும் நம்பாமல் Brotherhood எனப்படும் Pro government militantsஐ ஊக்குவிக்கிறது. இத்துடன் பல போராளி அமைப்புகள் காஷ்மீரின் சுதந்திரம் வேண்டி. இதனிடையே எளிதில் உணர்ச்சி வசப்பட்டுப் போராட்டத்தில் இறங்கும் பொதுமக்கள். இவர்கள் எல்லோரின் கதையையும் ஒரே கதையாகச் சொல்லியிருக்கிறார். இடையில் ஒரு முக்கோணக்காதல் கதை.

Brothethood பணக்காரர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகிறது. அதைச் சேர்ந்த ஒருவன் தன் சொந்தப்பகையைத் தீர்க்க மாமனிடமே மீண்டும் மீண்டும் செல்கிறான். ஒருமுறை இவனோடு வருபவன், இவனது மாமன்மகளை (சிறுவயது முதல் ஒருதலைக்காதல்) பாலியல் வல்லுறவுக்குள்ளாக்குகிறான். கொதித்து நீதி கேட்க தெருவில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐம்பதுக்கும் மேல் பலியாகிறார்கள். நாவலில் வரும் நிகழ்வு இது, கற்பனையாக இருக்க வாய்ப்பில்லை.

பாகிஸ்தான் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சியும், ஆயுதங்களும் கொடுத்து உதவுகிறது. எல்லை தாண்டி வரும் பாகிஸ்தானியர்கள் போராளிக்குழுக்களில் நுழைந்து விடுகிறார்கள். காஷ்மீரிகளின் நோக்கம் Azadi மட்டுமே ஆனால் போராளிகளுடன் கலந்த பாகிஸ்தானியரின் நோக்கம் வேறு. அதனாலேயே இரத்தம் சிந்துவது நிற்பதேயில்லை. காஷ்மீர் மக்களிடமும் இந்திய எதிர்ப்பு என்பது பரவலாக இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட சிலரைத் தவிர வேறு யாருக்கும் இந்தியர் என்ற உணர்வு இல்லை. நாவலின் நடுவில் ஒரு கேப்டன் கேட்கும், “எதற்காகப் போராடுகிறேன், முடிவில்லாத இந்தப் போராட்டத்தில் நான் அடையப்போவது என்ன” என்ற கேள்வி தான் காஷ்மீரைப் பொறுத்தவரை எப்போதும் கேட்கப்படும் கேள்வியாக இருக்கும்.

ஷபீரின் மொழிநடையும், கதை சொல்லும் யுத்தியும் இது முதல்நாவல் என்பதை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. நாவலில் பெண்கள் வருகிறார்கள், போகிறார்கள், பெண் கதாபாத்திரங்கள் யாருமே முழுஉருவம் பெறவில்லை. நாவலின் போராட்டங்களில் எதிலும் ஒரு பெண் கூட இடம் பெறவில்லை. ஓரிடத்தில் இந்துப்பெண்ணைக் காதலித்து உடன் வாழ்பவரை, அந்தப்பெண் மதம் மாறாததால் பாவம் செய்கிறார் என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஷபீரும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. காதல் என்பது வேறு, மதம் என்பது வேறு என்ற சாதாரண விசயம் இவர்களுக்குப் புலப்பட இன்னும் எவ்வளவு காலங்கள் ஆகுமோ தெரியவில்லை.

ஷபீர் Gogol, Kafka, Joyce, Borges, Tolkien போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாசகர். அடிப்படையில் கவிஞர். அதனாலேயே உரைநடையிலும் மொழிநடை
வசீகரமாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் Contemporary Fiction என்பதே அருகிவரும் காலத்தில் இது போன்ற எந்த சார்புநிலையுமில்லாத Pure Contemporary நாவல்கள் நம்பிக்கையூட்டுகின்றன.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s